Saturday, April 24, 2010

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்














எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

கிளர்ச்சியாளன்
வழக்கறிஞர்-சேசுபாலன்

மற்றும் குழுமம்.

“தாய்த் தமிழ்நாடு"

10 comments:

  1. excellent article man,It really kindles my mind......

    ReplyDelete
  2. நண்பனே நீங்கள் எழுதிய இந்த கட்டுரைக்கு ஒரு சிறு துளி கண்ணீரும், பெருமூச்சும் தவிர.. வேறு எதுவும் செய்ய முடியாத தூர்பாக்கிய நிலைக்கு நாம் இருக்கிறோம்..

    ReplyDelete
  3. இங்கேயும் ஒரு ஆண்டனி.

    ReplyDelete
  4. நண்பா ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழ்ந்த அர்த்தங்கள், வலிகள் புரியமுடிகிறது ஆனால் என்ன ஒன்றும் செய்யமுடியாத வலி இருக்கத்தான் செய்கிறது
    \\உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும்\\

    நம் தலைவரின் வருகைக்கு காத்திருப்போம்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  5. prabaharan we all true tamils stand behind you.

    ReplyDelete
  6. OHHHH god?pirabaharan became the leader by killing so many leaders.Amirthalingam,uma maheswaran,sri sabaratnam.padmanaba,etc.

    ReplyDelete
  7. /* OHHHH god?pirabaharan became the leader by killing so many leaders.Amirthalingam,uma maheswaran,sri sabaratnam.padmanaba,etc. */

    ha ha ha ha

    /*Amirthalingam,uma maheswaran,sri sabaratnam.padmanaba,etc.*/

    what do you know about these peoples, nothing other than Knownig these bullshit cut-throat names and writing in the post never mean you know everything

    Grow man grow

    பிரபாகரன் எங்கள் தமிழ் இன தேசிய தலைவர், எங்கள் தமிழ் இனத்தின் உண்மையான வித்துக்கு தான் இது புரியும் தெரியும், நீங்க எப்படி?

    ReplyDelete
  8. So if you know pls let me inform something about these ppl.It clearly shows that u dont know anything other than the armed struggle period of the sri lankan tamil struggle.They are not the self declared leaders of the tamils like your leader.Who elected him as leader he himself declared that he is the leader and he killed everyone who opposed him or even have any opinion against him

    ReplyDelete
  9. Praba didn't have a chance like TN leaders to enjoy life because from Day-1 Praba was a murderer and always hunted by Police/Army and other groups..so praba didn't have a chance to lead a normal life..
    that is the main reason Praba cannot accept any solution other than Tamil Eelam.. in Tamil Eelam he can set the laws and have a protection for himself...
    given chance Praba sent his kids to Europe and grooming them into next leaders of LTTE..
    thank god the whole group was eliminated..
    Praba is an armed Karunanithi..that is all...
    Karunanithi is smart.. and Praba is not..

    ReplyDelete
  10. சிவா மற்றும் வெத்துவேட்டு, முதலில் தமிழனாக தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள்.

    பிராபகரன் தன்க்காக போராடினார் என்னும் முட்டாள் தனமான யோசனை கருணாவை தலைவராக கொண்ட உங்களைப் போன்றவர்களுக்கு தான் தோன்றும். ஏன் இன்று கூட தாயார் திரும்ப அனுப்ப பட்டதற்கு காரணம் ஜெயா என்கிறார். ஆனால் 1970களில் குட்டிமணியை தமிழ்நாட்டுக்குள் விடாமல் தடுத்த காரணம் என்ன என்று கேட்டு சொல்லுங்கள் சீறிசபா போன்றோரின் கயமைத்தனம் வெளியில் தெரியும்.

    ReplyDelete