Tuesday, April 27, 2010

குஷ்பூ மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு














திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது, சேர்ந்து வாழ்வது ஆகியவை குறித்து தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து தமிழகத்தில் நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட 22 வழக்குகளும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறல்ல. சேர்ந்து வாழ்வதும் தவறல்ல. பாதுகாப்பான முறையில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழகத்தில் எத்தனை பேர் கற்புடன் உள்ளனர் என்றெல்லாம் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குஷ்புவின் பேச்சைக் கண்டித்து அவரது வீட்டை பெண்கள் அமைப்பினர் செருப்பு, துடைப்பம் உள்ளிட்டவற்றுடன் முற்றுகையிட்டனர். இதையடுத்து டிவியில் தோன்றிய குஷ்பு கண்ணீர் விட்டு அழுதபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து குஷ்பு மீது 22 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மேட்டூர் கோர்ட்டில் மட்டும் குஷ்பு ஆஜரானார்.

மேலும் தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. கடந்த மாதம் இறுதி விவாதம் நடந்தது. அப்போது தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் இந்து அமைப்புகளின் கடும் கண்டனத்தை பெற்றன.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக்வர்மா, செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு குறித்து நடிகை குஷ்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது எனது வக்கீல் தொலைபேசி மூலம் என்னை எழுப்பி இந்த செய்தியைக் கூறினார். இது எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது. ஒரு பெண் வெற்றிகரமாக போராடுவது என்பது மிக லேசானதல்ல. நான் வெற்றி பெற்றுள்ளேன். உண்மையில் நான் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை” என்றார் குஷ்பு.

No comments:

Post a Comment