Friday, April 2, 2010
பிரிகேடியர் தினேஷ்(தமிழ்ச்செல்வன்)
பிரிகேடியர் தினேஷ்(தமிழ்ச்செல்வன்)
(சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன்
மட்டுவில், யாழ்ப்பாணம்
29/8/1967 2/11/2007)
யாழ் மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தில் வயல்கள் நிறைந்த பிரதேசமான மட்டுவிலில் பரமு விசாலாட்சி தம்பதிகளுக்கு ஆறு பிள்ளைகள். 5 ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை. அவர்களில் 5வது பிள்ளையாக அவதரித்த ஆண் மகனுக்கு தமிழ்ச்செல்வன் என்று பெயரிட்டனர் பெற்றோர்.
முடி திருத்தும் தொழில் செய்தவரான பரமு தனது பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தனது பிள்ளைகள் யாரையும் அத்தொழிலில் ஈடுபடுத்தவில்லை.
தமிழ்ச்செல்வன் தன்னுடைய ஆரம்ப கல்வியை மட்டுவில் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை சாவகச்சேரி இந்து கல்லூரியிலும்
பயின்றார்.
1983ல் நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் தன்னை விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார் தமிழ்ச்செல்வன். அப்போது அவருக்கு வயது பதினாறு.
ஆனால் தமிழ்ச்செல்வன் பயிற்சிக்காக இந்தியா சென்றது ஜூன் 13 1984ல் என்று தெரியவருகிறது. புலிகளின் நான்காவது பயிற்சி பாசறையில் திருமலை திண்டுக்கல் முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்று தினேஷ் ஆனார்.
பயிற்சிகளின் பின்பு தினேஷ் அக்காலத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த தேசியத்தலைவர் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார். தலைவரது மெய்ப்பாதுகாப்பு அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
1987 ஜனவரி 5ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு போய் களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்ட வேண்டியிருந்தது. அத்துடன் அப்போது யாழ் மாவட்ட தளபதியாகவிருந்த கிட்டுவிற்கும் தகவல் போய்ச் சேர வேண்டும்
களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டும் பொறுப்பும் கிட்டுவிற்கு தகவல் சொல்லும் பொறுப்பும் தலைவரின் நம்பிக்கைக்குரியவர்களான இம்ரான், பாண்டியன், தினேஷ் ஆகிய மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டது அவர்களும் அவ்வேலைகளை செவ்வனே செய்து முடித்தனர். மூவரும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பினர்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸ் 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவடைந்தார். பின்னர் அப்பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்படவிருந்த அப்துல்லா ஒக்டோபர் 5 1987ல் குமரப்பா, புலேந்திரன் ஆகியோருடன் சயனைட் உட்கொண்டு வீரமரணமடைந்தார்.
அதனால் 1987 ஒக்டோபரில் தமிழ்ச்செல்வன் தென்மராட்சி பிரதேசதின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.பாப்பா அவரின் உதவியாளராக நியமிக்கப்பாட்டார்.
1991ல் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு வெளிநாடு செல்லவே தமிழ்ச்செல்வன் யாழ் மாவட்ட தளபதியாகவும் அதன் பிறகு சிறப்பு தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
1991ல் ஆனையிறவை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற ஆகாய கடல்வெளி சமரிலும் பின்னர் 1993ல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையிலும்
மிக மோசமான காயங்களுக்கு உள்ளானார். தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் தமிழ்ச்செல்வன் கிட்டதட்ட உயிர் இழந்திருப்பார். ஆனால் அதிசயத்தக்க விதத்தில் தப்பித்துக்கொண்டார்.
அவருடைய காலில் இருந்த சதை முழுவதும் இழக்கப்பட்டது. அதன் பின்னர் ஊன்றுகோளின் உதவியுடனேயே நடக்க வேண்டி வந்தது.
யாழ்தேவி நடவடிக்கை சிலாவத்துறை முகாம் மீதான தாக்குதல் காரைநகர் மற்றும் தச்சன் காடு முகாம்கள் மீதான புலிகளின் தாக்குதலிலும் பங்குபற்றினார்.
1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார். அம்முகாம் மீது கரும்புலித்தாக்குதல் நடத்திய கரும்புலி மேஜர் டாம்போவை வழியனுப்பி வைத்தார்.
1994ல் அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.அப்போது பாலபட்டபென்டி தலைமையிலான அரசாங்க சாமாதானக்குழுவை வரவேற்றது தமிழ்ச்செல்வன் தான்.
“ஒயாத அலைகள் - 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.
தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.
மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்
சமாதானப் பேச்சுவார்த்தைகள் 2006ல் முறிவடைந்த பின்பு பரந்தன் பூநகரி பல்லவராயன்கட்டு பகுதிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
இப்படியாக தான் இருந்த துறையில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்ச்செல்வன் 2007 நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோருடன் சேர்ந்து சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
அவர் நித்திரையில் இருந்த சமயம் அவர் தூங்கிக் கொண்டிருந்த திருவையாறுப் பகுதி பதுங்குகுழித் தொகுதி மீது கிபிர் மற்றும் மிக் விமானங்கள் நடத்திய 900 கிலோ எடை கொண்ட பதுங்குகுழி அழிக்கும் திறன் கொண்ட `பங்கர் பஸ்டர்` குண்டுகள் பதுங்குகுழியின் மீது நேரடியாக விழுந்ததினால் பதுங்குகுழி நிர்மூலமாகிப் போனது. தமிழ்ச் செல்வனுக்கு பெரிதாக எதுவும் காய்ங்கள் இல்லையெனினும் நித்திரையில் பதுங்குகுழி மூடியதாலேயே மரணம் சம்பவித்தது.
தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா(இசைச்செல்வி) ஒரு முன்னாள் பெண் போராளியாவார். இவர்களது திருமணத்தை முன்னின்று நடத்தியது தலைவர் பிரபாகரன் தம்பதியும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தம்பதியுமாகும். தமிழ்ச்செல்வனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவர் அலைமகள்(8) இரண்டாமவர் ஒளிவேந்தன்(4).
நித்திய புன்னகை அழகனான தமிழ்செல்வன் மறைந்தது புலிகளுக்கு ஒரு பெரும் இழப்பாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
-சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment