Thursday, April 22, 2010

பெண்கள் விடுதலை பெற்று வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம்














சிறிலங்காவின் மனித உரிமைச் செயற்பாட்டாளரான செறீன் சேவியர், போரினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவினது வடக்கின் தலைநகராம் யாழ்ப்பாணத்தில் தனது பணியுடன் தொடர்புடைய கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது தென்னாசியப் பெண்களின் தேசிய உடையான சேலையையே அணிந்து செல்வார்.

'இந்தப் பிரதேச மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் நீங்கள் சேலையுடன்தான் இருக்கவேண்டும்' என மனித உரிமைகளுக்கான இல்லம் [Home for Human Rights - HHR] என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான செறின் சேவியர் கூறுகிறார்.

ஆனால், மேற்கு நாடொன்றில் தனது கல்வியினைக் கற்ற சேவியர் கொழும்பிலுள்ள தனது செயலகத்தில் இருக்கும் போது ஜீன்சுடன் காணப்படுகிறார்.

இதனால்தான், முன்னோக்கிய ஒரு முயற்சியாகக் கருதப்படும் ஏதாவது ஒன்றை சிறிலங்காவின் பழமைவாதக் கருத்துக்களில் இன்னமும் ஊறிப்போயிருக்கும் நகரமான யாழ்ப்பாணத்துப் பெண்களுக்கு இவரால் செய்யமுடிகிறது.

இவ்வாறு ஈழத்தமிழ் பெண்களின் முன்னேற்றம் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றை அனைத்துலக செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஜபிஎஸ் [Inter Press Service - IPS] வெளியிட்டுள்ளது.
அதன் செய்தியாளராகிய Feizal Samath எழுதிய அச்செய்திக் கட்டுரையை 'புதினபலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

பழமைவாதத் தளைகளிலிருந்தும் பாரம்பரியமாக இருந்துவரும் கட்டுப்பாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்துப் பெண்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் கடந்த வருடம் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குத்தான் அவர்கள் நன்றி கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்குத் தனிநாட்டினை அமைத்துக்கொடுக்கும் போரில் விடுதலைப் புலிகள் தோற்றுவிட்டாலும், பெண் என்றால் இதுதான் செய்யவேண்டும் என்ற காலங்காலமாக இருந்துவரும் கட்டுப்பாடுகளைத் தாண்டி தமக்கான புதிய வாய்ப்புக்களையும் வழிகளையும் யாழ்ப்பாணத்துப் பெண்கள் தேடுவதற்குப் விடுதலைப் புலிகள் உதவியிருக்கிறார்கள்.

இது தவிர, தமக்குத் தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்ட துன்பங்களின் விளைவாகவும் பெண்கள் சமூக ரீதியான கட்டுப்பாடுகளைத் தாண்டி, தமக்கான புதிய வாய்ப்புக்களைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்து நிற்கும் ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்குவர். மோதல்களில் சிக்குண்டு கணவன் உடல் உறுப்பு இழக்க, நடைமுறையில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு மனைவியிடம் சென்றுசேரும் சம்பவங்களும் அதிகமுண்டு.

விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையிலான மோதல்கள் இடம்பெற்ற வேளையில் குடாநாட்டிலும் தொடர்புடைய ஏனைய பிரசேங்களிலும் 'பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்கவேண்டியிருந்தது' என சேவியர் கூறுகிறார்.

'தமது கணவன்மார் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். உதாரணமாக, போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்லமுடியாத நிலையில் இருந்தால், குடும்பத்திற்குத் தேவையான வெளி வேலைகளைச் செய்யவேண்டிய நிலைக்குப் பெண்ணே தள்ளப்படுகிறார்'

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்படும் ஆண்கள் போராட்டக் குழுக்களுடன் இணைந்துகொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற அல்லது அந்த அமைப்புக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் வீடுகளிலிருந்து ஆண்கள்; இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

இந்தக் காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைச் சமாளித்தார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் இவ்வாறு விபரிக்கிறார்கள்.

'இவர்களிடம் இரட்டைச் சுமை: குடும்பத்தினை நிர்வகிப்பதோடு தேவையான முடிவுகளைகளையும் எடுக்கவேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே பெரும்பாலான பெண்கள் காலம் காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள்.'

இவ்வாறாக பெண்கள் புதிய வாய்ப்புக்களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தவர்களின் நலவாழ்வு மற்றும் கல்வி ஆகிய விடயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்துச் சமூகத்தைப் பொறுத்தவரையில், இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே இதுநாள் வரைக்கும் கருதப்பட்டு வந்தது.

வடக்குக் கிழக்கில் பெரும்பகுதியினை விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காலப்பகுதியில், காலம் காலமாக இருந்துவந்த சாதீய முறைமை எவ்வாறு ஆட்டம் கண்டது என்பதையும் சேவியர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட அந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் சாதிய பிரிப்பில் கீழ் மட்டத்தை சேர்ந்தவர்களே.

விடுதலைப் போராட்டம் மக்களின் பேராதரவுடன் முனைப்புப் பெற்றிருந்த அந்தக் காலப்பகுதியில், உயர் சாதித் தமிழர்கள் எனக் கருதப்படுவோர் பலர், சாதி ரீதியான பிரிப்புகளைப் புறம்தள்ளிவிட்டு, குறைந்த சாதியினைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பாசத்துடன் 'தம்பி' என அழைத்தார்கள்.

சமூக ரீதியான கடப்பாடுகள் மற்றும் பெற்றோரின் அழுத்தம் ஆகியவற்றிலிருந்து தமிழ் இளைஞர்கள் தங்களை விடுவித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தங்களது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

ஏன், பெண்கள் கூட தமதமைப்புடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கேயுரிய வெட்கம் போன்ற குணாம்சங்களைக் கொண்ட கிராமப்புற இளம் பெண்களை குறித்ததொரு இலக்குடன் ஆயுதங்களைக் கையில் ஏந்தியவாறு, ஜீன்சுடனும் சேட்டுடனும் செயற்படும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டினார்கள்.

'சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளைப் புறம்தள்ளிவிட்டு பெண் விடுதலை என்ற இலச்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடாத்தப்படும் நாளை எதிர்பார்த்திருந்தார்கள். இந்த இளம் பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியது' என சேவியர் கூறுகிறார்.

'தனது கணவருடன் இருந்தாலும் பால் சமத்துவம் தொடர்பிலும் பெண் விடுதலை தொடர்பாகவும் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் எங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டார்கள்' என்கிறார் சேவியர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியனாக பாலசிங்கம் செயற்பட்ட அதேவேளையில் அவரது துணைவியாரான அவுஸ்ரேலியாவினைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்தார்.

சில வருடங்களின் முன்னர் அன்ரன் பாலசிங்கம் இதய நோயினால் மரணமடைந்திருந்தார். மருத்துவத் தாதியான அடேல் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

தனது தந்தையார் ஆற்றிய சிவில் உரிமை வழக்கறிஞர் என்ற பணியினைத் தொடர்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்படுவதற்கு இரண்டு வருடங்களின் முன்னர், 2007ஆம் ஆண்டு செறீன் சேவியர் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார்.

தமிழர்களது உரிமைகளுக்காகப் போராடும் செறின் சேவியரது அமைப்பு தமிழர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனையினை இலவசமாக வழங்கி வருகிறது.

சமூகத்தில் தமக்காக அதிக பங்கினை எடுப்பதற்கு குடாநாட்டுப் பெண்கள் படிப்படியாக முனைந்து வருவதாக இவர் கூறுகிறார். 'எவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பெண்களைப் போல யாழ்ப்பாணத்துப் பெண்களும் சுதந்திரமாக செயற்படும் நிலையினை அடைவதற்கு இன்னமும் நீண்ட காலம் எடுக்கும்' என செறின் சேவியர் குறிப்பிடுகிறார்.

மேற்குலகில் கல்வி பயின்றுவிட்டு குடாநாட்டில் தொழில் புரியும் தமிழ் பெண்கள், புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்துசெல்லும் தமிழ்ப் பெண்கள் மற்றும் போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் வந்துசெல்லும் பெருமளவிலான சிங்கள இனப் பெண்களைத் தவிர குடாநாட்டில் பெண்கள் எவரும் ஜீன்ஸ் அணிவதைக் காணமுடியவில்லை.

அதேநேரம் குடாநாட்டு வீதிகளில் குறைந்தளவிலான பெண்களே உந்துருளி ஓட்டிச்செல்வதை அவதானிக்க முடிகிறது.

நகரிலுள்ள பெண்களுக்கான விடுதியொன்றில் இளம்பெண்கள் கட்டைக் காற்சட்டையுடன் [shorts] இருக்கிறார்கள். அதுவும் விடுதி வளாகத்திற்குள் மாத்திரமே இவர்கள் காற்சட்டை அணிய முடியும்.

'குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்னர் பெண்கள் சேலைகளைக் கைவிட்டுவிட்டு பாவாடை [skirts] அணிய ஆரம்பித்தார்கள். இதற்கு சமூகத்தின் முதியவர்கள் மத்தியிலிருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது.

பெண் விடுதலை என்பது சிறிது சிறிதாக இடம்பெற்றுவந்தாலும் இதுபோன்ற சமூக ரீதியான கட்டுப்பாடுகளும் தளைகளும் பெண்களுக்குத் தொடர்ந்தும் இருக்கத்தான் செய்கிறது' எனத் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இந்த விடுதியின் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

நன்றி : புதினப்பலகை
'புதினப்பலகை'க்காக 'தி.வண்ணமதி'யால் மொழிபெயர்க்கப்பட்டது

No comments:

Post a Comment