Friday, April 30, 2010

‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் குடும்பத்துடன் தலைமறைவு..!

விஜய் டிவியில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராம்ஜி கடந்த ஒரு மாத காலமாக குடும்பத்துடன் தலைமறைவாக இருந்து வருவதாக டிவி வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.


‘டைம் பிரேம்ஸ்’ என்ற கம்பெனியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சித் தொடர்களை விஜய் தொலைக்காட்சியில் நடத்தி வந்தவர் ராம்ஜி. முதல் முறையாக ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது அதனை இயக்கம் செய்தவரும் இவரே.

அதற்குப் பின் டி.ராஜேந்திரை வைத்து ஒரு டாக் ஷோ.. ‘குற்றம் – நடந்தது என்ன..?’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘கனா காணும் காலங்கள்’, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘யாமிருக்க பயமேன்’ என்று பல தொடர்களை விஜய் டிவிக்காக தயாரித்தவர் இவர். ஜீ தமிழ்த் தொலைக்காட்சிக்காக ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற தொடரையும் தயாரித்தார்.

சமீப காலமாக இவர் பெரும் கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வந்ததாகச் சொல்கிறார்கள். சீரியல்களில் பணியாற்றிய டெக்னீஷியன்கள், தனது அலுவலக ஊழியர்கள் என்று பலருக்கும் சம்பளப் பாக்கியும் வைத்திருக்கிறார். ஏற்கெனவே ஒளிபரப்பாகி முடிந்த சீரியல்களில் நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கும்கூட இன்னமும் பண பாக்கி இருக்கிறதாம்.

ராம்ஜி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘கதையல்ல நிஜம்-இரண்டாம் பாக’த்தையும் தயாரித்து இயக்கி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதலே தனது இரண்டு அலுவலகங்களையும் இழுத்து மூடிவிட்டு வீட்டையும் பூட்டிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். சென்ற மாத சம்பளத்தைக்கூட தனது அலுவலக ஊழியர்களுக்குக் கொடுக்காததால் அவர்களும் தற்போது பரிதவிப்பில் உள்ளார்கள்.

திடுதிப்பென்று இவர் எடுத்த இந்த முடிவினால் ஆடிப் போன விஜய் டிவி இவருடைய தயாரிப்பில் இருந்த ‘யாமிருக்க பயமேன்’, ‘கதையல்ல நிஜம்’ தொடர்களை ஆன்ட்டனி என்பவரிடம் தயாரிக்கும்படி தள்ளி விட்டிருக்கிறதாம்.

வட்டித் தொகையுடன் சேர்த்து கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கும் மேல் கடனாளியாக இருக்கும் ராம்ஜியிடம் கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது “பணத்தைத் திருப்பிக் கேட்டால், தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பதிலுக்கு அவர்களையே மிரட்டினாராம்..!

தற்போது ராம்ஜி சொந்த ஊருக்கே போய்விட்டதாகச் சொல்லப்பட்டாலும் சென்னையில் தனது மனைவியுடன் பல்வேறு ஹோட்டல்களில் மாறி, மாறி தங்கி வருவதாக அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தொடர்ச்சியாக பத்தாண்டுகளாக சீரியல்களைத் தொடர்ந்து தயாரித்து வந்த ராம்ஜிக்கு, இந்த அளவு கடன் தொகை எப்படி வந்தது என்பது தெரியாமல் முழிக்கிறது தொலைக்காட்சி வட்டாரம்..!

இவருடைய கதையை வைத்தே `கதையல்ல நிஜம்`  நிகழ்ச்சியில் ஒரு வார எபிசோட் எடுக்கலாம் போலிருக்கிறது..!

Thursday, April 29, 2010

குஷ்பூ வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முழு விபரம்..!

நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வ குற்றம் அல்ல” என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.



அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பு முழு விவரம் வருமாறு-

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

நடிகை குஷ்பு வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தன.

தீர்ப்பில் இந்த தகவலை வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்துப் இந்த கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

பார்வதியம்மாள் விவகாரம் – தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்..! மத்திய அரசு கைவிரிப்பு..!














பார்வதியம்மாளை தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பியனுப்பிய கடிதம் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நிலையைப் பொறுத்தே அவருக்கான அனுமதி விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவச் சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

“அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.  விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் தாயகம் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறலாகும். இதனால் இந்திய மத்திய அரசு, பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து தனது சொந்தச் செலவில் சிகிச்சையளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி வாதாடுகையில், “பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை மற்றும் தாய் பார்வதி அம்மாள் ஆகியோரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயே பார்வதி அம்மாள் அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய தமிழக அரசு அந்தக் கடிதத்தினை திரும்பப் பெறும்வரையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசினால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2003-ம் ஆண்டு எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை நாளைக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு














தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது.

இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும். முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.

சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது. மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்` என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.comஎன்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!

தோழமையுடன்,

க.அருணபாரதி

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழர் இயக்கம்

தேசியத் தலைவரின் அண்ணன் மனோகரன் குமுதம் ரிப்போட்டருக்கு வழங்கிய பேட்டி














தமிழீழ தேசியத் தலைவராகப் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவரது அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரனை? ‘பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்!’ என்ற உறுதிப்பாட்டுடன் இத்தனை காலமும் இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்து வந்தவர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அந்த நாட்டில் இருந்து செயல்படும் ‘அலைகள்’ இணையதளத்தின் 10-வது ஆண்டுவிழாவில் முதன்முதலாக மேடையேறியதுடன், அலைகள் இணையதளத்துக்கு நீண்டதொரு பேட்டியும் அளித்திருந்தார்.

வேலுப்பிள்ளை மனோகரனிடம் பேட்டி பெறும் முதல் தமிழக ஊடகமாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் நாம் பேட்டி காண முயன்றோம். சி.செ.துரை என்பவர் உதவியுடன் அதில் வெற்றியும் கண்டோம். இனி நமது கேள்விகளும், அதற்கு வேலுப்பிள்ளை மனோகரன் அளித்த பதில்களும்….

டென்மார்க் நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம், பிள்ளைகள் பற்றிச் சொல்ல முடியுமா?

‘‘நான் ஈழத்தில் வாழ்ந்தபோது சரக்குக் கப்பலில் மாலுமியாக (போசன்) பணி புரிந்தேன். உலகின் பல நாடுகளுக்கும் எமது கப்பல் போகும். இப்போது டென்மார்க்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்தபோது கோழி வளர்ப்பில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. இப்போது மனைவி மற்றும் இரு மகன்களுடன் டென்மார்க்கில் உள்ள வைலை என்ற அமைதியான நகரில் எளிமையாக வாழ்ந்து வருகிறேன்.’’

மருத்துவத்திற்காக மலேசியாவில் இருந்து முறையான விசா பெற்று தமிழகம் வந்த உங்கள் தாயார் பார்வதி அம்மாள், திருப்பி அனுப்பப் பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘ ‘அலைகள்’ பத்தாண்டு விழாவிற்கு நான் தலைமை தாங்கப் போனபோதுதான், தாயார் திருப்பியனுப்பப்பட்ட செய்தி எனக்குக் கிடைத்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. விழாவிற்குப் போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். அந்த நேரம் மலேசியா அரசு, தாயாருக்கு ஒரு மாத விசா நீட்டித்து வழங்கிவிட் டது என்ற செய்தி கிடைத்ததும் ஓரளவு ஆறுதலடைந்தேன்.

விசாவை தவறுதலாக வழங்குவதும் திருப்பி அனுப்புவதும் சாதாரண நிலையில் உள்ள ஒருவருக்குப் பொருந்தலாம். ஆனால், எனது தாயாரின் நிலையை எண்ணிப் பாரு ங்கள். தமது எதிரிக்குக்கூட இந்த அவல நிலை வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதைவிட என்ன சொல்ல..’’

தங்கள் தாயார் பார்வதி அம்மாள் பற்றிய தகவல்களை தமிழகத் தலைவர்கள் யாராவது உங்களிடம் பகிர்ந்து கொண்டார்களா?

‘‘இல்லை! நான் எனது தம்பியின் பெயரைப் பயன்படுத்தி வாழ்வில் எதையும் செய்தது கிடையாது. அப்படியான செயல்களை தம்பி விரும்பவும் மாட்டார். இதனால் அரசியல் தலைவர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த காலம்தொட்டு பழ.நெடுமாறன் எங்கள் குடும்ப நண்பராகவே பழகி வந்தார். அவ ருடன் மட்டுமே எனக்குத் தொடர்புண்டு. எனது தாயார் விடயம் தொடர்பாக அவர் பகிரங்கமாக கருத்துரைத்து வருகிறார். எனது தாயாரைத் தங்கள் தாய்போல பராமரிக்க தமிழக மக்கள் தயங்கமாட்டார்கள். அவர்களுக்கும் எமக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. மற்றபடி என் தாயார் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.’’

ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது உங்களது தந்தை, தம்பி பிரபாகரன் ஆகியோர் உங்களிடம் ஏதாவது பேசினார்களா? அந்த போர்ச் சூழல் நிலவரம் குறித்து ஏதாவது தெரிவித்தார்களா?

‘‘பிரபாகரன் அவரது வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் அதிகமாக என்னிடம் தொடர்புகொண்டது கிடையாது. அப்படியே பேசினாலும் குடும்ப விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவார். எனது தந்தை தாயகம் சென்ற பின் தந்தையார் மூலமாகத்தான் அனைவரது சுகங்களையும் நான் அறிந்து வந்தேன். ஆனால் சென்ற ஆண்டு போர் உச்சகட்டமடைந்தபோது, எனது தந்தை கடைசியாக என்னுடன் பேசினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்குப் பிறகு யாரும் தொடர்பு கொள்ளவில்லை.’’

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது சார்லஸ் இறந்தார் என்ற செய்தியை பிரபாகரன் மற்ற தளபதிகளிடம் ‘என் மகனையும், மகளையும் நாட்டுக்காக விதைத்து விட்டேன்’ என்று கூறியதாக சிலர் எழுதினார்கள். அது பற்றி பிரபாகரன் உங்களிடம் ஏதாவது கூறினாரா? அல்லது மற்ற தளபதிகள் மூலமாகவாவது தெரிவித்தாரா?

‘‘இப்படியொரு தகவலைக் கூறியவர்கள் எல்லோருமே இடையில் இருந்தவர்கள்தான். இது, இவர்கள் மூலம் பிரபாகரனால் சொல்லப்படக்கூடிய செய்தியா என்று நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். தனது பிள்ளைகள் தேர்வில் சித்தியடைந்த (வெற்றியடைந்த) தகவலை இதற்குமுன் ஒருமுறை என்னிடம் தெரிவித்த பிரபாகரன், அந்தத் தகவலைக் கூட இவர்களை வைத்தே சொல்லியிருப்பாரே..? சரி! பிரபாகரன் இதுபற்றிக் கூறாவிட்டாலும் என் தந்தையாவது அதை ஏதோ ஒரு வழியில் தெரிவித்திருப்பார். எனது குடும்பத்தினர் ஒருவருடைய குரலில் இருந்தும் சார்லஸ் இறந்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல் எனக்கு வரவில்லை. அதனால்தான் மர்மம் இருக்கிறது என்றேன்.’’

முள்ளிவாய்க்கால் யுத்த முடிவுக்குப் பிறகு பிரபாகரனின் உடலென்று ஓர் உடலைக் காட்டியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? ஒரு மூத்தவர், அண்ணன் என்கிற முறையில் ஏன் அவரது உடலை முறைப்படி நீங்கள் கௌரவத்துடன் பெற்று மரியாதை செய்ய முன்வரவில்லை? இந்தக் கேள்வி அனைவருக்கும் இருக்கிறதே?

‘‘இதற்குப் பதில் தர சிறிது முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்திலேயே தனது உயிர் மட்டுமல்ல, உடலும் கிடைக்கக் கூடாது என்ற உறுதியுடன் வாழ்ந்தவர் பிரபாகரன். அப்படிப்பட்டவருடைய உடல் என்று ஒன்று காண்பிக்கப்பட்டபோது நான் பலமாக யோசித்தேன். அது என்னுடைய தம்பியின் உடல்தான் என்பதை உறுதி செய்யக்கூடியவர் எனது தந்தைதான். அவர்தான் தம்பியுடன் கடைசி நேரம் வரை அங்கே இருந்தவர். அவரை அழைத்து வந்து அதைக் காண்பித்து உறுதி செய்ய வேண்டியதுதானே மரபு? அப்படி ஏன் செய்யவில்லை என்று எமக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் சிங்கப்பூர் மற்றும் கனடாவில் இருந்து பேசுவதாகக் கூறி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இருவர், அந்த உடலுக்கு உரிமை கோரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது கே.பி. என்பவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறியிருந்தார். எனவே, ‘கே.பி கூறுவதை நம்புவதா? அல்லது நீங்கள் கூறுவதை நம்புவதா?’ என்று நான் அவர்களைக் கேட்டேன். மேலும், அன்றைய நிலையில் சிறீலங்கா செல்வது பாதுகாப்பு சிக்கல் கொண்ட விடயமாக இருந்தது. நாம் அங்குபோன பின் தவறான ஓர் உடலத்தைக் காண்பித்து உறுதி செய்யும்படி வற்புறுத்தினால் நாம் மறுத்து விட்டுத் திரும்ப வழியிருக்குமா? என்பதையும் சிந்தித்தேன். இதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நமது நிலைப் பாட்டின் நியாயத்தன்மை உங்களுக்குப் புரியும்.’’

உங்கள் தம்பி பிரபாகரனை நீங்கள் கடைசியாக எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் சந்தித்தீர்கள்? மீண்டும் சந்திப்போம் என்று அப்போது ஏதும் நினைத்தீர்களா? நினைக்கின்றீர்களா?

‘‘இந்தக் கேள்விக்கு ஜோதிடம்தான் பதிலாக வருகிறது. ‘பிரபாகரனுடைய பிற்கால வாழ்வு நேதாஜியின் வாழ்வு போல மர்மமாக இருக்கும்’ என்று கூறியிருந்த ஜோதிடர் ஒருவர், ‘எனது ராசிக்கும் பிரபாகரனின் ராசிக்குமிடையே உள்ள நிலை காரணமாக இருவரும் சந்திப்பது சாத்தியமில்லை’ என்றும் கூறியிருந்தார். பிரபாகரனை ஈழத்தில் உள்ள ஒரு வீட்டில் கடைசியாக 1979-ம் ஆண்டு தற்செயலாக அங்கு சென்றபோது சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். பேசவில் லை. அவர் வந்ததும் நான் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டேன். பின்னர் சென்னைக்கு நானும் எனது தந்தையும் ஒருமுறை சென்றபோது, தம்பி அங்கு நிற்பதாகவும் (இருப்பதாகவும்) பார்க்கப் போகும்படியும் எனது தந்தை கூறினார். சேலத்தில் இருக்கும் எனது மனைவி இரண்டொரு நாளில் வந்தபின் அவருடன் சேர்ந்து சென்று தம்பி யைப் பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் ஒருமுறை (1987-ல்) தம்பியை இருவரும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவர் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.’’

பிரபாகரனின் இடம், இப்போது வெற்றிடமாக இருக்கிறதே. அடுத்த தலைவர் இவர்தான் என்று வேறு யாரையும் அவர் அடையாளம் காட்டாமல் விட்டிருப்பது பெரும் குழப்பமாக அல்லவா இருக்கிறது?

‘‘இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கென ஒரு நியதி இருக்கிறது. இவருக்குப் பின் இவர்தான் என்று யாரையும் அதில் நியமிப்பதில்லை. ஒரு போராளியின் இடம் வெற்றிடமானால், அவரது இடத்துக்கு இன்னொரு போராளி வருவார். எல்லா போராளிகளுடைய வெற்றிடங்களையும் காலமும், செயற்பாடும் நிரப்பிச் சென்றுள்ளன. ஒவ் வொரு வெற்றிடமும் காலத்தால் சரியாகவே நிரப்பப்பட்டுள்ளன. இதில் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை. மேலும் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்களின் கையில் கொடுப்பதாக தம்பி தெரிவித்துள்ளார். அங்கும் அவர் மக்களையே அடையாளம் காட்டியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.’’

‘தலைவர் இறக்கவில்லை, பாதுகாப்பாக இருக்கின்றார்’ என்று முதலில் கூறிய கே.பி., பிறகு, ‘அவர் வீர மரணம் அடைந்து விட்டார்’ என்று கூறினார். ‘இப்படியொரு இரண்டுங் கெட்டான் பதிலை பிரபாகரன் தன் வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது’ என்று நீங்கள் இணையத்திற்குத் தெரிவித்திருந்தீர்கள். அப்படியென்றால்…?

‘‘உறைந்த மௌனத்தால் தம்பி ஏதோ ஒரு செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளார் என்பதுதான் பதில். மௌனத்தைப் போல சிறந்த, சரியான பதில், வார்த்தைகளில் இரு ப்பதில்லை. ஏனென்றால், பிரபாகரன் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு பதில்களை என்றுமே கொடுத்தது கிடையாது. இப்போது அவர் மௌனமாக ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.’’

தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் மரணமடைந்ததில் ‘இயற்கையானது’ என சிங்கள அரசு சொன்னது. ஆனால் நீங்கள் ‘மர்மம் இருப்பதாக’ கூறியுள்ளீர்கள். அதற்கான காரணங்கள்….?

‘‘தந்தையார் இறந்த செய்தியை எமக்கு அறிவிக்காமலே அவரது உடலை அடக்கம் செய்திருந்தால் இப்போது அவரையும் நாம் தேடிக் கொண்டுதானிருப்போம். அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிய நாங்கள் எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை. என் தந்தை இறப்பதற்கு முன் அவரை சந்தித்தவரென யாருமில்லை. அவரை எங்கு வைத்திருந்தார்கள் என்பது பல மாதங்களாகத் தெரியவில்லை. ஆனால், அவர் இறந்தது மட்டும் தெரிந்தது என்றால், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந் தது என்ற கேள்வி இயல்பாகவே வரும்.

எனது தந்தை கொண்டு செல்லப்பட்ட பின் அவருடைய குரலில் இருந்து ஒரு வார்த்தைகூட எமக்குக் கிடைக்காத நிலையில், அந்த மரணத்தை மர்மமற்ற இயற்கை மரணமென வர்ணிப்பதை ஏற்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள்.’’

தலைவர் பிரபாகரன், அவரது மனைவி, மக்கள் என அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சொல்லியாயிற்று. தந்தையின் மரணம்.. அலைக்கழிப்போடு தாய் ஓரிடம்…. இப்படி எல்லாமும் உங்கள் மனதை எப்படி வதைத்திருக்கிறது? என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள்?

‘‘வாழ்வில் இதைவிட சுமப்பதற்கு பெரிய சுமை என்ன இருக்கப் போகிறது? அதைத்தான் சுமந்து கொண்டு வாழ்கிறேன். அந்தச் சோகத்தை தமிழ்ப்படுத்திக் கூற என்னால் முடியவில்லை.’’

பிரபாகரன் பெரிய தேசியத் தலைவராக அதிகாரத்தில் இருந்தபோதுகூட, அந்த அதிகாரங்களைக் கொஞ்சமேனும் பகிர்ந்துகொள்ளாமல் இப்படி ஒதுங்கி எளிமையாக வாழ்ந்து வருகிறீர்கள். அதுபற்றி தலைவர் எப்போதாவது உங்களிடம் கேட்டதுண்டா? ஏன் இப்படி என்று வருத்தப்பட்டதுண்டா?

‘‘என்றுமே கேட்டதில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவது, தம்பியுடன் தொடர்புகொள்வதெல்லாம் நமது சொந்த முடிவுகளே..’’

‘என் தம்பி நேதாஜியை நேசித்தார். அவரைப் போலவே தூய்மையாக வாழ்ந்தார். நேதாஜியின் பிற்பகுதி வாழ்க்கைத் தோற்றத்தைப் போலவே கடந்த ஓராண்டு காலத்தை வைத்திருக்கிறார்… அதிலும் ஒரு போராட்டம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். அதன் அர்த்தம்…?

‘‘நேதாஜியின் போராட்டம் முடிந்ததாக இன்று வரை யாருமே கூறியதில்லை. காந்தி சுதந்திரம் பெற்றுத் தந்தாலும், அந்தப் போராட்டத்தை அருவமாக நின்று நகர்த்தியது நேதாஜியின் போராட்ட சக்திதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோல பிரபாகரன் 30 ஆண்டுகளாக நடாத்திய போராட்டமும் வெறும் பயங்கரவாத முத் திரையால் முடிவு கட்டப்பட முடியாத போராட்டமாகும். தமிழினத்தின் விடிவை முப்பதாண்டு காலமாக மின்னல் வேகத்தில் நகர்த்தியவர் அவர்தான். இனி எது நடந்தாலும் அது தம்பியின் தாக்கமில்லாமல் நடக்க முடியாதளவிற்கு முத்திரை பதித்துள்ளார். தமிழினத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்ற பந்தை அவர் சுவர் மீது அடித்தார். இப்போது அந்தப் பந்து புது விசையுடன் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பிரபாகரன் சுதந் திரத்தின் வடிவம், பிரபாகரன் மீதான தேடல் சுதந்திரத்தின் மீதான தேடலே என்பதுதான் அதன் அர்த்தம். நேதாஜியைத் தேடியவர்கள் இறுதியில் கண்டது சுதந்திரம் எ ன்பதுபோல இந்தத் தேடலும் விடிவினைத் தரும். அப்போது நேதாஜி போல பிரபாகரனும் சுதந்திர சூரியனாக அரசியல் வானில் பிரகாசிப்பார். இந்தியா சுதந்திரம் பெற்றது போல தமிழினமும் ஒருநாள் சுதந்திரம் பெறும்.’’

‘பிரபாகரனது பிற்பகுதி வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருக்கும். யாரும் அவரைக் காண இயலாது. அவர் எங்கே இருக்கின்றார் என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் ஆரம்பகாலத்தில் கூறினார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்’ என அலைகளுக்குத் தெரிவித்துள்ளீர்கள். அதுபற்றி விளக்கமாக பதில் தர இயலுமா?

‘‘‘நானும் தம்பியும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாது’ என்று கூறிய ஜோதிடர்தான் ‘பிரபாகரனை பிற்காலத்தில் யாருமே காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். ‘அவரை எல்லோரும் தேடுவார்கள் ஆனால் காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். இது எப்போதோ பார்த்த ஜோதிடம், இப்போது நினைத்தால் பொருந்தி வருகிறது. ஜோதிடம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.’’

தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவு இயக்கத் தலைவர்கள் பற்றி உங்களுடைய கருத்து? அவர்களில் யார் யார் உங்களுடன் பேசுவார்கள்? தமிழகத்தில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது….?

‘‘நான் ஆரம்பத்திலேயே சொல்லியது போல அரசியல் தலைவர்களுடன் நான் தொடர்பு கொள்வதில்லை. பழ. நெடுமாறன் ஒருவருடன் மட்டுமே எனக்குத் தொடர்பி ருக்கிறது. ஆகவே, என்னிடம் தலைவர்கள் பற்றிய யாதொரு கருத்தும் கிடையாது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பிரபாகரன் நேசித்ததும், தமிழக இளைஞர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரனாக பிரபாகரனை நேசித்ததும் வரலாற்றில் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? தமிழக இளைஞர்களுக்கு எங்கள் அன்பையும், நன்றியையும் குமுதம் ரிப்போர்ட் டர் மூலமாகச் சொல்வதில் மகிழ்ச்சியடை கிறேன்.’’

பா. ஏகலைவன்.

Tuesday, April 27, 2010

பசிலுக்கு அதிர்ச்சி வைத்தியமளித்த சிம்பன்சி குரங்கு














சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை தெகிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிம்பன்சி குரங்கு ஒன்று முகத்தில் பலமாக‌ அறைந்தது.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தெகிவளை மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச அங்கிருந்த சிம்பன்சி குரங்கு ஒன்றுக்கு கைலாகு கொடுக்க முனைந்தார்.

அப்போது அந்த சிம்பன்சி அவரது முகத்தில் ஓங்கி அறைந்தது.

இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அருகில் நின்ற மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் அந்த சிம்பன்சியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து அமைச்சர் பசில் ராஜபக்ச அதிர்ச்சியடைந்த போதும் இது நல்ல சகுனம் என்று சிரித்து சமாளித்துக் கொண்டார்.

குஷ்பூ மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு














திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது, சேர்ந்து வாழ்வது ஆகியவை குறித்து தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து தமிழகத்தில் நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட 22 வழக்குகளும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறல்ல. சேர்ந்து வாழ்வதும் தவறல்ல. பாதுகாப்பான முறையில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழகத்தில் எத்தனை பேர் கற்புடன் உள்ளனர் என்றெல்லாம் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குஷ்புவின் பேச்சைக் கண்டித்து அவரது வீட்டை பெண்கள் அமைப்பினர் செருப்பு, துடைப்பம் உள்ளிட்டவற்றுடன் முற்றுகையிட்டனர். இதையடுத்து டிவியில் தோன்றிய குஷ்பு கண்ணீர் விட்டு அழுதபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து குஷ்பு மீது 22 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மேட்டூர் கோர்ட்டில் மட்டும் குஷ்பு ஆஜரானார்.

மேலும் தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. கடந்த மாதம் இறுதி விவாதம் நடந்தது. அப்போது தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் இந்து அமைப்புகளின் கடும் கண்டனத்தை பெற்றன.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக்வர்மா, செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு குறித்து நடிகை குஷ்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது எனது வக்கீல் தொலைபேசி மூலம் என்னை எழுப்பி இந்த செய்தியைக் கூறினார். இது எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது. ஒரு பெண் வெற்றிகரமாக போராடுவது என்பது மிக லேசானதல்ல. நான் வெற்றி பெற்றுள்ளேன். உண்மையில் நான் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை” என்றார் குஷ்பு.

சர்ச்சையில் சிக்கியது விஜய்யின் காவல்காரன்..!














பொதுவாக வேற்றுமொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது முறைப்படி அனுமதி வாங்கிக் கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். இல்லையெனில் சினிமா அமைப்புகளாலேயே அது தடை செய்யப்படும் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

இதனால் சின்ன தயாரிப்பாளர்களில் இருந்து பெரிய நடிகர்கள்வரையிலும் பக்காவாக ஒப்பந்தங்களை முடித்துவிட்டுத்தான் பூஜையே போடுவார்கள்..!

ஆனால் இப்போது இளைய தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘காவல்காரன்’ படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமலேயே தமிழில் தயாராகி வருவதாக பிலிம் சேம்பருக்கு புகார் வந்துள்ளதாம்.

‘காவல்காரன்’ படத்தின் ஒரிஜினல் மலையாளப் படமான ‘பாடிகார்ட்’. இந்தப் படத்தில் திலீப், நயன்தாரா, தியாகராஜன் ஆகியோர் நடித்திருந்தார்கள். சித்திக் கதை எழுதி இயக்கியிருந்தார். ஜானி சகாரி தயாரித்திருந்தார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் மொழி மாற்ற உரிமை முழுவதும் தயாரிப்பாளரிடம்தான் இருந்துள்ளது. படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட பணச்சிக்கலால் தயாரிப்பாளர் ‘கோகுலம் சிட்பண்ட்’ நிறுவனத்தில் 4 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனுக்கு ஈடாக ‘பாடிகார்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ‘கோகுலம் சிட்பண்ட்’ நிறுவனத்திற்கு எழுதிக் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஜானி.

ஆனால் கதை ஆசிரியரான சித்திக்கோ “நான் மலையாளத்தில் படத்தினைத் தயாரிக்க மட்டுமே ஜானியுடன் ஒப்பந்தம் செய்திருந்தேன்.. மற்ற மொழி உரிமைகள் அனைத்தும் என்னிடம்தான் உள்ளது. நான் யாருக்கும் எழுதிக் கொடுக்கவில்லை. விற்கவில்லை..” என்று சொல்லி இப்போது ‘காவல்காரனை’ மும்முரமாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் கொடுத்த படத்தின் ரைட்ஸை நம்பி கடன் கொடுத்திருக்கும் ‘கோகுலம் சிட்பண்ட்’ இது பற்றி பல முறை பஞ்சாயத்து செய்தும் முடியாமல் போய் கடைசியாக பிலிம் சேம்பரில் தற்போது புகார் செய்திருக்கிறது.

இதேபோல் தயாரிப்பாளர் ஜானி சகாரியும், இயக்குநர் சித்திக் மீது புகார் கொடுத்திருக்கிறார். சித்திக்கோ மிக கூலாக “ஜானி அப்படித்தான் சொல்வார்.. எங்களுக்குள் மொழி மாற்றம் சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் இல்லை..” என்று சொல்கிறார்..!

இதில் யார் சொல்வது உண்மை என்பது தற்போதைக்குத் தெரியவில்லை என்றாலும், விஜய்யின் இந்தப் படம் முதல் முறையாக கதை விஷயத்திலேயே பரபரப்பாகியிருக்கிறது..!

இனி எல்லாமே பிலிம் சேம்பரின் கையில்தான்..!

இந்தியாவின் ஒத்துழைப்பால்தான் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்தது; கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்














இந்திய அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பால்தான் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்ததாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சே நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘’விடுதலைப்புலிகளை முறியடிக்க 4 ஜனாதிபதிகள் தலைமையில் அமைந்த 8 அரசுகள் முயன்றன. ஆனால் முடியவில்லை. ராஜபக்சே பதவி ஏற்றதும் இது பற்றி ஆராயப்பட்டது.
 
முடிவில் ராணுவத்தின் பலத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பலன் கிடைத்தது. முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தில் கூடுதல் ராணுவ வீரர்களை நிலை நிறுத்தினோம்.
 
ஒவ்வொரு மாதமும் தலா 5 ஆயிரம் பேரை படையில் சேர்த்தோம். இதனால் மூன்றே வருடங்களில் வீரர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமானது.
 
இந்தியா உள்பட பல நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. எடுக்கப்படும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும்  உடனுக்குடன் இந்தியாவிடம் விளக்கப்பட்டன. போர் நடக்கும் சமயத்தில் இந்தியா மிகுந்த அழுத்தத்தையும் கொடுத்தது. அதை அதிபர் ராஜபக்சே சாதூரியமாக எதிர்கொண்டார்.
 
நான், பசில் ராஜபக்சே, வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியாவுடன் தினமும் பேசினோம். இந்தியாவின் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன் இருவரும் எங்களுக்கு ஒத்துழைத்தனர்.
 
முக்கிய விவகாரம் எழுந்த போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். இதனால் இலங்கை ராணுவத் தாக்குதல்கள் இடையூறு இல்லாமல் நடந்தன. இந்த ஒத்துழைப்பே விடுதலைப்புலிகளை வெல்வதற்கு காரணமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாள் மீண்டும் சிறிலங்காவிற்கு திரும்ப திட்டம்














கடந்த இரு வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் சிறிலங்கா திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேசிய அரசு மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ள ஒரு மாத வதிவிட அனுமதி முடிவடைவதற்குள் அவரை மீண்டும் சிறிலங்காவிற்கு அழைத்துவர உள்ளதாக பார்வதி அம்மாளின் நலன்களைக் கவனித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வதியும் தனது மகளிடம் செல்வதற்காக பார்வதி அம்மாள் மலேசியா வந்தபோதும் பார்வதி அம்மாளுக்கு விசா வழங்க கனேடிய அரசு தயக்கம் காட்டி வருவதாகவே தெரியவருகிறது. இதன் காரணமாகவே மலேசியாவில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையில் அவர் சிறிலங்கா திரும்ப உள்ளார். அடுத்த மாத நடுப்பகுதிக்குள் அவர் சிறிலங்கா திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் அவரைப் பராமரிப்பதற்கு பலர் உதவி புரியத் தயாராக உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எனினும் தமிழ்நாடு அரசு அவர் இந்தியா வருவதற்கு உள்ள தடையை நீக்கி அவர் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உதவவேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது.

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரலாறு பாகம் இரண்டு














வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் - புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம் என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONS OF CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.

இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.

“ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று குறித்து நிற்கின்றது.

இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்” என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப் பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா “ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.

இவ்வாறு போர்த்துக்கேயர் காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத் திலும் மேற்கூறிய ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.

இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் என
மாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. “சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.

இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது.  இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும்.  இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.

இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ்ஈழம் என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை. கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோஅவ்வாறே குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு.

1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார்.  அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு மட்டக்களப்பிற்கு வேலையின் நிமித்தம் மாற்றல் கிடைத்தது. அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் ஈழாளனின் நினைவில் பிறந்த குழந்தையுடன் அதாவது நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினார்.

முன்பு வேறு இடத்தில் இருந்த வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இம்முறை மட்டக்களப்பு தாமரைக்கேணி குறுக்கு வீதியில் 7ம் இலக்க வீட்டில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்த வீதியில் குடியிருந்த அனைத்துக் குடும்பங்களுடனும் நல்லுறவை வைத்திருந்த இவர்கள் அமைதியானவர்கள் மற்றும் பிரச்சனை ஏதுவும் இல்லாதவர்கள் என்பதாலும் அவ்வீதியின் அனைத்து வீடுகளிலும் சிறுவனாகிய தலைவர் பிரபாகரனுக்கு நிரம்ப மரியாதை.

குறிப்பாக அவ்வீதியில் 10ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த பண்டிதர் சபாபதி என்பவர் வீட்டிலேயே சிறுவயதுப் பிரபாகரன் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டார். எதிர் எதிராக இருந்த வீடுகள் என்பதைவிட பண்டிதர் சபாபதியின் மகளான முத்துலெட்சுமிக்கு சிறுவன் பிரபாகரன் மீது அளவுகடந்த வாஞ்சை.

இளம் ஆசிரியரான அவர் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் பிரபாகரனைத் தூக்கிச் சென்று விளையாடுவார். இவ்வாறே பாடசாலை செல்லும்வரை பண்டிதர் சபாபதியின் வீட்டில் ஆசிரியையான முத்துலெட்சுமியுடன் தனது நேரங்களை கழித்ததினால் பாடசாலை செல்லுமுன்னேயே பண்டிதர் சபாபதியிடமும் முத்துலெட்சுமியிடமும் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்துவிட்டார்.

பண்டிதர் சபாபதி என்பவர் மட்டக்களப்பு தந்த சிறந்த கல்விமான். இலக்கியவாதி. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்ற இவர் மதுரை ஆதினத்தால் கவிராஜகேசரி என்னும் பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டவர். “மாரியம்மன் மான்மியம்” மற்றும் “விடுதலை வேட்கை” போன்ற நூல்களை எழுதி வெளியிட்ட இவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்த அதிஷ்டசாலியே தலைவர் பிரபாகரனாவார்.

இவ்வாறே தமிழ்க்கவியை கசடறக் கற்ற மட்டக்களப்பு பண்டிதர் வீட்டில் மழலைமொழி பயின்ற தலைவரிடம் தமிழ் உணர்வு குடிகொண்டதில்
ஆச்சரியமில்லை. இவ்வாறே வீட்டில் கடைக்குட்டியான செல்லம் முன்வீட்டில் பண்டிதர் குடும்பத்தின் செல்லம் என விளையாட்டும் பொழுதுபோக்குமாகக் கழித்தான் சிறுவன் பிரபாகரன். 1960ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு அரசடி வித்தியாசாலை (இன்றைய மஹஜனாக் கல்லூரி) தனது பாலர் வகுப்பினைப் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு மட்டக்களப் பில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் 1963லேயே தனது ஒன்பதாவது வயதில் தனது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்து வல்வெட்டித்துறை சிவகுருவித்தியாசாலையில் தனது 3ம் தரத்தினை படிக்க ஆரம்பித்தார். இந்நிலையிலேயே வெள்ளைச்சாமியால் முதன்முதலாக புரியாத புதிராக அடையாளம் காணப்பட்டார்.

இவ்வாறு மட்டக்களப்பு தாமரைக்கேணியில் குறுக்குவீதியில் பண்டிதர் சபாபதியின் 7ம் இலக்க வீட்டில் இவர்கள் குடியிருந்த பொழுது இவர்களுடைய வீட்டிற்கு பின்புறமாக குடியிருந்தவர்களே அரியகுட்டி செல்லத்துரை ஆசிரியர் குடும்பமாகும். மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு தாமரைக் கேணியைச் சேர்ந்த நல்லையா முதலியாரின் மகளான இராசம்மா என அழைக்கப்பட்ட அன்னப்பாக்கியத்தை திருமணம் முடித்திருந்தார். பீமன் என்னும் நாடக பாத்திரத்தில் முன்பு நடித்ததனால் இவரை பீமன் செல்லத்துரை என்றும் குறியீட்டுப் பெயராலும் அழைப்பர்.(1999 இலும் தலைவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை இந்தக் குறியீட்டுப் பெயரையே பயன்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.)

நான்கு பெண்பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொண்ட இவர்களிருவருமே வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகத் தொழில் புரிந்து வந்தனர்.

இந்நிலையிலேயே 1958 மே 26ம் திகதி ஆரம்பித்த அப்பாவித் தமிழர்களின் மீதான கொடூரத்தாக்குதல் வேளையில் தனது நண்பர்களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்களுடன் வெலிமடையிலிருந்து புறப்பட்டு பதுளை வழியாக மட்டக்களப்பை நோக்கி காரில் வந்து கொண்டிருக்கும்போது மாஓயா என்னும் இடத்தில் சிங்கள இனவெறியரால் படுகொலை செய்யப்பட்டார்.

மலையகத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள வியாபாரி மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார் எனப்பரவிய வதந்தியைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது ஆனால் நடந்த கொலை இனரீதியானது அல்ல அது தனிப்பட்டகொலை…. நடந்தது இதுதான்.

“செனிவிரட்ணா” இவர் நுவரெலியாவின் முன்நாள் மேயராவார். இவர் பின்நாட்களில் அரசியலைக் கைவிட்டுவிட்டு மட்டக்களப்பிற்கு வந்து
தென்னந்தோட்டமொன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் அங்கிருந்த உள்ளூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் அவருக்கு கூடாவொழுக்கம் உரு வாயிற்று இதை அறிந்ததும் அப்பெண்ணின் கணவர் செனிவிரெட்ணாவை 25 மே 1958ல் சுட்டுக்கொன்று விட்டார்.

செனிவிரட்ணாவின் உடலை மட்டக்களப்பில் இருந்து பதுளை வழியாக நுவரெலியாவிற்கு கொண்டு செல்லும் வழியில்தான் சிங்களவனை தமிழன் சுட்டுக்கொன்று விட்டான். ஏனப் பிரச்சாரம் பரவியது. இதனைத் தொடர்ந்து பற்றியெரிந்த இனத்தீ தமிழர் களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.

அப்பாவித்தமிழ் மக்கள்மீதான கொடூர சிங்கள இனவெறித் தாக்குதலில் குறிப்பாகத் தெனிலங்கை நகரங்களான மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை, இங்கினியாகல, கல்லோயா போன்ற இடங்களும் பதுளை போன்ற மலையக நகரங்களுமே ஆரம் பத்தில் பாதிப்பிற்கு உள்ளாகின.

இவைகளைத் தொடர்ந்து காலி, பாணந்துறை, கொழும்பு என நாடளாவிய ரீதியில் இக்கலவரம் கோரத்தாண்டவம் ஆடியது இங்கு குறிப் பிடத்தக்கது.

1958 வைகாசி மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை இவ்வாறு செல்லத்துரை ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டபோது வெலிமடையில் அவரது மனைவியான ஆசிரியை இராசம்மா 4 பிள்ளைகளுடன் தங்கியிருந்த அவர்களது வீடு சிங்கள இனவெறியினரால் தாக்கி எரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் இருந்து தனது சிறுபிள்ளைகளுடன் தப்பியோடிய திருமதி அன்னப்பாக்கியம் பின்பு எப்படியோ மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்தார்.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையரன இவர் மட்டக்களப்பில் தனது தாயாருடன் இருந்த ஏனைய இரு குழந்தைகளுடன் இணைந்து தாமரைக்கேணியில் வேலுப்பிள்ளை குடும்பம் இருந்த வீட்டிற்குப் பின்புறமாக தமது வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

ஆறு குழந்தைகளுடனும் தனது ஆசிரியத் தொழில்மூலம் கிடைத்தசொற்ப வருவா யில் மிகுந்த பொருளாதார சிக்கலில் வாழ்ந்தபோதும் தனது
அயலவர்களுடன் நல்ல உறவைத் தொடர்ந்து பேணிவந்தார். இதன்மூலம் அயலவர்களும் உறவினர்களும் இவரின் நிலை கண்டு உதவி புரிந்தே வந்தனர்.

மிகவும் சுவாரசியமாகவும் தத்ரூபமாகவும் உரை யாடக்கூடிய இவர் அடிக்கடி நமது மேதகு தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு வந்து தலைவரின் தாயான பார்வதிப்பிள்ளையுடன் உரையாடுவதுடன் அந்நேரங்களிலெல்லாம் சிங்கள இனவெறியால் தனக்கு நேர்ந்த அவலத்தையும் கண்ணீர் மல்கக்கூறி ஆறுதலடைவதும் வழக்கம்.

மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களின் பேச்சில் இடையூறு செய்யாமல் அமைதியாகக் அதனைக்கேட்டு உள்வாங்கிக்கொள்வது தாயாரிடமிருந்து தேசியத்தலைவர் பெற்றுக்கொண்ட அருங்கொடையாகும்.

இவ்வாறாக நான்கு வயதிலிருந்து எட்டு வயதுவரை தாயாருடன் கூட இருந்து அன்னப்பாக்கியம் ரீச்சரின் ஆதங்கத்தை செவிமடுத்த தலைவரின் பிஞ்சு மனதில் அந்தத் தாயின் சோகமும் அதற்குக் காரணமான சிங்கள இனவெறியும் ஆழப்பதிந்து கொண்டன.

அன்று பிஞ்சு மனதில் பட்டகாயம் பின்பு அவர் வளர வளர சிங்கள இனவெறியின் பல்வேறு முகங்களும் இனவாத அடக்குமுறையினூடாகவே நடக்கின்றன என அவர் புரிந்து கொண்டபோதும் சிறு  வயதில் மட்டக்களப்பில் தாமரைக்கேணியில் சந்தித்த அந்த விதவைத்தாயையும் அவரின் சோகத்தையும் எக்காலத்திலும் தலைவரால் மறக்கமுடிய வில்லை.

1963இல் மட்டக்களப்பைவிட்டு அவர் வெளியேறிவிட்ட போதும் 1984ல் முதன் முதலாக இந்தியாவின் பிரசித்தமான `SUNDAY` ஆங்கில வார ஏட்டிற்கு பேட்டி ஒன்றை வழங் கியிருந்தார். 1973 மார்ச் 23ம் திகதி அதிகாலை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் இவர் வீட்டைச் சுற்றிவளைத்து இவரைக் கைது செய்ய முயன்றபோது சுவரேறித் தப்பிக் கொண்ட இவருடைய 11 வருட தலைமறைவு வாழ்க்கையின் பின் 11, 17 மார்ச் 1984 அன்று இப்பேட்டி பிரசுரமானது.

பிரபல பெண் பத்திரிகை நிருபரான அனிதா பிரதாப்பின் 46 கேள்விகளுக்கு விரி வாகத் தலைவர் வழங்கிய பதில்கள் மூலம் தமிழீழவிடுதலைப் புலிகளினதும் தன்னைப் பற்றியதுமான பலவிடயங்களை முதன் முதலாகப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்தச் செவ்வியின் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே தனது உள்ளத்தில் பதிந்திருந்த விதவைத்தாயான இராசம்மாவினை நினைவு கூர்ந்தே அவருடைய பதில் பின்வரு மாறு அமைந்துள்ளமையை நாம்காணலாம்.

கேள்வி : இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டமே ஒரு வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவிற்கு நிர்ப்பந்தித்த அனுபவங்களை சற்றுக் கூறுவீர்களா? கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்களா?

பதில் : நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ம் ஆண்டின் இனக்கலவரங்களில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் என் மனதில் ஆழமான
பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம்மக்கள் ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உருக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத்தாயை நான் ஒரு முறை சந்தித்தபோது (அவர் இந்த இனவெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயர அனுபவங்களை என்னிடம் சொன்னார்.)

இனக்கலவரத்தின்போது சிங்களக்காடையர்கள் அவர் வீட்டைத்தாக்கினார்கள். அவருடைய வீட்டிற்குத் தீவைத்து அவரது கணவரையும் குரூரமாகக் கொலைசெய்தனர். அவரும் அவருடைய பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரின் உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கொதிக்கும் தாருக்குள் சிறு குழந்தைகளை உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.

அநாதரவான அப்பாவித்தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதை எல்லாம் கேட்கும்போது எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்படுகின்றது. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம்மக்களை மீட்டெடுக்க வேண்டுமென பெரும் உந்துதல் எனக்குத் தோன்றியது.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியுமென நான் ஆழமாக உணர்ந்தேன்.

இவ்வாறே அன்று தலைவர் பிரபாகரன் கண்ட மட்டக்களப்புத் தாயின் கண்ணீர்த் துளிகளே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூல ஊற்றாகி
உலகமெல்லாம் பொங்கிப் பிரவாகிக்கும் ஓயாத அலைகளாக பின்பு உருவெடுத்தன.








Monday, April 26, 2010

பீஃபா உலகக்கிண்ண கால்பந்தாட்டம்; நேர அட்டவணை வெளியீடு














தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கும் பீஃபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் குழு நிலை போட்டிகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு;

ஏ குழுக்கான போட்டிகள்

11 ஜூன் 4.00 மணிக்கு தென்னாபிரிக்கா மெக்ஸிக்கோ
11 ஜூன் 8.30 மணிக்கு உருகுவே பிரான்ஸ்
16 ஜூன் 8.30 மணிக்கு தென்னாபிரிக்கா உருகுவே
17 ஜூன் 8.30 மணிக்கு பிரான்ஸ் மெக்ஸிக்கோ
22 ஜூன் 4.00 மணிக்கு மெக்ஸிக்கோ உருகுவே
22 ஜூன் 4.00 மணிக்கு பிரான்ஸ் தென்னாபிரிக்கா

பி குழுக்கான போட்டிகள்;

12 ஜூன் 4.00 மணிக்கு ஆர்ஜெண்டீனா நைஜீரியா
12 ஜீன் 1.30  மணிக்கு கொரியா குடியரசு கிரேக்கம்;
17 ஜூன் 4.00 மணிக்கு கிரேக்கம்; நைஜீரியா
17 ஜூன் 1.30 மணிக்கு ஆர்ஜெண்டீனா கொரியா குடியரசு
22 ஜூன் 8.30 மணிக்கு நைஜீரியா கொரிய குடியரசு
22 ஜூன் 8.30 மணிக்கு கிரேக்கம்; ஆர்ஜெண்டீனா

சி குழுக்கான போட்டிகள்

12 ஜூன் 8.30 மணிக்கு இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா
13 ஜூன் 1.30 மணிக்கு அல்ஜீரியா சுலோவேனியா
18 ஜூன் 4.00 மணிக்கு சுலோவேனியா ஐக்கிய அமெரிக்கா
18 ஜூன் 8.30 மணிக்கு இங்கிலாந்து அல்ஜீரியா
23 ஜூன் 4.00 மணிக்கு சுலோவேனியா இங்கிலாந்து
23 ஜூன் 4.00 மணிக்கு ஐக்கிய அமெரிக்கா அல்ஜீரியா

டீ குழுக்கான போட்டிகள்

13 ஜூன் 8.30 மணிக்கு ஜேர்மனி அவுஸ்திரேலியா
13 ஜூன் 4.00 மணிக்கு சேர்பியா கானா
18 ஜூன் 1.30 மணிக்கு ஜேர்மனி சேர்பியா
19 ஜூன் 4.00 மணிக்கு கானா அவுஸ்திரேலியா
23 ஜூன் 8.30 மணிக்கு கானா ஜேர்மனி
23 ஜூன் 8.30 மணிக்கு அவுஸ்திரேலியா சேர்பியா

ஈ குழுக்கான போட்டிகள்

14 ஜூன் 1.30 மணிக்கு நெதர்லாந்து டென்மார்க்
14 ஜூன் 4.00 மணிக்கு ஜப்பான் கமரூன்
19 ஜூன் 1.30 மணிக்கு நெதர்லாந்து ஜப்பான்
19 ஜூன் 8.30 மணிக்கு கமரூன் டென்மார்க்
24 ஜூன் 8.30 மணிக்கு டென்மார்க் ஜப்பான்
24 ஜூன் 8.30 மணிக்கு கமரூன் நெதர்லாந்து

எஃப் குழுக்கான போட்டிகள்;

14 ஜூன் 8.30 மணிக்கு இத்தாலி பரகுவே
15 ஜூன் 1.30 மணிக்கு நியூஸிலாந்து சுலோவாக்கியா
20 ஜூன் 1.30 மணிக்கு சுலோவாக்கியா பரகுவே
20 ஜூன் 4.00 மணிக்கு இத்தாலி நியூஸிலாந்து
24 ஜூன் 4.00 மணிக்கு சுலோவாக்கியா இத்தாலி
24 ஜூன் 4.00 மணிக்கு பரகுவே நியூஸிலாந்து

ஜீ குழுக்கான போட்டிகள்

15 ஜூன் 4.00 மணிக்கு ஐவரிகோஸ்ட் குடியரசு போர்த்துக்கல்
15 ஜூன் 8.30 மணிக்கு பிரேசில் கொரியா
20 ஜூன் 8.30 மணிக்கு பிரேசில் ஐவரிகோஸ்ட் குடியரசு
21 ஜூன் 1.30 மணிக்கு போர்த்துக்கல் கொரியா
25 ஜூன் 4.00 மணிக்கு போர்த்துக்கல் பிரேசில்
25 ஜூன் 4.00 மணிக்கு கொரியா ஐவரிகோஸ்ட் குடியரசு

எச் குழுக்கான போட்டிகள்

16 ஜூன் 1.30 மணிக்கு ஹொந்துராஸ் சிலி
16 ஜூன் 4.00 மணிக்கு ஸ்பெயின் சுவிட்சர்லாந்து
21 ஜூன் 4.00 மணிக்கு சிலி சுவிட்சர்லாந்து
21 ஜூன் 8.30 மணிக்கு ஸ்பெயின் ஹொந்துராஸ்
25 ஜூன் 8.30 மணிக்கு சிலி ஸ்பெயின்
25 ஜூன் 8.30 மணிக்கு சுவிட்சர்லாந்து ஹொந்துராஸ்

எல்லா நேரமும் தென்னாபிரிக்கா உள்ளூர் நேரப்படியாகும்.

குட்டிமணியின் கதிதான் பொன்சேகாவுக்கும் : பழ.நெடுமாறன்














தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி இது..!

“மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன! நெஞ்சில் கொஞ்சம் இரக்கத்தையும் ஈரத்தையும் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கவைத்த ஈழத்துக் கொடூரங்கள் அரங்கேறி ஓராண்டு முடியப்போகிறது.

இறந்து மண்ணுக்குப் போனவர் எண்ணிக்கைகூட முழுமையாக இன்னமும் எடுக்கப்படவில்லை. மனரீதியாக இறந்துபோய் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போர் நிலை குறித்தும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலை நடத்தி முடித்துவிட்டார்கள்.

கோமா நிலையில் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் குறித்து அறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்…

”ஈழத்துக் கொடூரங்கள் நடந்து முடிந்து ஓராண்டு ஆகப்போகிறது. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளன?”

கொடூரங்கள் நடந்து முடியவில்லை. இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றமே இன்னமும் தொடர்கிறது. மேலும் மேலும் துன்பம் அதிகமாகி வருகிறது. முள்வேலி முகாமில் இருந்த மக்களை உலக நிர்பந்தத்துக்குப் பயந்து விடுவிப்பதாக ராஜபக்சே கூறினார். முழுமையாக விடுவிக்கவில்லை. ஒரு பகுதி மக்களையே விடுவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்களும் தங்களது ஊருக்குப் போனால் அவர்கள் வீடுகள் எல்லாம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. எனவே, இருப்பதற்கு இடம் இல்லாமல் பள்ளி, கோயில்களில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்கள் தங்களது சாப்பாட்டுக்காக விவசாயம் பார்க்கவோ மீன் பிடிக்கப் போகவோ சிங்கள ராணுவம் அனுமதிக்க மறுக்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், ‘வன்னிப் பகுதியில் ஏராளமான ராணுவ முகாம்கள் இருப்பதால் தமிழ்ப் பெண்கள் வெளியே நடமாட அஞ்சுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். முகாம்களில் இருப்பவர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உதவிகள் அரைகுறையாகவே கிடைக்கின்றன.

சுதந்திரமாக நடமாடலாம் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தாலும், எங்கு போவது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான் தமிழன். முகாம்களில் இல்லாத தமிழர்கள், சிங்கள ராணுவம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற குழுக்களால் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

இதைவிடக் கொடுமையான செய்தி என்னவென்றால், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காகக் கொடுத்த 1,000 கோடி ரூபாய் பணத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்காக புத்தக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன.

சிங்களப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்க் குழந்தைகள் சிங்களம் படித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ்ப் பெயர் தாங்கிய ஊரின் பெயர்கள் சிங்களமாக மாற்றப்படுகின்றன. அதாவது, தமிழ்ப் பகுதிகள் என்று இலங்கையில் எதையும் சுட்டிக் காட்டிவிடக் கூடாது என்பதற்கான வேலைகள்தான் இந்த ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன!

”ஜனாதிபதி தேர்தலில் வென்றது மாதிரியே நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சே வென்றிருக்கிறார். இந்தத் தொடர் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 70 சதவிகிதத் தமிழர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். அதாவது, சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட நாங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இந்தப் புறக்கணிப்பின் மூலம் தமிழர்கள் உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள்.

பொதுவாகவே, இலங்கையில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 75 சதவிகித வாக்குகள் பதிவாகும். ஆனால், வரலாற்றில் முதன்முறையாக 55 சதவிகித வாக்குகள்தான் பதிவாகி உள்ளன. தமிழ் மக்கள் மட்டுமல்ல; சிங்கள மக்களும் இந்தக் கேலிக்கூத்தான நடைமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன!

“பொன்சேகா, தனது தொகுதியில் வெற்றிபெற்றுள்ளாரே?”

”ராஜபக்சே, பொன்சேகா மோதலின் விளைவாக சிங்கள மக்கள் பிளவுபட்டு உள்ளார்களே தவிர, தமிழர்களுக்கு இதனால் எந்த ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை.

கடந்த ஆண்டின் இதே ஏப்ரல் மாதங்களில் நடந்த கொடுமைகளுக்கு அவர்கள் இருவரும்தானே காரணம். இவர்களின் மோதல் என்பது தேர்தல் மோதலாக மட்டும் நின்றுவிடாது. ராணுவத்துக்கும் மோதல் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. பொன்சேகாவுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் பதவியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். இது ராணுவத்தினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா ஒரு உறுப்பினராக வென்றிருந்தாலும் அவரை நாடாளுமன்றத்துக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். 1980-களின் முதற் பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த டெலோ தலைவர் குட்டிமணி, சிறையில் இருந்தபோதே வட்டுக்கோட்டை தொகுதி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவரை நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதிக்காமல் கொலை செய்துவிட்டார்கள். இந்தக் கதி பொன்சேகாவுக்கும் ஏற்படலாம்!

”இதையெல்லாம் உலக நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கக் காரணம்?”

”வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை, சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

போர்க் குற்றவாளியாக ராஜபக்சேவை மேற்கு நாடுகளும் ஐ.நா-வும் குற்றம் சாட்டி வருகின்றன. அதில் இருந்து தப்புவதற்கு அவர் பெருமுயற்சி செய்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ‘ராஜபக்ஷே போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர்’ என்று தெளிவாகத் தீர்ப்பளித்து உள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம், ‘நாங்கள் இலங்கைக்கு இதுவரை ஆயுதம் வழங்கியதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இனி வழங்கமாட்டோம்’ என்று மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆயத்த ஆடைகளுக்கு இதுவரை கிடைத்து வந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகள் இந்தக் கொடூரத்தை உணர்ந்துள்ளன.

ஆனால், இந்தியாதான் இன்னமும் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் உதவி செய்துவருகிறது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் திரிகோணமலைக்குச் சென்று சிங்கள கடற்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்தியக் கடற்படைக்கு ஏன் இந்த வீண் வேலை?

இந்திய அரசும் கருணாநிதி அனுப்பிய தூதுக் குழுவும் தவிர, உணர வேண்டியவர்கள் அனைவரும் ஈழத்துக் கொடுமையை உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்!

”சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இந்த ஓராண்டு காலத்தில் அதிகமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

இலங்கையில் சீனா அதிகமாகக் காலூன்றுவது இந்துமாக் கடல் மார்க்கம் அவர்களது கட்டுப்பாட்டில் போவதற்குத்தான் வழிவகுக்கும். இதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அவர்களைவிட இது இந்தியாவுக்குத்தான் பெரும் ஆபத்தாக முடியும்.

ஏற்கெனவே, இந்தியாவைச் சுற்றி உள்ள நேபாளம், மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சீனா பலமாக வேரூன்றிவிட்டது. பாகிஸ்தானும் நெருங்கிய கூட்டாளி ஆகி விட்டது. எஞ்சியிருந்த இலங்கையும் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது. இந்தியாவைச் சுற்றி சீனா உருவாக்கி வரும் பேராபத்தை டெல்லியில் உள்ளவர்கள் உணரவில்லை.

‘சீனாவைவிட நான் அதிகமாக உதவிகள் செய்கிறேன்’ என்று இந்தியா கையாளும் தந்திரம் தற்கொலைக்குச் சமம். இந்தியாவைத் தனது நேசநாடாக ராஜபக்சே எப்போ தும் நினைக்க மாட்டார். அதை டெல்லி எவ்வளவு விரைவாக உணர்கிறதோ அது நம்முடைய நாட்டுக்கு நல்லது!

”விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இயங்குகிறதா?”

ஈழத் தமிழர் பிரச்னை இன்று உலகளாவிய பிரச்னையாக இருப்பதற்கு பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் செய்துள்ள தியாகம்தான் காரணம். 30 ஆண்டுகாலம் புலிகள் நடத்திய போராட்டத்தால்தான் தமிழர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

2 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்தும், 45 ஆயிரம் புலிகள் வீர மரணத்தைத் தழுவியும், 10 லட்சம் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வெளியேறியும், 5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே எல்லாவற்றையும் இழந்து தவித்த ஈழத்து சோகம் சொல்லி மாளாது. ஆனாலும், தங்கள் துன்பத்துக்குத் தமிழீழமே தீர்வு என்பதைத் தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இப்போது நடந்திருப்பது தற்காலிகப் பின்னடைவு என்றுதான் கருதுகிறார்களே தவிர, எல்லாம் முடிந்துவிட்டது என்று எவரும் நினைக்கவில்லை. புலிகளை அழித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிற ராஜபக்சே, கூடுதலாக ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கிறார். ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். புலிகள் அமைப்பு இயங்குகிறது, முன்னிலும் பலமாக இயங்குகிறது, அடுத்த தாக்குதலை அவர்கள் ஆரம்பித்தால் அது பலமானதாக இருக்கும் என்பது ராஜபக்சேவுக்குத் தெரியும்!

”ஏற்கெனவே கேட்கப்பட்டதுதான்… பிரபாகரன் இருக்கிறார் என்று இன்னமும் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

பிரபாகரனின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்து வந்த தகவலை வைத்துதான் நான் உறுதியாகக் கூறுகிறேன். பிரபாகரன் உள்பட முக்கியத் தளபதிகளை ஒழித்துவிட்டதாக ராஜபக்சே சொல்வதை சிங்கள மக்களே நம்பவில்லை. இன்னமும் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது.

பிரபாகரன் தலைமையில் அந்தப் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். எப்போது எந்தக் காலகட்டத்தில் என்பதை பிரபாகரன் மட்டுமே முடிவு செய்ய முடியும். உற்ற தருணம் நோக்கி அவர் காத்திருக்கிறார். அந்தக் காத்திருப்பு வீண் போகாது!

நன்றி : ஜூனியர்விகடன்

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு மாறியிருக்கும் : வைகோ














“நான் இப்போது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு நிச்சயம் மாறியிருக்கும்” என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் வைகோ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி மேலும் கருத்து தெரிவித்திருக்கும் வைகோ, “என் நண்பர்களான அத்வானி, வாஜ்பாய் இருவரும் வற்புறுத்தியும் இரண்டு முறைகளும் அமைச்சர் பதவி ஏற்க மறுத்துவிட்டேன். 2004 பாராளுமன்றத் தேர்தலில் பலரும் சொல்லியும் பிடிவாதமாக தேர்தலில் நிற்க மறுத்ததுதான், நான் செய்த மிகப் பெரும் தவறு என்பதை இப்போது உணர்கிறேன்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.

அவர் மேலும் பேசும்போது, “ஆனால் எம்.பி. பதவி இல்லாமலேயே நான் 16 முறை பிரதமரைச் சந்தித்து தமிழீழம் தொடர்பாக மன்றாடினேன். இந்த நேரத்தில் நான் எம்.பி.யாக இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் அடிக்கடி இது தொடர்பாக பெரிய அளவில் விவாதங்களைக் கொண்டுவந்து அனைத்துத் தலைவர்களின் ஆதரவையும், திரட்டி சிங்கள அரசுக்கு ஆயுத பலத்தை இந்தியா கொடுப்பதைத் நிச்சயம் தடுத்திருப்பேன்.

1998-ல் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு உள்ளானார்கள். அப்போது வாஜ்பாயிடம் பேசி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நான்தான் கூட்ட வைத்தேன். அக்கூட்டத்தில் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, முலாயம்சிங் யாதவ், நிதீஷ்குமார் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களும் பங்கேற்றார்கள்.

நான் பேச எழுந்தபோது விரைவில் என் பேச்சை முடிக்க விரும்பினேன். ஆனால் நிதிஷ்குமார், “இது பற்றி நீங்கள்தான் விரிவாகச் சொல்ல வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நான் அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி விரிவாகப் பேசினேன். அந்தக் கூட்டத்தின் முடிவில்தான் “இலங்கைக்கு எந்த ஆயுதமும் விற்பதில்லை..” என்று பிரதமர் வாஜ்பாய் முடிவெடுத்தார். பிரதமர் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது.

தற்போது நான் எம்.பி.யாக இருந்திருந்தால் இது மாதிரியான தமிழீழத்திற்கான சேவையை என்னால் செய்திருக்க முடியும். ஆனால் கடந்த 2009 தேர்தலில் ஆளும்கட்சியினர் எனது தொகுதியில் மட்டும் 100 கோடி ரூபாய் செலவழித்து என்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் நான் எதையும் இழப்பு என்று நினைக்கவில்லை. என்னை மக்கள் எங்கு வைத்திருக்கிறார்களோ அங்கிருந்தே சேவை செய்வேன்..” என்றும் கூறியுள்ளார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கையாலாகாத ஒரு தமிழனின் கடிதம்














அன்புள்ள சுபவீ  வணக்கம்.

கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது.

வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

இப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.

"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, `உதவிட இயலுமா?` என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?

சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே `இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்` என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?

இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், அருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார்.

உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?

நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக  பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.

ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?

நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.

நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக‌ தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம்.

நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். “இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?” என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக‌ இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,

கையாலாகாத ஒரு தமிழன்

வெல்க‌ தமிழ்! வீழ்க தமிழன்!

நன்றி : கீற்று

Sunday, April 25, 2010

புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை முடக்க புலம்பெயர் தமிழர்கள் தடையாக உள்ளனர் : கோத்தபாய ராஜபக்ச














விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கைகளுக்கான ஒரேயொரு தடையாகப் புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச‌ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் தனது புலனாய்வுத் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமது பேட்டியின் போது தெரிவித்துள்ளவை வருமாறு:   

கேள்வி: சரத் பொன்சேகா அரசியலில் நுழைந்தமை குறித்து அரசு என்ன கருதுகின்றது?

பதில்: தளபதி தனிப்பட்ட ஆசைகளுக்குப் பலியானார். நான்கு வருடங்களுக்கு மேலாக எம்முடன் எமது அணியில் ஒருவராக இணைந்து செயற்பட்டவர்.
பின்னர் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள் எதுவுமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை விமர்சித்த எதிர்க்கட்சிகளுடன் அவர் இணைந்து கொண்டார்.

அரசுக்கு எதிரானவர்களுடன் இணைந்து கொண்டார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக எமது தேசிய நோக்கத்திற்கு அவர் துரோகமிழைத்தார்.

கேள்வி: இலங்கை அரசு அவர் தேசத்துரோகமிழைத்தார் எனக் கூறுகிறதே?

பதில்: பொன்சேகா அரசியலுக்கு வருவதற்குத் தீர்மானித்த தருணத்திலிருந்து அவர் எமது இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து பொது மக்களின் அனுதாபத்தைப் பெற முயன்றார்.

கேள்வி:இதன் காரணமாகவா அவர் கைது செய்யப்பட்டார்?

பதில்: அரசு எடுத்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவையல்ல.நாங்கள் சரியான விடயத்தையே செய்கிறோம். எவருக்கும் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான உரிமையுள்ளது. அந்த உரிமையைப் பயன் படுத்தும் போது சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். இராணுவத்தை அரசியல் மயப்படுத்தினார்

கேள்வி: பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

பதில்: அவர் மிகப் பெரிய பாதிப்பை இராணுவத்திற்கு ஏற்படுத்தினார். பல வருடங்களாக எமது இராணுவம் அரசியல் பக்கச்சார்பின்றிச் செயற்பட்டு வந்துள்ளது. முப்படைகளும் அவ்வாறே செயற்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக சரத்பொன்சேகா இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார்.
இராணுவத்திலிருந்து முற்றுமுழுதாக விலகிய பின்னரே அவர்  அரசியலில் ஈடுப்பட்டிருக்க வேண்டும். இராணுவம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அமைப்பு. அவர் அதில் 38 வருடங்களாகப் பணியாற்றியுள்ளார். இராணுவத் தளபதியாக அவர் பதவி வகித்துள்ளர். இராணுவத் தளபதியாகப் பணி புரியும் போது அவர் தொடர்ச்சியாக ஒழுக்க நெறி பற்றி தெரிவித்து வந்துள்ளார்.

எனினும் தனது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக அவர் இராணுவத்தைப் பயன்படுத்தியுள்ளார். தனிப்பட்ட நலன்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
பொன்சேகா சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைத் தனது அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்தினார்.அவர் தனது அரசியல் பிரசாரத்தை இராணுவத் தளபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்தே ஆரம்பித்தார்.இராணுவத் தளபதி என்பதால் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது இராணுவத் தளபதி என்ற காரணத்தினால் அரசு அவருக்கு ஒதுக்கிய வளங்களை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார். அவர் பல சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். வெறுமனே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி:அரசு இராணுவத்தை எம்போதும் உஷார் நிலையில் தயார் நிலையில் வைத்துள்ளதே. ஏன்?

பதில்:விடுதலைப் புலிகள் மீண்டும் வருவதற்கு தலைதூக்குவதற்கு  அனுமதிக்க முடியாது. முதலாம்கட்ட யுத்தம் முடிந்து விட்டது.இரண்டாவது கட்ட யுத்தம் வேறு வடிவத்திலிருக்கும்.இராணுவ நடவடிக்கைக்காக நாம் தயார் நிலை உயர் நிலையில் இருக்க வேண்டும். நாங்கள் அயர்ந்திருக்க முடியாது.

கேள்வி: யுத்தத்தில் ஈடுபடுவதை விட அமைதியைப் பாதுகாப்பது மிகவும் கடினமானதா?

பதில்: புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவதற்கான எமது திறமையையும் வழிமுறைகளையும் நாம் அதிகரிக்க வேண்டும். இராணுவப் புலனாய்வை இன்னும் பலப்படுத்த வேண்டும். தேசியப் புலனாய்வுக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த  வேண்டும். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தளங்களை அமைப்பதைத் தடுப்பதற்காக காடுகளை நாம் எமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்.

கரையோரப் பகுதிகளில் எமது ஆதிக்கம் அவசியம் கடல் வழியாக ஆயுதங்கள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக கரையோரப் பகுதிகளில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தவேண்டும். விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மூலம் பெருமளவு ஆயுதங்கள் ஆட்லரிகள் கொண்டுவரப்பட்டன என்பது எமக்குத் தெரியும்
விடுதலைப் புலிகளைப் பின்பற்றி புதிய குழுவொன்று ஆயுதங்களைக் கொண்டுவருவதைத் தடுப்பதற்கு கடலோரக் கண்காணிப்பு மிக முக்கியமானது.
இதேவேளை நாங்கள் இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவர விரும்புகின்றோம்.

எமது பாதுகாப்பு பிரசன்னம் என்பது பெருமளவிற்கு கண்களுக்குத் தென்படாததாகவும் புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் கவனம் செலுத்துவதாகவும் காணப்படும்.

பல நாடுகளில் வலுவான புலம்பெயர் சமூகம்

கேள்வி: இலங்கைக்கு வெளியே எஞ்சியுள்ள விடுதலை புலிகள் அமைப்பு ஆபத்தானதாகவுள்ளதா?

பதில்: விடுதலைப் புலிகள் இலங்கைக்கு வெளியே சிறந்த வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அவர்கள் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர். நிதி திரட்டும் வழிவகைகளையும் உருவாக்கியுள்ளனர்.பல நாடுகளில் வலுவான இலங்கைப் புலம் பெயர் சமூகம் உள்ளது. இவர்களுக்குள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளனர்.  நிதி திரட்டுவதற்கான திறமை அவர்களுக்கு உள்ளது. சிறந்த கப்பல் ஆயுதக் கொள்வனவுப் பிரசாரத் திறனுமுள்ளது.  விடுதலைப் புலிகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நியாயமான வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளனர்.  இலங்கைக்கு வெளியே பல விடுதலைப் புலிகள் இன்னும் செயற்படுகின்றனர்.  எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : உதயன்

கோப்பை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்














மும்பையில் நடந்த பரபரப்பான மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஐ.பி.எல்.,லில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தோனி பெற்றார்.இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., `டுவென்டி-20` தொடர் நடந்தது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

சச்சின் பங்கேற்பு: வலது கை விரல் பகுதியில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது மும்பை கேப்டன் சச்சின் பங்கேற்றார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி எதிர்பார்த்தது போல பேட்டிங் தேர்வு செய்தார்.

மந்தமான துவக்கம்: சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் இணைந்து மந்தமான துவக்கம் தந்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஹைடன் திணற, 4 ரன் தான் எடுக்க முடிந்தது. அடுத்த ஓவரில் மலிங்கா 2 ரன் தான் கொடுத்தார். பின் ஹர்பஜன் பந்தில் ஹைடன் ஒரு சிக்சர் அடித்து நிம்மதி தேடினார். மறுபக்கம் ஜாகிர் பந்தில் முரளி விஜய் ஒரு சிக்சர் அடித்தார். பெர்ணான்டோ வேகத்தில் விஜய்(26) அவுட்டானார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் ஹைடன்(17) வீழ்ந்தார். பெர்ணான்டோ பந்தில் பத்ரிநாத் தும்(14) அவுட்டாக, சென்னை அணி 11.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அதிவேக அரைசதம்: இதற்கு பின் தோனி, சுரேஷ் ரெய்னா இணைந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் ரன் மழை பொழிந்தனர். மும்பை அணி மோசமாக பீல்டிங் செய்ய, இரு முறை கண்டம் தப்பிய ரெய்னா கலக்கினார். ஜாகிர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் போலார்டு ஓவரில் 2 சூப்பர் சிக்சர் விளாசிய இவர், ஐ.பி.எல்., அரங்கில் 9வது அரைசதம் அடித்தார். 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்த இவர், ஐ.பி.எல்., பைனல்களில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். தோனி 22 ரன்களுக்கு ஜாகிர் பந்தில் வெளியேறினார். மார்கல் 15 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல்., பைனல்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ரெய்னா 57 (3 பவுண்டரி, 3 சிக்சர்), அனிருதா ஸ்ரீகாந்த் 6 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

மும்பை தோல்வி : இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் துவக்க வீரர்களாக டெண்டுல்கர் மற்றும் தவானும் களமிறங்கினர். தவான் ரன் ஏதும் எடுக்காமல் போலீங்கர் பந்தில் அவுட்டானார். நாயர் 27 ரன்களுக்கு அவுட்டானார். சச்சின் 49 ரன்களுக்கும் ராய்டு 20 ரன்களுக்கும், போலார்டு 27 ரன்களுக்கும் அவுட்டாயினர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடை ந்தது

முதல் இந்தியர் : பைனலில் சென்னை அணி வெற்றி பெற்றதன்மூலம், ஐ.பி.எல்., கோப்பை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வார்ன் (2008, ராஜஸ்தான்), கில்கிறிஸ்ட் (2009, டெக்கான்) கோப்பை வென்றனர்.

தமிழரின் பேரம் பேசும் பலமான சக்தியாக புலம் பெயர் சமூகமே உருவெடுக்கவுள்ளது



இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 144 ஆசனங்களையும், ஐ.தே.க 60 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு இலங்கை அரசுக்கு 6 ஆசனங்களே குறைவாக உள்ளது. இந்த ஆசனங்களை எதிர்த்தரப்பில் இருந்து பெறுவது அரசுக்கு அதிக சிரமமாக இருக்கப்போவதில்லை என்பது வெளிப்படையானது. அதற்கான அறிகுறிகள் கடந்த வியாழக்கிழமை ஏழாவது நாடாளுமன்றம் முதன் முதலாக கூடியபோதே தெரிய ஆரம்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் நுவெரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஐக்கிய தேசியக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமது ஆதரவுகளை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர். தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

தேசியப் பட்டியல் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட முறுகல்களே இந்த நிலைமைக்குக் காரணம். எனவே இவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு ஆறு ஆசனங்களை பெற்றுக்கொள்வதில் அதிக நெருக்கடிகள் இருக்கப்போவதில்லை. எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறப்போகும் அரசு அதன் மூலம் எதனை நிறைவேற்றப்போகின்றது? என்பதற்கான விடைகளை அனுமானிப்பது கடினமானதல்ல.

இலங்கையில் தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பில் கடந்த 17ஆம் திகதி வழங்கிய நேர்காண ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டத்தை இலங்கையில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்றம் உடனடியாக நீக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான மனித உரிமை மீறல்களுக்கு காரணம் என அச்சபை மேலும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது ஐ.ம.சு.கூ. தற்போது பெற்றுக்கொண்டுள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதில் மேற்குலகம் தீவிரமாக குரல்கொடுத்து வருகின்றது.

மேற்குலகத்தின் இந்த கோரிக்கைகளுக்கு பின்னால் பூகோள அரசியல் நலன்சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும் போதும், அதனை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்றே கூறலாம். எனினும் மேற்குலகத்தை வெளியேற்றிய ஆசிய பிராந்திய வல்லரசுகள் இலங்கையில் அதிக அழுத்தங்களின் ஊடாக தமது ஆளுமைகளை அதிகரித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென்னிலங்கையை தனது முழுமையான ஆளுமையின் கீழ் கொண்டுவந்துள்ள சீனாவின் வடபகுதி நோக்கிய நகர்வை தடுப்பதற்கு இந்தியா கடுமையாக முயன்று வருகின்றது. யாழில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் இருந்து, இந்தியாவுக்கான நுழைவு அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அலுவலகத்தை திறக்கும் வரையிலும் வடபகுதியில் இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரசு விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தமிழ் மக்களின் மனங்களை வெல்லாது நிலத்தை ஆக்கிரமிக்கும் இந்திய அரசின் முயற்சிகள் எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமானது என்பதை காலம் விரைவில் உணர்த்திவிடும்.

சிங்கள மக்களின் பெருமளவானோர் இந்தியாவின் தலையீடுகளை விரும்பப்போவதில்லை. இந்த நிலையில் தான் இந்திய அரசு திருமலையில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அனல் மின்நிலையத்தின் பணிகளும் நான்கு வருடங்கள் பின்போடப்பட்டுள்ளதாக இந்திய என்.ரி.பி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடிகளை காரணமாக இந்த நிறுவனம் முன்வைத்துள்ள போதும், உண்மையான காரணங்கள் வேறு என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதாவது இத்திட்டத்துக்கான சில ஒப்பந்தங்கள் இன்னும் பூர்த்தியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் காலூன்றும் இந்திய அரசின் திட்டத்திற்கு விழுந்த முதல் அடியாக இது கொள்ளப்பட்டாலும், வடக்கிலும் வருங்காலத்தில் இவ்வாறான புறம்தள்ளும் முயற்சிகள் நடைபெறலாம் எனவும் கருதப்படுகின்றது.

அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா இருக்கும் போது திருமலையில் இந்தியா காலூன்றுவதை சீனா விரும்பப்போவதில்லை. மேலும் புலம்பெயர் தமிழ் சமூகத்தை புறம்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதும் கேள்விக்குறியானது. எனினும் அதனை மேற்கொள்ளும் முயற்சிகள் தாயகத்தில் பலமாக மேற்கொள்ளப்படுகின்றன.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியத்திற்கு சார்பான ஊடகங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் அரசியல் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் தரப்பின் ஊடாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக புலம்பெயர் தமிழ் சமூகம் தயாராகி வருகின்றது.

வளமான ஊடகத்துறை, பலமான அரசியல் கட்டமைப்பு என தெளிவான ஒரு கட்டத்தின் ஊடாக மீண்டும் பயணத்தை தொடரவேண்டும் என்ற உந்துதல்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் செறிந்துள்ளன. அதுவே தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேரம்பேசும் ஒரு பலமான சக்தியை தமிழ் மக்களுக்கு வழங்கப்போகின்றது என்பதை நாம் மறுக்க முடியாது.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி: வீரகேசரி

Saturday, April 24, 2010

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்














எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

கிளர்ச்சியாளன்
வழக்கறிஞர்-சேசுபாலன்

மற்றும் குழுமம்.

“தாய்த் தமிழ்நாடு"

பிரபாகரன் - சில குறிப்புகள்














* தம்பி` எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! [Prabakaran]

    * அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

    * வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், `தம்பி` என்றார்கள்.
எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

    * பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ``போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்`` என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ``எடுத்தால் எங்கே வைப்பது`` என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

    * பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் `ஏழு தலைமுறைகள்`. அதில் `இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்` என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

    * மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

    * ``ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?`` என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ``யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.``

    * ``பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை`` என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

    * அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

    * எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. `தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது` என்பது அவரது அறிவுரை!

    * ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

    * `இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி` என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

    * போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், `பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு` என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

    * ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

    * பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
    * பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ``தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்`` என்பார்!

    * தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

    * பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

    * அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

    * `உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்` என்றார் பிரபாகரன்!

    * பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

    * பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

    * தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ``நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!``

    * ``ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?`` என்றுஅடக்க மாகச் சொல்வார்!

    * `தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்` என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

(நன்றி: ஆனந்த விகடன்)

எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான்














எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்.

தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

கடைசியாக எமக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பமாக நாடு கடந்த தமிழீழ அரசு விளங்குகின்றது. அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொதுத் தேர்தலின் பின்னர் தமிழீழத் தனிநாட்டிற்கான ஒரு அரசு நாடு கடந்து அமையப் போகின்றது என்பது ஈழத் தமிழினத்திற்கு ஒரு இனிப்பான செய்தியாக அமையப் போகின்றது.

நயவஞ்சகத்தனத்தால் எமது விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்களிடத்தில் தனிநாட்டுக்கான அவா-விருப்பம்-தேவை அற்றுப் போய்விட்டது என்ற சிங்களத்தின் கபடத்தனமான பிரசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்குகொண்டு- அலைஅலையாக நீங்கள் அளிக்கும் வாக்குகள் சிங்களத்தின் உச்சிமண்டையை மீண்டுமொரு தடவை பிளந்தே தீரும்.

புலம்பெயர் தமிழர்களே….

சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென சர்வதேசத்தின் முன் சிங்களம் செய்துவரும் பொய் பிரச்சாரங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள்.

சிங்களத்தின் கொடூர கரங்களிலிருந்து தப்பித்து நீங்கள் அடைக்கலம் புகுந்துள்ள நாடுகளில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்து உங்களது உரிமை அவாவை உலகிற்கு எடுத்துக் கூறுங்கள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டதென்று சொன்னவர்களின் முகத்தில் ஓங்கி அறையுங்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதியதொரு பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் அண்ணன் உருத்திரகுமாருக்கு கைகொடுங்கள். அவரது உன்னதமான பணி எழுச்சிகொள்ள வழிசெய்யுங்கள்.

நாங்கள் பிரிந்து நிற்பது இனியும் வேண்டாம். புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வடிவம் கொடுப்போம். எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவன் நேரடியாக வராவிட்டாலும் அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்.

சிந்திப்போம்…விரைந்து செயற்படுவோம்..நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதன் மூலம் தனிநாட்டுக்கு சிறந்த அத்திபாரத்தை இடுவோம்.

நெதர்லாந்திலிருந்து
தர்சானா