Thursday, May 6, 2010
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தனது 38-வது அகவையைத் தொட்டது
தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களை தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த மே 5-ம் தேதியன்று 38-வது அகவையில் கால் பதித்தது. 1972-ம் ஆண்டு மே 5-ம் தேதிதான், புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது.
தமிழர்களிற்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதரணமாகத் திகழ்ந்தவர்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.
அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்ன பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியாக தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்த தமிழீழ விடுலைப்புலிகளின் போராட்ட வரலாற்றின் பின்னடைவிற்கான காரணகர்த்தாவாக பேச்சுவார்த்தைக் காலத்திலான சர்வதேச மயப்படுத்தலும். உள்ளக சதிகளும் இடம்பெற்றிருந்தன.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
Labels:
அரசியல்,
அனுபவம்,
ஈழம்,
விடுதலைப்புலிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment