Monday, April 19, 2010

பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட்ட விஷயத்தில் கருணாநிதி சொல்வது உண்மையா?

தனிமனித விவகாரங்கள், அந்தரங்க விஷயங்கள் (சில விதிவிலக்குகள்) தவிர வேறு எதுவும், ஒரு மாநில முதல்வருக்குத் தெரியாமல் அந்த மாநிலத்தில் நடப்பதில்லை. உளவுத் துறை, காவல் துறை தவிர நிர்வாகத் துறையிலும் அவருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தகவல் வழங்கப்பட்டே வருகிறது. மாவட்ட அளவில் நடக்கும் அனைத்தையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கவனத்துக்குப் போய்விடுகின்றன. அவர்களும் முதல்வருக்கு தகவல் தெரிவித்தபடி உள்ளனர். போதாததற்கு பெரும்பாலான தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

விமான நிலையம் போன்ற முக்கியப் பகுதிகளின் நிகழ்வுகள் 24 மணி நேரமும் மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படுகிறது. 5 செயலாளர்கள், 2 தனிச் செயலாளர்கள், எப்போதும் நிழலாய் உதவியாளர், அவர்களுக்குக் கீழ் பணியாளர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் என பெரிய அலுவலகம் முதல்வருடையது. எனவே எந்தத் தகவலும் முதல்வர் அலுவலகத்துக்குத் தெரியாமல் போவதில்லை.

பார்வதி அம்மாள் விவகாரத்தில் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதோ, தமிழக அரசுக்குத் தெரியாமல் அனைத்தும் நடந்துவிட்டது என்பதோ நம்பத் தக்கதல்ல என்பதோடு, ஒரு மாநில அரசு நிர்வாகத்தையே கேலிக்குரியதாக்கியுள்ளது.

இந்த விஷயத்தில் முதல்வர் சொல்வதில் நிறைய முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன. பார்வதி அம்மாள் வந்த விமானம் மீனம்பாக்கத்துக்குள் வருவதற்கு முன்பே குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிந்துவிட்டது. உடனடியாக சென்னை புற நகர காவல் ஆணையர் ஜாங்கிட் மீனம்பாக்கத்துக்கு விரைந்து வந்துவிட்டார். பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுவிட்டனர். விமான நிலையத்துக்குள் உரிய அனுமதி அட்டையுடன் அந்த நேரத்தில் நுழைய முயன்ற வைகோ – நெடுமாறன் தடுக்கப்பட்டனர். பின்னர் பெரும் தகராறு, வைகோவின் வாதம் என பரபரப்பாக இருந்தது விமான நிலையம்.

முதல்வருக்கு இந்தத் தகவல்களை சொல்லாமல் கமிஷனர் ஜாங்கிட் மறைத்துவிட்டார் என்கிறாரா கருணாநிதி?

பார்வதியம்மாள் பயணித்த விமானம் வந்த நேரம் 10.30. திருப்பி அனுப்பப்பட்டபோது நேரம் 12. 45. இரண்டேகால் மணிநேரம் விமான நிலையத்தில் அவர் இருந்துள்ளார். இவரது தலைமையில் இயங்கும் காவல் துறைதான் மொத்தப் பிரச்சினையையும் கையாண்டுள்ளது. அதுவும் மாநகர கமிஷனரே நேரில் வந்துள்ளார். ஆனால் இவை எதுவுமே தனக்குத் தெரியாது என்று கருணாநிதி கூறுவது, அவரது ஆட்சியின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன?

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஜெயலலிதாதான் காரணமா?

இதை விட முட்டாள்தனமான ஒரு காரணத்தை வேறு யாரும் கற்பனை செய்து கூட சொல்ல முடியாது. ஜெயலலிதா புலிகளுக்கு எதிரானவர். அவர் 2003ல் இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என்பது உண்மையாக இருந்தாலும், அதன் பிறகு முதல்வராகி இன்னும் தொடர்வது கருணாநிதிதானே!

இந்த ஏழு வருடங்களாக இப்படியொரு எச்சரிக்கைப் பட்டியல் இருப்பதே தனக்குத் தெரியாது என்கிறாரா கருணாநிதி?

பிரபாகரன்தான் புலியே தவிர, அவரைப் பெற்ற தாயும் தந்தையும் புலிகள் அமைப்புடன் எந்தத் தொடர்பிலும் இல்லையே. எந்த அடிப்படையில் ‘அவர்களை இந்தியாவுக்குள் மீண்டும் அனுமதிக்கக் கூடாது’ என்று ஜெயலலிதா கடிதம் எழுதினார்? எதற்காக அந்த அர்த்தமற்ற கடிதத்தை இதுவரை காப்பாற்றி வந்தார் கருணாநிதி? இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு முறை கூட, இன்னுமொரு கடிதம் எழுதி, ஜெயலலிதாவின் கடிதத்தைச் செயலிழக்க வைக்க வேண்டும் என்றே தோன்றவில்லையா இவருக்கு?

மத்தியில் ஆட்சியே இவருடையதுதானே… தனது மகன் மகளுக்கு பதவி பெற டெல்லியில் முகாமிட்டு பெரும் போராட்டமே நடத்தியவருக்கு இதெல்லாம் நினைவிலில்லாமல் போனதில்ஆச்சரியமில்லை.

இவர்கள் சண்டி மாடுகள் மாதிரி. எப்போதும் ஏதாவது ஒரு சாக்கு வேண்டும், தங்கள் கையாலாகாத்தனம், சுயநலத்தை மறைக்க. அடுத்தவரைக் குறை சொல்லி, அடுத்தவரோடு ஒப்பிட்டு, அடுத்தவர் மீது பொறாமைப்பட்டே தமிழர் வாழ்வை நாசமாக்கிய கும்பல்தான் கருணாநிதி – ஜெயலலிதா மற்றும் அவர்களது அடிவருடிகள்.

-வினோ

நன்றி : என்வழி

3 comments:

  1. கருணாநிதி போன்ற இழி பிறவிகளிடமிருந்து இதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது என்பது வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்தப் பாடம்.

    ReplyDelete
  2. thamil natla current cut na athukku jayalalitha karanam, parvathi amma thirippi annuppanathukku jayalalitha karanam
    elangai ranuvathukku india help panna athukkum jayalalitha karanam. appadina kalanjar 4 varushama inna tha pannittu irrukkaru, verum kaditham mattum tha elithittu irrunthara???????

    ReplyDelete
  3. >>பார்வதி அம்மாள் விவகாரத்தில் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதோ, தமிழக அரசுக்குத் தெரியாமல் அனைத்தும் நடந்துவிட்டது என்பதோ நம்பத் தக்கதல்ல என்பதோடு,

    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கும் முதல்வர் கருணாநிதி

    ReplyDelete