Tuesday, April 27, 2010
இந்தியாவின் ஒத்துழைப்பால்தான் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்தது; கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்
இந்திய அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பால்தான் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்ததாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சே நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ‘’விடுதலைப்புலிகளை முறியடிக்க 4 ஜனாதிபதிகள் தலைமையில் அமைந்த 8 அரசுகள் முயன்றன. ஆனால் முடியவில்லை. ராஜபக்சே பதவி ஏற்றதும் இது பற்றி ஆராயப்பட்டது.
முடிவில் ராணுவத்தின் பலத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பலன் கிடைத்தது. முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தில் கூடுதல் ராணுவ வீரர்களை நிலை நிறுத்தினோம்.
ஒவ்வொரு மாதமும் தலா 5 ஆயிரம் பேரை படையில் சேர்த்தோம். இதனால் மூன்றே வருடங்களில் வீரர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமானது.
இந்தியா உள்பட பல நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. எடுக்கப்படும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் உடனுக்குடன் இந்தியாவிடம் விளக்கப்பட்டன. போர் நடக்கும் சமயத்தில் இந்தியா மிகுந்த அழுத்தத்தையும் கொடுத்தது. அதை அதிபர் ராஜபக்சே சாதூரியமாக எதிர்கொண்டார்.
நான், பசில் ராஜபக்சே, வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியாவுடன் தினமும் பேசினோம். இந்தியாவின் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன் இருவரும் எங்களுக்கு ஒத்துழைத்தனர்.
முக்கிய விவகாரம் எழுந்த போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். இதனால் இலங்கை ராணுவத் தாக்குதல்கள் இடையூறு இல்லாமல் நடந்தன. இந்த ஒத்துழைப்பே விடுதலைப்புலிகளை வெல்வதற்கு காரணமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment