Sunday, April 18, 2010

மனித இனத்துக்கே நேர்ந்த அவமானம்!














வார்த்தைக்கு வார்த்தை தமிழே, என் உயிரே, தமிழ்ப் பெருங்குடி மக்களே, உலகத் தமிழினமே என்றெல்லாம் பசப்பு வார்த்தை பேசி பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் முகத்திரை நேற்று நள்ளிரவு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிழிந்து தொங்கியது.

80 வயதான ஒரு மூதாட்டி-

ஓலைச் சுவடிகளிலும் ஏடுகளிலும் மட்டும் தமிழன் பார்த்த வீரத்தையும் கம்பீரத்தையும் வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டிய ஒரு தமிழ் மகனைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய தாய்-

பக்கவாதம் தாக்கி, பாதி மயக்கத்தில் சிகிச்சை வேண்டி, தாயகத்து உறவுகளை நம்பி வந்த ஒரு தமிழச்சிக்கு நேர்ந்த அநீதியை மானமுள்ள தமிழன் தான் வாழுமட்டும் மறக்க முடியாது!

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவை அவர் வந்த விமானத்திலிருந்து கூட கீழே இறங்க அனுமதிக்காமல், விமானத்திலேயே இருத்தி வைத்து, மீண்டும் அதே விமானத்தில் மலேஷியாவுக்குத் துரத்தி தங்கள் இறையாண்மையையும் விசுவாசத்தையும் காப்பாற்றிக் கொண்டதாக பீற்றிக் கொண்டுள்ளன இந்திய – தமிழக அரசுகள்.

பக்கவாதத்தால் சோர்ந்த மனமும் உடலும் கொண்ட ஒரு மூதாட்டி தொடர்ந்து எட்டு மணி நேரம் பயணம் செய்தால் என்ன ஆவார் என்பதை இதயம் உள்ள மனிதர்கள்- பிரபாகரனை விமர்சிப்பவர்களாகவே இருந்தாலும்- சிந்தித்துப் பார்க்கட்டும்.

பார்வதி அம்மா இந்தியாவுக்கு வர மறைமுகமாகவோ பின் வாசல் வழியாகவோ விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை. நேர்மையான முறையில், தான் பிரபாகரனின் தாயார் என்ற உண்மையைச் சொல்லியே விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை நன்கு பரிசீலித்த பிறகே ஆறுமாத காலம் இந்தியாவில் தங்கியிருக்க விசா அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பாழாய்ப்போன விசாவை நம்பித்தான் அந்தத் தாய் சென்னை விமானத்தில் பயணித்தார்கள்.

சென்னை விமான நிலையத்துக்குள் மலேஷிய விமானம் நுழையும் போதுதான் இந்த விசாவும் மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகளும் செய்திருப்பது வைகோவும் நெடுமாறனும் என்ற உண்மை தெரிந்ததோ… அதன் பலன்தான் இந்த அனுமதி மறுப்பும் திருப்பி அனுப்பலுமா, அல்லது அதையும் தாண்டிய நிர்பந்தங்களா!

கருணாநிதி என்ற மனிதர் மீது தமிழ் உணர்வாளர்களுக்கு கொஞ்ச நஞ்சம் எங்கோ ஒட்டிக் கொண்டிருந்த மரியாதை கூட காற்றில் பறந்துவிட்டது, சோனியா என்ற ஒரு பெண்மணிக்காக, அவர் தயவில் தனது குடும்பத்துக்குக் கிடைக்கும் அல்ப ஆதாயங்களுக்காக அவர் எதையும் செய்யத் துணிவார் என்ற உண்மை உரைத்தபோது. தனது இனத்தின் மதிப்பு மிக்க ஒரு பெண்மணிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை அவர் வேடிக்கைப் பார்த்தது மட்டுமல்ல, அதன் பகிரங்க பங்காளியாகவும் அவர் காட்சி தருகிறார்… மத்திய அரசின் செயலுக்கு கருணாநிதி என்ன செய்வார், பாவம் என்று சொல்பவர்கள், நிச்சயம் இந்தியாவில் வசிக்கவே தகுதியற்றவர்கள்!

இந்திய அரசில் நேரடியாக எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு பெண்மணிக்காக, வீல்சேரிலேயே மீனம்பாக்கம் விமான நிலையம் வரை போய் காத்திருந்து மலர்ச்செண்டு அளித்து வரவேற்கும் முதல்வர் கருணாநிதிக்கு பிரபாகரன் தாயாரெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாததில் வியப்பில்லை. அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடியுமா அல்லது குறைந்தபட்சம் தேர்தல் ஆதாயமாவது கிடைக்குமா!

உலகின் மூன்றாவது பெரிய ராணுவம், அணுசக்தியில் அமெரிக்காவுக்கு சமமாய் பேசும் பவிசு, தென்னாசியாவின் பெரியண்ணன் என்றெல்லாம் தன்னை வர்ணித்துக் கொள்ளும் இந்தியா, இந்த வயதான தாயைத் திருப்பி அனுப்ப சொன்ன காரணம் – ‘உள்நாட்டு பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிடும்!’

பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதையெல்லாம் கூட விடுங்கள்… பிரபாகரனின் வயதான தாயைப் பார்த்தாலே கழிகிறார்களே.. இதுவா இந்த பெரியண்ணனின் வீரம்?

நேரடியாக அதிகாரத்தில் இல்லாமல் ஒட்டுண்ணிகளைப் போல அதிகாரத்தை உறிஞ்சி வாழும் நேரு வம்சத்தின் மிச்சத்திடம் இதற்குமேல் வேறெதை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியும்!

பாகிஸ்தான் உள்பட உலகின் எந்தப் பகுதியிலிருந்து, எந்த இனத்தைச் சேர்ந்தவர் வந்தாலும், அவர்களுக்கு ஒரு கஷ்டமென்றால் எதையும் பார்க்காமல் உதவும் இந்த தமிழர்களுக்கு, தன் சொந்தத்தை வைத்துப் பராமரிக்கும் உரிமை கூட மறுக்கப்படுவது நியாயமா?

ஈழத் தமிழனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவன் எல்லாம் பிரிவினைவாதி என்ற குருட்டுத்தனத்தை எப்போது விடப்போகின்றன இந்திய – தமிழக அரசுகள்…?

எல்லையையும் இறையாண்மையும் மதித்துக் கொண்டுதான், எமது மனிதநேயத்தையும் காட்டுகிறோம். அதற்கும் தடையா? என்றோ வெட்டிக் கொண்டு போன சிங்களத்துடன் ஒட்டி உறவாடும் இந்திய அரசு, இன்னும் தொடரும் எமது தொப்புள்கொடி உறவை வெட்ட நினைப்பது நியாயமா?

ஈழத்துத் தமிழர்களுக்கு நாங்களே எல்லாம்… எங்களால்தான் அவர்களைப் பாதுகாக்க முடியும் என்று மார்தட்டிய முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது தொண்டரடிப்பொடிகள் எங்கே போய்விட்டார்கள் இப்போது? பார்வதி அம்மா ஈழத் தமிழரில்லையா… எப்போதும் பீரங்கியும் துப்பாக்கியுமாகவா காட்சி தருகிறார் அவர்?

அவரை இந்த அளவு கொடுமைப்படுத்தியதற்கு இந்திய – தமிழக அரசுகள் பொருத்தமான ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா?

போரில் நேருக்கு நேர் மோதும் எதிரிக்கும் கூட, மனிதாபிமான உதவிகள் அளித்த தேசம் என்று என்று பழம்பெருமை பேசும் இந்தியா, தனது சொந்த குடிகளின் சோதரர்களிடம் காட்டும் இந்த துவேஷம், மனிதாபிமானம் என்ற வார்த்தையையே கேலிக்குரியதாக்கியுள்ளது. பதவி வெறியும் சுயநலமும் கொண்ட தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் இதற்குத் துணைபோவது இந்த இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குரியதாக்கியுள்ளது.

பெருமைக்குரிய இந்தியன் என்றோ, தயவுள்ளம் கொண்ட தமிழன் என்றோ சொல்லிக் கொள்ள முடியாத தலைகுனிவு, பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பிய மனிதாபிமானமற்ற செயலால் நேர்ந்திருக்கிறது!

இனியும் ஒருமுறை வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், பகைவனுக்கும் அருளும் நெஞ்சம் கொண்டவர்கள் போன்ற பசப்பு வார்த்தைகளை ஆட்சியாளர்கள் – அவர்களின் அடி வருடிகள் பேசாமல் இருக்கட்டும். தேடிவந்த சொந்த உறவை வா என்று கூப்பிடக் கூட வக்கில்லாதவர்களுக்கு இந்த வாக்கியங்களை உச்சரிக்கவும் அருகதையில்லை!

இந்த விஷயத்தில் அச்சு மற்றும் இணையதள ஊடகங்கள் தங்கள் உணர்வை முடிந்தவரை சரியாகவே வெளிக்காட்டின. ஆனால் தொலைக்காட்சி ஊடகம் நடந்துகொண்ட விதம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

-வினோ

நன்றி : என்வழி

2 comments:

  1. அன்னைக்கு உதவமுடியாத பிள்ளைகளின் நிலை மரணத்தைவிட கொடியது.

    தாயே, நானும் "கையாலாகாத" உன் பிள்ளைகளில் ஒருவன் தான்.

    மன்னித்துவிடுங்கள் அம்மா.

    ReplyDelete
  2. வினோ...உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு ஒட்டு மொத்த உண்மை தமிழர்களின் உணர்வு ஆகும்.சரியாக சொண்னீர்கள்! இணையதள் ஊடகங்கள் தவிர டி.வி ல இன்னும் அவுத்துபோடாம ஆடர நிகழ்ச்சியத்தான் ஒளிபரப்பரானுக!..ஒரு வரி செய்திகூட போடமாட்டேன்றனுக!...கடைந்தெடுத்த அயோக்கியனுக மீடியாகாரனுக..!

    ReplyDelete