Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Friday, May 14, 2010

பார்வதியம்மாள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை உண்மையில் எழுதியது யார்..? – உண்மை அம்பலம்













மலேசியாவில் இருந்து பார்வதியம்மாள் தனது சிகிச்சைக்காக கலைஞருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனை தமிழக அரசு வெளியிட்டது.. ஆனால் அந்தக் கடிதம் பார்வதியம்மாளால் எழுதப்பட்டோ அல்லது தெரிவிக்கப்பட்டோ வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.

சென்னையில் மே 11-ம் தேதி ம.தி.மு.க.வின் இலக்கிய அணி சார்பில் பாவேந்தர் விழா நடந்தது. அதில் பேசிய வைகோ, “மாவீரனைப் பெற்றெடுத்த தாய் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியிடப்பட்டதே.. அதை யார் தயாரித்தது..? நான் திருச்சியில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து தரும்படி அன்போடு வேண்டுகிறேன்.. தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். நன்றியுடன்.. உங்கள் உடன்பிறப்பு.. திருவேங்கிடம் வேலுப்பிள்ளை பார்வதி என்று இருக்கிறதே..

பார்வதியம்மாள் என்ன தி.மு.க. வட்டச் செயலாளரா..? அவர் உடன்பிறப்பு என்று எழுதுவாரா..? இக்கடிதத்தை இங்கே தயாரித்தது யார்..? சில காரணங்களுக்காக நான் இதற்கு மேல் இது பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

ஆனாலும் இது தொடர்பாக விசாரித்ததில் கிடைத்தத் தகவல்கள் வருமாறு :

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 26, 2010

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு மாறியிருக்கும் : வைகோ














“நான் இப்போது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு நிச்சயம் மாறியிருக்கும்” என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் வைகோ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி மேலும் கருத்து தெரிவித்திருக்கும் வைகோ, “என் நண்பர்களான அத்வானி, வாஜ்பாய் இருவரும் வற்புறுத்தியும் இரண்டு முறைகளும் அமைச்சர் பதவி ஏற்க மறுத்துவிட்டேன். 2004 பாராளுமன்றத் தேர்தலில் பலரும் சொல்லியும் பிடிவாதமாக தேர்தலில் நிற்க மறுத்ததுதான், நான் செய்த மிகப் பெரும் தவறு என்பதை இப்போது உணர்கிறேன்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.

அவர் மேலும் பேசும்போது, “ஆனால் எம்.பி. பதவி இல்லாமலேயே நான் 16 முறை பிரதமரைச் சந்தித்து தமிழீழம் தொடர்பாக மன்றாடினேன். இந்த நேரத்தில் நான் எம்.பி.யாக இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் அடிக்கடி இது தொடர்பாக பெரிய அளவில் விவாதங்களைக் கொண்டுவந்து அனைத்துத் தலைவர்களின் ஆதரவையும், திரட்டி சிங்கள அரசுக்கு ஆயுத பலத்தை இந்தியா கொடுப்பதைத் நிச்சயம் தடுத்திருப்பேன்.

1998-ல் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு உள்ளானார்கள். அப்போது வாஜ்பாயிடம் பேசி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நான்தான் கூட்ட வைத்தேன். அக்கூட்டத்தில் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, முலாயம்சிங் யாதவ், நிதீஷ்குமார் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களும் பங்கேற்றார்கள்.

நான் பேச எழுந்தபோது விரைவில் என் பேச்சை முடிக்க விரும்பினேன். ஆனால் நிதிஷ்குமார், “இது பற்றி நீங்கள்தான் விரிவாகச் சொல்ல வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நான் அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி விரிவாகப் பேசினேன். அந்தக் கூட்டத்தின் முடிவில்தான் “இலங்கைக்கு எந்த ஆயுதமும் விற்பதில்லை..” என்று பிரதமர் வாஜ்பாய் முடிவெடுத்தார். பிரதமர் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது.

தற்போது நான் எம்.பி.யாக இருந்திருந்தால் இது மாதிரியான தமிழீழத்திற்கான சேவையை என்னால் செய்திருக்க முடியும். ஆனால் கடந்த 2009 தேர்தலில் ஆளும்கட்சியினர் எனது தொகுதியில் மட்டும் 100 கோடி ரூபாய் செலவழித்து என்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் நான் எதையும் இழப்பு என்று நினைக்கவில்லை. என்னை மக்கள் எங்கு வைத்திருக்கிறார்களோ அங்கிருந்தே சேவை செய்வேன்..” என்றும் கூறியுள்ளார்.

Friday, April 23, 2010

குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்














1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி வைகோ பேசியதாவது :

1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி கருத்து கோரியிருந்தது.

கலைஞர் சிறிதும் யோசிக்காமல் குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல் குட்டிமணி சென்னை விமான நிலையத்தில் சிங்கள அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் நான் தி.மு.க.வின் வெறி பிடித்த தொண்டன். கலைஞரின் அதி முக்கிய விசுவாசி. தீவிரமான தம்பி.. அப்போது நாடாளுமன்றத்திலே தி.மு.க.வின் சார்பிலே இலங்கை பிரச்சினை குறித்து நான்தான் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தேன்.


அந்த நேரத்தில் நடந்த இந்த குட்டிமணியின் நாடு கடத்தல் உத்தரவில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த உடனேயே தமிழகத்தில் ஊர், ஊருக்கு “குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கருணாநிதி ஒழிக” என்று சொல்லி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

தி.மு.க.வின் அதி தீவிர தொண்டனான நான் இதைப் பார்த்து பெரிதும் வருத்தப்பட்டேன். முடிந்த அளவுக்கு அந்த போஸ்டர்களை கிழிக்கின்ற அளவுக்குக்கூட சென்றிருந்தேன். இதுவெல்லாம் அந்த நிகழ்ச்சியை தமிழகத்து மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது என்பதை உணர்ந்த நான் அடுத்து செய்ததுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம்.

குட்டிமணியின் வழக்கறிஞர் கரிகாலன் எனக்கும் நல்ல நண்பர்தான். அவரிடம் நான் பேசினேன். குட்டிமணி கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் கலைஞருக்குத் தொடர்பில்லை என்று குட்டிமணியிடம் ஒரு கடிதம் வாங்கித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வழக்கறிஞர் கரிகாலனால் குட்டிமணியைச் சந்திக்க முடியும் என்பதால் நான் இதை மிகவும் அவசரப்படுத்தினேன். கரிகாலன் முதல் முறை குட்டிமணியைச் சந்தித்து இது பற்றித் தெரிவித்தபோது குட்டிமணி இது பற்றி தங்கத்துரை மற்றும் ஜெகனிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லியனுப்பி விட்டார்.

ஆனால் அடுத்த முறை கரிகாலன் அவர்களைச் சந்தித்தபோது ஒரு கடிதத்தை எழுதியனுப்பினார் குட்டிமணி. அந்தக் கடித வாசகங்கள்கூட நான் எழுதிக் கொடுத்தவைதான். அதேபோல் குட்டிமணி எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதுல இருந்தது என்னவென்றால், “குட்டிமணியாகிய நான் கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டபோது, நான் ஒரு தமிழ் போராளி என்பது தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரியவே தெரியாது..” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கலிங்கப்பட்டியில் இருந்த எனக்கு கரிகாலன் மூலமாகக் கிடைத்தது. நான் உடனேயே இதனை கருணாநிதிக்கு அனுப்பி வைத்தேன். பின்பு ஒரு பத்து நாட்கள் கழித்து சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்து அந்தக் கடிதம் பற்றிக் கேட்டபோது “இவ்ளோ முக்கியமான லெட்டரை எதுக்கு போஸ்ட்ல அனுப்புனீங்க..? இப்பத்தான் எல்லா லெட்டரையும் பிரிச்சுப் பார்த்துட்டுத்தான கொடுக்குறாங்க.. சென்சார்ஷிப் இருக்குன்னு உங்களுக்கே தெரியாதா..?” என்றார்.

இப்படியும் ஒருவேளை நடந்தாலும் நடக்கும் என்பதால் நான் அந்தக் கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தேன். அந்தக் காப்பியை உடனேயே எடுத்து கருணாநிதியிடம் கொடுத்தேன். அதனை கருணாநிதி வாங்கிப் படித்துவிட்டு அடுத்த நாளே முரசொலியில் அதனை வெளியிட்டார். ஆனால் அந்தக் கடிதத்தை வாங்க உதவிய என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட அப்போது குறிப்பிடவில்லை.

ஆனால் இதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் என்று இப்போதும் கருதுகிறேன்..” என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார் வைகோ.