Saturday, April 17, 2010

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்













தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.

திருமதி பார்வதியம்மாள் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவு இந்திய அரசு எடுத்திருந்த முடிவு என்றாலும், அதில் தமிழக அரசிற்கு பங்கிருப்பதை தட்டிக் கழிக்க முடியவில்லை. இவ்வாறு, தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக மனித நேயமற்ற செயல்களை இந்திய அரசு செய்து வருவதை உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு கண்டிக்க வேண்டும்.

இந்திய, தமிழக அரசுகளை கண்டிப்பதோடு நின்று விடாமல், இந்த சம்பவத்திற்கான முழுக் காரணிகளையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். இந்த ஆய்வின் முடிவுகள், உணர்வாளர்கள் தம்மை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அல்லாமல் சமரசவாதத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.

முறைப்படி இந்திய அரசுக்கு விண்ணப்பித்து, விசா பெற்று தமிழகம் வந்திருந்த அவரை, வந்த விமானத்திலிருந்து கூட கீழே இறங்க விடாமல் செய்த செயல் மனித நேயமற்றதாகும். ஏற்கெனவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தொடர்ந்து விமானப் பயணத்தை மேற்கொள்ளவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில் கொள்ளாமல், அதே விமானத்தில் அவரை வைத்திருந்துள்ளனர், இந்திய அரசின் குடியுறவுத் துறை அதிகாரிகள்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று இப்போது கூச்சலிடுகின்ற அரசு, அவரது விண்ணப்ப விசாவை தொடக்க நிலையிலேயே மறுத்திருந்தால், நோயுற்ற வயதான அப்பெண்மணி நெடுந் தொலைவிலிருந்து இங்கு வந்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், அவரை அங்கிருந்து வரவழைத்து ‘அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பி, ஏற்கெனவே நோயுற்ற அவருக்கு மன உளைச்சலையும், தேவையற்ற உடற்ச்சோர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இதே போல், சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வந்த இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களையும், சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு திருப்பி அனுப்பியதையும் நாம் அறிவோம்.

திருமதி. பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வரும் செய்தி, மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது தவறு. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமே தெரிந்த இந்த கமுக்கமான தகவல் பரவலாக உணர்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், உணர்வாளர்கள் விமான நிலையத்தில் உரிய நேரத்தில் கூடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை. ஓரளவு திரண்ட உணர்வாளர்களை வைத்துக் கொண்டு கூட எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்காமல், இத்தலைவர்கள் பேட்டி மட்டும் கொடுத்து விட்டு கலைந்து சென்றதும் வருத்தமளிக்கிறது.

திருமதி பார்வதியம்மாள் தமிழகம் வருவது குறித்து தகவல் தெரிவிக்க முடியாமல் போயிருந்தாலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தகவலாவது உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், பெருந்திரளான உணர்வாளர்களைக் கொண்டு விமான நிலையத்திலேயே போராட்டங்களை நடத்தி திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு தரையிறங்க அனுமதியைப் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு நேற்று தட்டிப்பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

சிலர் கருதுவது போல், உணர்வாளர்கள் மிகுதியாக வந்திருந்தால், திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருந்திருக்குமே அன்றி பாதகமாக இருந்திருக்காது என்பதை இத்தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. திருமதி பார்வதியம்மாள் செல்கின்ற வாகனத்தை உணர்வாளர்கள் மறித்திருப்பார்கள் என இத்தலைவர்கள் கருதுகின்றனரா என்பதும் விளங்கவில்லை.

புதிய இயக்கமாக இருந்தாலும் சமரசவாதங்கள் தமிழக அரசியலை எவ்வாறு சீரழித்தன என்பதை இளந்தமிழர் இயக்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. கமுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் வழியை, தமிழீழ தேசியத் தலைவரும் மாவீரன் முத்துக்குமாரும் நமக்குக் காட்டவில்லை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். போராடி நம் உரிமைகளைப் பெறும் வழியையே நமக்கு அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். நாமும் அவ்வழியில் போராட வேண்டும் என்பதே நமது விருப்பம். நேற்று அவ்வாறு போராடியிருந்தால், நம்மால் நிச்சயம் வென்றிருக்கவும் முடியும்.

தோழமையுடன்

க.அருணபாரதி

ஒருங்கிணைப்பாளர் - இளந்தமிழர் இயக்கம்

4 comments:

  1. அடுத்தவன் பேர் வாங்கீட்டா என்னங்க பண்றது, சுய நல அரசியலின் மோசமான முகங்களில் இதுவும் ஒன்னு...

    ReplyDelete
  2. rakasiyam kapthil naam than uruthiyaka erunthom matrapadi payer vangi viduvarkal enpatharkkaha alla.K.Rajendran. marupadiyum muyarchiseithu vetri peruohm

    ReplyDelete
  3. சட்டம்-ஒழுங்குக்குக் குந்தகம் வந்துவிடுமாம்...! அடேங்கப்பா வல்லரசு!

    ReplyDelete
  4. வழக்கம் போல் தமிழ்தலைவர்கள் பேட்டி கொடுத்தே....... சரி விடுங்கள்.

    We love India:(((......

    ReplyDelete