Wednesday, April 21, 2010

அன்றைய இரவில் பார்வதியம்மாளுக்கு விமானத்தில் நடந்தது என்ன..?














பக்கவாதம், மறதி, உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வியாதிகளால் பார்வதி அம்மாளுக்கு மலேசியாவிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கே சென்னையில் உள்ள மருத்துவ வசதிகளை சுட்டிக்காட்டி செல்லும்படி வலியுறுத்தியுள்ளார்கள்.

அதனால்தான் மலேசியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சிலர், சிவாஜிலிங்கத்தின் உறவினர்களோடு பேசி, அவரைச் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார்களாம்.. பார்வதி அம்மாளைத் தாங்கிய விமானம் சென்னை வந்திறங்கிய உடனேயே அவரை விமானத்தில் இருந்து கீழே இறங்க விடாதபடி அதிகாரிகள் கெடுபிடி செய்ய..

அந்த அம்மாளின் உதவிக்காக உடன் வந்திருந்த விஜயலட்சுமி என்ற பெண், “எதற்காக அனுமதி மறுக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். “பார்வதி அம்மாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்” என்றார்களாம் விமான நிலைய அதிகாரிகள். அதோடு அதே விமானத்தில் பார்வதி அம்மாளை திருப்பியனுப்பும் முடிவை அவர்கள் சொல்ல..

பயணக் களைப்பில் இருந்த அந்த மூதாட்டி, “செத்த நேரம் ஓய்வு எடுக்கணுமே?” என்றாராம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் பார்வதி அம்மாளுக்கு வழங்கப்பட்ட விசாவின் காலக்கெடுவும் அன்றோடு முடிந்திருந்த நிலையில், அங்கே திரும்பிச் செல்வதும் சாத்தியமற்றதாக.. விமான நிலைய அதிகாரிகளிடம், “புலிகள் இயக்கத்தில் பார்வதி அம்மாள் உறுப்பினராக இல்லை என்பதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்கெனவே விசாரித்துவிட்டது. அதன் பிறகே அங்கிருந்து வெளியே செல்ல ஆறு மாத விசா கிடைத்தது. இதற்கிடையில் மலேசிய விசாவும் கிடைத்துவிட்டது. அதனால் பார்வதி அம்மாள் வேறு எந்த நாட்டுக்குமே போக முடியாது” என்று சொல்லி மறுபடியும் அனுமதிக்காகப் போராடியிருக்கிறார் விஜயலட்சுமி.

அதற்கும் அசைந்து கொடுக்காமல், பார்வதி அம்மாளை நள்ளிரவில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

பார்வதி அம்மாள் போன வேகத்தில் திரும்பி வந்ததைக் கண்ட மலேசிய அரசு அவசர கதியில் அவருக்கு ஒரு மாத கால விசாவை வழங்கியுள்ளது. அங்கு போய் இறங்கியதுமே அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

“ஐயா.. ஐயா..” என தன் கணவர் வேலுப்பிள்ளை நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தாராம் பார்வதி அம்மாள். “சென்னைக்குப் போகலையா..? என்னை எப்போ சென்னைக்கு அழைச்சுட்டுப் போகப் போறீங்க..?” என கேட்டிருக்கிறார்.

சென்னை போய் திரும்பி வந்ததே அவருக்கு முழுமையாகப் பதிவாகவில்லையாம். அதை மெதுவாக எடுத்துச் சொன்னதுமே, “எதுக்கு அனுப்புனாங்க.. அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. அவருக்கு என்ன பண்ணிட்டோம்..?” என கலங்கியிருக்கிறார்.

1 comment:

  1. //பார்வதி அம்மாள் போன வேகத்தில் திரும்பி வந்ததைக் கண்ட மலேசிய அரசு அவசர கதியில் அவருக்கு ஒரு மாத கால விசாவை வழங்கியுள்ளது. அங்கு போய் இறங்கியதுமே அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது. //

    மனிதாபிமான விஷயத்தில் மலேசியாவைப் பாராட்டலாம்!

    ReplyDelete