Friday, April 23, 2010

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் மரணம்














பிரபல மலையாள நடிகரான ஸ்ரீநாத் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கொத்தமங்கலம் என்னும் ஊரில் இன்று காலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் அவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான `சிகார்` என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீநாத் அங்கு வந்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வந்தார்.

அவருடைய உடலை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள். ஆனாலும் மேல்விசாரணையில்தான் எதுவும் தெரிய வரும் என்று சொல்லப்படுகிறது.

50 வயதான ஸ்ரீநாத் 1980-களில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் ஸ்ரீநாத் தமிழில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த `இரயில் பயணங்களில்` படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

`ஷாலினி எண்டே கூத்துக்காரி`, `எது நிஜங்களூடே கதா`, `ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு`, `கிரீடம்` என்ற புகழ் பெற்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாளத்தில் கடைசியாக `கேரளா கபே` என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மலையாளப் படவுலகில் ஸ்ரீநாத் நுழைந்தபோது தன்னுடன் ஜோடியாக நடிக்கத் துவங்கிய பிரபல இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவின் தங்கையான சாந்தி கிருஷ்ணாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் சில வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஸ்ரீநாத் இதன் பின்பு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீநாத் அரசியலிலும் கொஞ்சம் ஆர்வமாக இருந்தார். கடந்த பொதுத்தேர்தலில் அட்டிங்கல் தொகுதியில் சிவசேனா வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சமீப நாட்களில் மிக அதிகமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். சிறந்த டிவி நடிகருக்கான மாநில விருதை ஸ்ரீநாத் பெற்றிருக்கிறார்.

இவருடைய மரணத்துக்கான காரணத்தை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.

ஸ்ரீநாத்தின் மரணம் குறித்து நடிகர்கள் மோகன்லால், காலாபவன் மணி, மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் இன்னசென்ட் என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்ரீநாத் தமிழில் கதாநாயகனாக நடித்திருந்த `இரயில் பயணங்கள்` திரைப்படம்  வெள்ளிவிழா  கண்ட  புகழ்  பெற்றத்  திரைப்படம்.  டி.ராஜேந்திரின்  இரண்டாவது  திரைப்படமான  இப்படத்தின்  பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட். `இரயில் பயணங்கள்` படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஜோதியும் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கேன்ஸர் நோயினால் மரணடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment