Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Thursday, April 29, 2010

குஷ்பூ வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முழு விபரம்..!

நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வ குற்றம் அல்ல” என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.



அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பு முழு விவரம் வருமாறு-

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

நடிகை குஷ்பு வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தன.

தீர்ப்பில் இந்த தகவலை வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்துப் இந்த கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Monday, April 19, 2010

பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட்ட விஷயத்தில் கருணாநிதி சொல்வது உண்மையா?

தனிமனித விவகாரங்கள், அந்தரங்க விஷயங்கள் (சில விதிவிலக்குகள்) தவிர வேறு எதுவும், ஒரு மாநில முதல்வருக்குத் தெரியாமல் அந்த மாநிலத்தில் நடப்பதில்லை. உளவுத் துறை, காவல் துறை தவிர நிர்வாகத் துறையிலும் அவருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தகவல் வழங்கப்பட்டே வருகிறது. மாவட்ட அளவில் நடக்கும் அனைத்தையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கவனத்துக்குப் போய்விடுகின்றன. அவர்களும் முதல்வருக்கு தகவல் தெரிவித்தபடி உள்ளனர். போதாததற்கு பெரும்பாலான தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

விமான நிலையம் போன்ற முக்கியப் பகுதிகளின் நிகழ்வுகள் 24 மணி நேரமும் மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படுகிறது. 5 செயலாளர்கள், 2 தனிச் செயலாளர்கள், எப்போதும் நிழலாய் உதவியாளர், அவர்களுக்குக் கீழ் பணியாளர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் என பெரிய அலுவலகம் முதல்வருடையது. எனவே எந்தத் தகவலும் முதல்வர் அலுவலகத்துக்குத் தெரியாமல் போவதில்லை.

பார்வதி அம்மாள் விவகாரத்தில் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதோ, தமிழக அரசுக்குத் தெரியாமல் அனைத்தும் நடந்துவிட்டது என்பதோ நம்பத் தக்கதல்ல என்பதோடு, ஒரு மாநில அரசு நிர்வாகத்தையே கேலிக்குரியதாக்கியுள்ளது.

இந்த விஷயத்தில் முதல்வர் சொல்வதில் நிறைய முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன. பார்வதி அம்மாள் வந்த விமானம் மீனம்பாக்கத்துக்குள் வருவதற்கு முன்பே குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிந்துவிட்டது. உடனடியாக சென்னை புற நகர காவல் ஆணையர் ஜாங்கிட் மீனம்பாக்கத்துக்கு விரைந்து வந்துவிட்டார். பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுவிட்டனர். விமான நிலையத்துக்குள் உரிய அனுமதி அட்டையுடன் அந்த நேரத்தில் நுழைய முயன்ற வைகோ – நெடுமாறன் தடுக்கப்பட்டனர். பின்னர் பெரும் தகராறு, வைகோவின் வாதம் என பரபரப்பாக இருந்தது விமான நிலையம்.

முதல்வருக்கு இந்தத் தகவல்களை சொல்லாமல் கமிஷனர் ஜாங்கிட் மறைத்துவிட்டார் என்கிறாரா கருணாநிதி?

பார்வதியம்மாள் பயணித்த விமானம் வந்த நேரம் 10.30. திருப்பி அனுப்பப்பட்டபோது நேரம் 12. 45. இரண்டேகால் மணிநேரம் விமான நிலையத்தில் அவர் இருந்துள்ளார். இவரது தலைமையில் இயங்கும் காவல் துறைதான் மொத்தப் பிரச்சினையையும் கையாண்டுள்ளது. அதுவும் மாநகர கமிஷனரே நேரில் வந்துள்ளார். ஆனால் இவை எதுவுமே தனக்குத் தெரியாது என்று கருணாநிதி கூறுவது, அவரது ஆட்சியின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன?

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஜெயலலிதாதான் காரணமா?

இதை விட முட்டாள்தனமான ஒரு காரணத்தை வேறு யாரும் கற்பனை செய்து கூட சொல்ல முடியாது. ஜெயலலிதா புலிகளுக்கு எதிரானவர். அவர் 2003ல் இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என்பது உண்மையாக இருந்தாலும், அதன் பிறகு முதல்வராகி இன்னும் தொடர்வது கருணாநிதிதானே!

இந்த ஏழு வருடங்களாக இப்படியொரு எச்சரிக்கைப் பட்டியல் இருப்பதே தனக்குத் தெரியாது என்கிறாரா கருணாநிதி?

பிரபாகரன்தான் புலியே தவிர, அவரைப் பெற்ற தாயும் தந்தையும் புலிகள் அமைப்புடன் எந்தத் தொடர்பிலும் இல்லையே. எந்த அடிப்படையில் ‘அவர்களை இந்தியாவுக்குள் மீண்டும் அனுமதிக்கக் கூடாது’ என்று ஜெயலலிதா கடிதம் எழுதினார்? எதற்காக அந்த அர்த்தமற்ற கடிதத்தை இதுவரை காப்பாற்றி வந்தார் கருணாநிதி? இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு முறை கூட, இன்னுமொரு கடிதம் எழுதி, ஜெயலலிதாவின் கடிதத்தைச் செயலிழக்க வைக்க வேண்டும் என்றே தோன்றவில்லையா இவருக்கு?

மத்தியில் ஆட்சியே இவருடையதுதானே… தனது மகன் மகளுக்கு பதவி பெற டெல்லியில் முகாமிட்டு பெரும் போராட்டமே நடத்தியவருக்கு இதெல்லாம் நினைவிலில்லாமல் போனதில்ஆச்சரியமில்லை.

இவர்கள் சண்டி மாடுகள் மாதிரி. எப்போதும் ஏதாவது ஒரு சாக்கு வேண்டும், தங்கள் கையாலாகாத்தனம், சுயநலத்தை மறைக்க. அடுத்தவரைக் குறை சொல்லி, அடுத்தவரோடு ஒப்பிட்டு, அடுத்தவர் மீது பொறாமைப்பட்டே தமிழர் வாழ்வை நாசமாக்கிய கும்பல்தான் கருணாநிதி – ஜெயலலிதா மற்றும் அவர்களது அடிவருடிகள்.

-வினோ

நன்றி : என்வழி