Monday, April 5, 2010
சோனியாவுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நளினியை விடுதலை செய்யத் தயார்; முதல்வர் கருணாநிதி கொடுத்த உறுதிமொழி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 19 வருடங்களாகச் சிறையில் இருந்துவரும் நளினியை விடுதலை செய்வதில் சோனியாவுக்கு ஆட்சேபணையில்லையென்றால் தான் அவரை விடுதலை செய்யத் தயார் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன்பாகத் தன்னிடம் தெரிவித்ததாக பிரபல கவிஞரும், சினிமா பாடல் ஆசிரியருமான தாமரை கூறியுள்ளார்.
நளினியின் விடுதலையில் இருப்பது சட்டச் சிக்கலா? அரசியல் சிக்கலா? என்கிற தலைப்பில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசும்போது தாமரை இவ்வாறு தெரிவித்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தியிருக்கிறார் கவிஞர் தாமரை. நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்கிற அந்த விண்ணப்பத்தில் கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, கவிஞர் பா.விஜய், கவிஞர் கனிமொழி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களும், சமூக சேவகர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்..
பலரும் கையெழுத்திட்டிருந்த அந்தக் கையெழுத்துப் பிரதியை தான் முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து கொடுத்தபோது “நளினியை விடுதலை செய்ய சோனியாவுக்கு ஆட்சேபணையில்லை என்றால், எனக்கும் ஆட்சேபணையில்லை.. விடுதலை செய்துவிடலாம்..” என்று கலைஞர் சொன்னதாக தாமரை தெரிவித்தார்.
ஆனாலும் மாநிலச் சிறைகளில் இருக்கும் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு என்பதால் கருணாநிதியே இதில் ஒரு முடிவெடுக்கலாம் என்று தான் வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார் தாமரை.
“இப்போது நளினிக்கு விடுதலை இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை பார்க்கும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக சோனியா காந்திக்கு இதில் விருப்பமில்லை என்பதாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது. சோனியாவை கேட்டு ஆட்சி நடத்தும் அளவுக்கு கருணாநிதிக்கு அப்படியென்ன நிர்ப்பந்தம்..? இது தமிழ் இனத்திற்கு அவர் செய்யும் துரோகம் இல்லையா..?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் தாமரை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment