Monday, April 26, 2010
பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கையாலாகாத ஒரு தமிழனின் கடிதம்
அன்புள்ள சுபவீ வணக்கம்.
கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது.
வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
இப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை.
பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.
"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, `உதவிட இயலுமா?` என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?
சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே `இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்` என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?
இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.
கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், அருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார்.
உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?
நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.
பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.
ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?
நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.
நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம்.
நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். “இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?” என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.
சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு,
கையாலாகாத ஒரு தமிழன்
வெல்க தமிழ்! வீழ்க தமிழன்!
நன்றி : கீற்று
Subscribe to:
Post Comments (Atom)
பகிர்வுக்கு நன்றி, சுபவீ என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் அவர் மனசுக்குத் தெரியும், தான் தவறான பாதையில் போவது குறித்து
ReplyDeletegood article
ReplyDelete-tsekar
உண்மைகள் உண்டு மறுக்க முடியாது. ஆனால் இதை வலைபின்னல் சிக்கலாக மாற்றிக்கொண்டுருப்வர்கள் யார் என்பதும் உங்களுக்குத் தெரியுமே?
ReplyDelete?நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள்./
ReplyDeletehttp://tinyurl.com/y853e5r
அட போங்கய்யா....எப்ப பார்த்தாலும் இந்த பன்னிகளைப் பத்தி பேசிக் கொண்டு.. உங்க நேரத்தை வீணடிக்கிறீங்களே பாஸ்...
ReplyDeleteஇவனுகளெல்லாம் மனுசனுகளா?
மலையகத்தமிழன் இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தானெல்லாம் என்ன செய்தீர்கள்? ஆயிரம் விதமாக வம்பளப்பதெல்லாம் இருக்கட்டும். பார்வதியம்மாள் வருகிறார் என்பதை ஏன் முன்கூட்டியே சொல்லியிருக்கக்கூடாது என்பதற்கு என்னதான் பதில். எதிர்க் கேள்விகளைத் தவிர.
ReplyDelete