Sunday, April 4, 2010

ஆனந்தபுரம் துக்கபுரமான நாளின் முதலாமாண்டு நினைவு இன்று













தமிழீழ விடுதலைப் புலிகளின் 33 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் அவர்கள் எத்தனையோ பின்னடைவுகளையும் பாரிய இழப்புக‌ளையும் சந்தித்திருக்கிறார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு இதே தினத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட இழப்பு விடுதலைப்போராட்டத்தின் போக்கையே மாற்றியது என்றால் அது மிகையாகாது.

விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் 4ம் நாள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியின் ஆனந்தபுரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

உண்மையில் மார்ச் 31 ல் தொடங்கி ஏப்ரல் 6 வரையான ஒரு வார‌ காலப்பகுதியில் புலிகள் இழந்த தளபதிக‌ளினதும் போராளிகளினதும் எண்ணிக்கை வேறு எந்தக் காலத்திலும் நடந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

மார்ச் 31 அன்றுதான் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியான கோபித், முதலாவது கட்டளைத் தளபதியான அமுதாப் ஆகியோர் வீரச்சாடைந்திருந்தனர்.

மறுநாள்(ஏப்ரல் 1) ஆனந்தபுரத்தில் பல படையணித் தளபதிகளும் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டனர்.

ஆனால் இராணுவத்தின் 53ம் மற்றும் 58ம் படைப்பிரிவின் எதிர்பாராத விதமான நகர்வொன்றின் மூலம் பல தளபதிகளும் போராளிகளும் தமது இறுதிக் களத்தில் மிகப் பொருந்தாத ஆட்பல ஆயுதபல‌ நெருக்கடியான களத்தில் வீராவேசத்தோடு பொருதினர்.

அப்போர்க்களத்தில் தமது இறுதி அத்தியாயத்தை எழுதிய தளபதிகள் விபரம் வருமாறு:

1)பிரிகேடியர் பால்ராஜ் மறைவின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத புலிகளின் 2ம் நிலைத் தலைவரும் கேணலுமான‌ தீபன்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்). இவர் பின்னர் தலைவரினால் வலைஞர்மடம் பகுதியில் ந‌டைபெற்ற ஒரு நிகழ்வில் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார். உண்மையில் தலைவர் அவர்கள் பிரிதொரு நிகழ்வில் தீபன் அம்மானுக்கு மேஜர் ஜெனரல் தரம் வழங்கவே விரும்பியிருந்தார் என்கின்றன விடுதலைப் புலிகள் தரப்பு வட்டாரங்கள். ஆனால் யுத்தத்தின் தீவிரம் அதற்கு இடமளிக்கவில்லை என்றே கூறலாம்.

2) கேணல் விதுஷா, மாலதி படையணி சிறப்புத் தளபதி. இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

3) கேணல் துர்க்கா, சோதியா படையணி சிறப்புத் தளபதி. இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

4)கேணல் கடாபி, புலிகளின் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்.  இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

5)கேணல் மணிவண்ணண், கிட்டு பீரங்கிப் படையணியின் தளபதி. இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

6)மாலதி படையணி கட்டளைத் தளபதி கமலினி.

7)சோதியா படையணி கட்டளைத் தளபதி மோகனா.

8)ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி.

9)ஜெயந்தன் படையணி கட்டளைத் தளபதி நாகேஷ்.

10)ராதா விமான எதிர்புப் படையணி சிறப்புத் தளபதி சிலம்பரசன்.

11)ராதா விமான எதிர்புப் படையணி கட்டளைத் தளபதி அன்பு.

12)குட்டிசிறி மோட்டார் படையணி தளபதி கோபால்.

13)பொன்னம்மான் கண்ணிவெடி மற்றும் மிதிவெடி பிரிவுத் தளபதி அஸ்மி.

இவர்கள் தவிர மேலும் பல தளபதிகளும் போராளிகளும் வீரச் சமராடி களப்பலியாகினர்.

அவர்களது முதலாமாண்டு நினைவு தினம் இன்று. அவர்களுக்கு கண்ணீர் சிந்தி வீர வணக்கம் செலுத்துகிறோம்.

மாவீரர்களே நீங்கள் கண்ட கனவான தமிழீழம் மலர தமிழருக்கு துணையும் ஆசியும் வழங்குங்களேன்.


"இப்பூமியில் உள்ள மனிதர் அனைவருக்கும்
சாவு விரைவாகவோ தாமதமாகவோ வருகிறது

ஆனால் சிறப்பாக சாவது யார் என்றால்
மிக நெருக்கடியான களங்களில்

தன் தந்தைக்காக, மண்ணுக்காக, மக்களுக்காக‌
போரிட்டவர் மட்டுமே"

- சாணக்கியன்

No comments:

Post a Comment