Thursday, April 22, 2010

பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பியது கொடூரமானது - பத்திரிகையாளர் ஞாநி கடும் கண்டனம்














மருத்துவ சிகிச்சை பெற சென்னைக்கு வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை திருப்பியனுப்பிய இந்திய, தமிழக அரசுகளை பிரபல பத்திரிகையாளர் ஞாநி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் குமுதம் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :

“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேஷியாவுக்கு செல்ல ராஜபக்சேவே அனுமதிக்கிறார். பாகிஸ்தானுடன் கடும் பிரச்சினைகள் இருந்தபோதும், இந்தியாவில் சிகிச்சை பெற ஏராளமான பாகிஸ்தானியர்களை அனுமதிக்கிறோம்.

பார்வதியம்மாளுக்குக் காலையில் விசா கொடுத்துவிட்டு மாலையில் இந்தியா மறுத்தது கடும் கண்டனத்துக்குரியது. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருமே கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று மருத்துவ சிகிச்சை பெற எவருக்கும் உரிமை உண்டு. இது அடிப்படை மனித உரிமை.

இன்னொரு பக்கம் பார்வதியம்மாள் ஏன் இப்படி மனித நேயமற்ற இந்திய - தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகளை நம்பி அவதிப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது..

இந்தியாவில்தான் சிகிச்சை பெற வேண்டுமென்பது பார்வதியம்மாளின் விருப்பமென்றால் அதை இந்திய, தமிழக அரசுகள் தடுப்பது கொடூரமானது. ஜெயலலிதா காலத்தில் பிரபாகரனின் பெற்றோர் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்தான் இப்போதும் பார்வதியம்மாள் தடுக்கப்பட்டதற்குக் காரணம் என்று கலைஞர் விளக்கியிருக்கிறார்.

இவர் ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகப் போகிறதே.. ஏன் அந்தக் கடிதத்தை இவர் இதுவரை ரத்து செய்யவில்லை..? பார்வதியம்மாள் விஷயத்தில் சட்டமன்றத்தில் வாயைத் திறந்தவர் நளினி விஷயத்தில் ஏன் இன்னும் இறுக்க மூடிக் கொண்டே இருக்கிறார்?”

இவ்வாறு ஞானி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment