Thursday, May 6, 2010

வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த வீட்டிற்கு வேறொருவர் உரிமை கோரல்












தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீட்டிற்கு நபரொருவர் உரிமை கோரியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

வவுனியா அகதி முகாமில் தங்கியிருக்கும் நபரொருவரே குறித்த வீட்டுக்கு உரிமை கோரியிருப்பதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி, விஸ்வமடு தர்மபுரத்தில் அமைந்துள்ள இவ்வீடு தமது உடமை எனவும், இவ்வீட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் எட்டு வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக சுவீகரித்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஏக்கரில் அமைந்துள்ள இவ்வீட்டைச் சுற்றி பாரிய பதுங்கு குழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீடு குறித்த நபருக்கு சொந்தமானது என பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது.

தற்போது படைத்தரப்பின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மெய்ப்பாதுகாவலர், இவ்வீடு பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யப்பட்டது எனவும், பலவந்தமாகக் கைப்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு சொத்துக்களை விற்பனை செய்வது சட்டத்திற்கு முரணானதென குறிப்பிட்டுள்ள படைத்தரப்பினர், குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வீட்டுக்கு அண்மித்த பகுதிகளில் 60 விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள படைத்தரப்பினர், தற்போதும் இவ்வீட்டை தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்துள்ளனர்.

இதேவேளை, பொதுமக்களது வீடுகள் விரைவில் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என சிறிலங்காப் படைத்தரப்பினர் அறிவித்துள்ளனர்.

நன்றி : பொங்குதமிழ்

No comments:

Post a Comment