Friday, April 30, 2010

‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் குடும்பத்துடன் தலைமறைவு..!

விஜய் டிவியில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராம்ஜி கடந்த ஒரு மாத காலமாக குடும்பத்துடன் தலைமறைவாக இருந்து வருவதாக டிவி வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.


‘டைம் பிரேம்ஸ்’ என்ற கம்பெனியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சித் தொடர்களை விஜய் தொலைக்காட்சியில் நடத்தி வந்தவர் ராம்ஜி. முதல் முறையாக ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது அதனை இயக்கம் செய்தவரும் இவரே.

அதற்குப் பின் டி.ராஜேந்திரை வைத்து ஒரு டாக் ஷோ.. ‘குற்றம் – நடந்தது என்ன..?’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘கனா காணும் காலங்கள்’, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘யாமிருக்க பயமேன்’ என்று பல தொடர்களை விஜய் டிவிக்காக தயாரித்தவர் இவர். ஜீ தமிழ்த் தொலைக்காட்சிக்காக ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற தொடரையும் தயாரித்தார்.

சமீப காலமாக இவர் பெரும் கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வந்ததாகச் சொல்கிறார்கள். சீரியல்களில் பணியாற்றிய டெக்னீஷியன்கள், தனது அலுவலக ஊழியர்கள் என்று பலருக்கும் சம்பளப் பாக்கியும் வைத்திருக்கிறார். ஏற்கெனவே ஒளிபரப்பாகி முடிந்த சீரியல்களில் நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கும்கூட இன்னமும் பண பாக்கி இருக்கிறதாம்.

ராம்ஜி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘கதையல்ல நிஜம்-இரண்டாம் பாக’த்தையும் தயாரித்து இயக்கி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதலே தனது இரண்டு அலுவலகங்களையும் இழுத்து மூடிவிட்டு வீட்டையும் பூட்டிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். சென்ற மாத சம்பளத்தைக்கூட தனது அலுவலக ஊழியர்களுக்குக் கொடுக்காததால் அவர்களும் தற்போது பரிதவிப்பில் உள்ளார்கள்.

திடுதிப்பென்று இவர் எடுத்த இந்த முடிவினால் ஆடிப் போன விஜய் டிவி இவருடைய தயாரிப்பில் இருந்த ‘யாமிருக்க பயமேன்’, ‘கதையல்ல நிஜம்’ தொடர்களை ஆன்ட்டனி என்பவரிடம் தயாரிக்கும்படி தள்ளி விட்டிருக்கிறதாம்.

வட்டித் தொகையுடன் சேர்த்து கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கும் மேல் கடனாளியாக இருக்கும் ராம்ஜியிடம் கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது “பணத்தைத் திருப்பிக் கேட்டால், தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பதிலுக்கு அவர்களையே மிரட்டினாராம்..!

தற்போது ராம்ஜி சொந்த ஊருக்கே போய்விட்டதாகச் சொல்லப்பட்டாலும் சென்னையில் தனது மனைவியுடன் பல்வேறு ஹோட்டல்களில் மாறி, மாறி தங்கி வருவதாக அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தொடர்ச்சியாக பத்தாண்டுகளாக சீரியல்களைத் தொடர்ந்து தயாரித்து வந்த ராம்ஜிக்கு, இந்த அளவு கடன் தொகை எப்படி வந்தது என்பது தெரியாமல் முழிக்கிறது தொலைக்காட்சி வட்டாரம்..!

இவருடைய கதையை வைத்தே `கதையல்ல நிஜம்`  நிகழ்ச்சியில் ஒரு வார எபிசோட் எடுக்கலாம் போலிருக்கிறது..!

1 comment:

  1. இந்தக் கதையும் நல்லாத்தான் இருக்கு..! கதையல்ல நிஜம் டீம் இதையும் எடுக்குமா..?

    ReplyDelete