Tuesday, April 27, 2010

பார்வதி அம்மாள் மீண்டும் சிறிலங்காவிற்கு திரும்ப திட்டம்














கடந்த இரு வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் சிறிலங்கா திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேசிய அரசு மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ள ஒரு மாத வதிவிட அனுமதி முடிவடைவதற்குள் அவரை மீண்டும் சிறிலங்காவிற்கு அழைத்துவர உள்ளதாக பார்வதி அம்மாளின் நலன்களைக் கவனித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வதியும் தனது மகளிடம் செல்வதற்காக பார்வதி அம்மாள் மலேசியா வந்தபோதும் பார்வதி அம்மாளுக்கு விசா வழங்க கனேடிய அரசு தயக்கம் காட்டி வருவதாகவே தெரியவருகிறது. இதன் காரணமாகவே மலேசியாவில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையில் அவர் சிறிலங்கா திரும்ப உள்ளார். அடுத்த மாத நடுப்பகுதிக்குள் அவர் சிறிலங்கா திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் அவரைப் பராமரிப்பதற்கு பலர் உதவி புரியத் தயாராக உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எனினும் தமிழ்நாடு அரசு அவர் இந்தியா வருவதற்கு உள்ள தடையை நீக்கி அவர் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உதவவேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது.

No comments:

Post a Comment