Friday, April 23, 2010

பார்வதி அம்மாளை திருப்பி அழைக்க சிதம்பரம் அனுமதிப்பாரா ?














ஈழத்து இறுதிப் போரின் போதான உச்சகட்ட இனப் படுகொலை நினைவுகள் யார் நினைவிலிருந்தும் எளிதில் அகலாது. முள்ளிவாய்க்கால் பயங்கரம் நிகழ்ந்து ஓராண்டு ஆகப்போகும் நிலையில், ஈழத் தமிழினத்துக்கு நடந்த கொடுமைகளை எண்ணி தமிழ்நாட்டுத் தமிழர்கள் `குற்ற உணர்வோடு` உள்ளம் வெம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு `இரக்கமற்ற` செய்தி இதயத்தை அறுக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயார் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவரை தமிழகத்துக்குள் கால் பதிக்கவும் அனுமதிக்காமல் சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி வந்ததுமே தமிழினப் பற்றாளர்கள் பொங்கி எழத் தொடங்கியுள்ளனர். நடந்ததைக் கண்டித்து அடுத்தடுத்த போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு `போர் முடிந்தது` என சிங்கள அரசு அறிவித்த நிலையில், அங்கு தங்கியிருந்த பிரபாகரனின் பெற்றோர் மற்ற தமிழ் மக்களோடு சேர்ந்து மாணிக் பண்ணை பகுதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். அங்கு சிங்கள ராணுவத்தினர் பரிசோதித்தபோது பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை தமது அடையாளத்தைச் சொன்னதும், ராஜபக்ஷே அரசு அதை வைத்தும் அரசியல் செய்ய விரும்பியது.

தாமே முன்வந்து தாங்கள் யாரென்று சொன்னபிறகும்கூட அவர்கள் எங்கோ ஒளிந்து கொண்டிருந்ததாகவும், ராணுவத்தின் சோதனையில்தான் அவர்கள் பிரபா கரனின் பெற்றோர் என்பது தெரியவந்ததாகவும் கதை கட்டியது ராஜபக்ஷே அரசாங்கம். அவர்களைக் கைது செய்து, பல்வேறு இடங்களுக்கு அலைக்கழித்து... கடைசியாக பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமுக்குக் கொண்டுபோய் சிறை வைத்தார்கள்.

பிரபாகரனின் வயது முதிர்ந்த பெற்றோரைப் பார்ப்பதற்கு எவரையும் ராஜபக்சே அரசு அனுமதிக்கவில்லை. தமிழ் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள்கூட அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களைச் சிறையில் வைக்கவில்லை என்றும், கௌரவத்தோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்றும் ராஜபக்சே சொல்லி வந்தாலும், உண்மையில் எந்த வசதியும் இல்லாமல் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட சூழலில்தான் அந்த மூத்த தம்பதி இருந்தார்கள்.

இந்த நிலையில் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் உடல்நலம் மிகவும் மோச மடைந்து, சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். வேலுப்பிள்ளை அவர்களின் உடலை அடக்கம் செய்வ தற்கு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு பிரபாகரன் குடும்பத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதுமட்டுமின்றி, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்கே பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், சிவாஜிலிங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேதான் கடந்த சில காலமாக வாழ்ந்து வருகிறார்.

மனதளவில் நொறுங்கிப் போனது மட்டுமின்றி, பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் பார்வதியம்மாள், அதற்கான முழுமையான மருத்துவ வசதிகள் மலேசியாவில் இல்லாத காரணத்தால்தான் தமிழகத்துக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு விரும்பினார். முறைப்படி விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, மலேசியாவிலிருக்கும் இந்திய தூதரகமும் மருத்துவ காரணங்களுக்காக ஆறு மாதங்கள் தமிழகத்தில் தங்கியிருக்க அவருக்கு அனுமதி வழங்கிவிட்டது. இப்படி உரிய ஆவணங்களோடும் அனுமதியோடும் தமிழகம் வந்த பார்வதி அம்மாளை குடியுரிமைத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானமென்றே கருதவேண்டி இருக்கிறது.

பிரபாகரனின் பெற்றோரான வேலுப்பிள்ளை அவர் களும், பார்வதி அம்மாளும் இறுதிப் போருக்கு முன்பாக நீண்ட காலம் தமிழகத்தில்தான் தங்கியிருந்தார்கள். 1983-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீது ஏவப்பட்ட கலவரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்த அவர் கள், திருச்சியில்தான் தங்கியிருந்தார்கள். இருபது ஆண்டு காலம் அவர்கள் இங்கே வாழ்ந்து வந்தனர். ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட அசாதாரணமான சூழலிலும்கூட அவர்களுக்குத் தொந்தரவு எதுவும் ஏற்படவில்லை. 2002-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டுக்குப் பிறகு, அங்கு சற்றே நிலைமை மேம்பட்ட காரணத்தால், மீண்டும் தாயகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக அந்தத் தம்பதி 2003-ல் இலங்கைக்குப் போனார்கள்.

இன்று அந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட நிலைக்கு ஒரே காரணம் அவர் பிரபாகரனின் தாய் என்ற பார்வைதான். அந்தப் பார்வையே சரியா, தவறா என்ற விவாதம் இருக்கும் நிலையில்... அதையெல்லாம் தாண்டி அந்தக் குடும்பத்தின் மாண்பு இங்கே கவனித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காரணம், பிரபாகரனின் குடும்ப வரலாற்றை அவ்வளவாக எவரும் அதிகம் அறிந்த தில்லை.

இலங்கை வல்வெட்டித்துறை பகுதியில் மிக்க சிறப்போடு வாழ்ந்த குடும்பம் அது. `திருமேனியார் குடும்பம்` என்றுதான் மரியாதையோடு அழைப்பார்கள் இந்த குடும்பத்தாரை. வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ்பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் அந்தக் குடும்பத்தினர். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் கட்டப்பட்டதுதான். பார்வதி அம்மாளின் குடும்பத்தை `எசமான் குடும்பம்` என்று அழைப்பார்கள். பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளையின் குடும்பத்தைப் போலவே பார்வதி அம்மாளின் பெற்றோரும் புகழ்பெற்று விளங்கியவர்கள் அங்கே!

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல்வழியாகப் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்தவர். டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பலமடங்குப் பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வணிகராகத் திகழ்ந்தார்.

அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். 1867-ம் ஆண்டு அந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அந்தக் கோயில் கட்டி முடியும்வரை மேலே உடை உடுத்து வதில்லை என்று திறந்த மேனியராக அவர் இருந்த காரணத்தினால்தான் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று அவர் சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

இடையில் வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து... அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்! அவருடைய மகனின் பெயர் திருவேங்கடம். திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. அவரும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்ட வராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையைப் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் அரசுப் பணியில் வேலுப்பிள்ளை சேர்ந்தார். முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில் அவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பிறகு, தமிழகத்தில் அவர் வந்து தங்கியிருந்த இருபது ஆண்டுகளில் ஒரு சிறு பிரச்னையும் அவரது குடும்பத்தினரால் எழுந்ததில்லை.

தற்போது பிரபாரனின் தாயார் பார்வதிஅம்மாள், சிகிச்சைக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு நோய்த் துன்பத் தோடு திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருக்கிறது. உண்மையில், இந்த உண்ணாவிரதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து அவருடைய வீட்டின் முன் நடத்தப்படுவதே சரியாக இருக்கும். ஏன் தெரியுமா..?

2003-ம் ஆண்டு பிரபாகரனின் பெற்றோர் இலங் கைக்கு சென்றவுடன் அன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை அனுப்பியது. `மீண்டும் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் தமிழகம் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்` என்பதே அந்தக் கோரிக்கை. மத்திய அரசும் அதனடிப்படையில் தடை ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் தடை ஆணையின் அடிப் படையில் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படக் கூடாத நபர்களின் பட்டியலில் வேலுப்பிள்ளை தம்பதியின் பெயரும் இடம் பெற்றுவிட்டது.

 தற்போதும் அதன் காரணமாகத்தான் விமான நிலைய அதிகாரிகள் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் - அவருக்கு உரிய விசா வழங்கப்பட்டிருந்தும்கூட! பார்வதி அம்மாள் இங்கே தமிழகத்துக்கு ஒரு சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு அரசியல் நிகழ்ச்சி களுக்காகவோ வரவில்லை. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளக்கூட இயலாத நிலையில் இருக்கும் அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத்தான் இங்கு வந்தார். பல்வேறு நோய் களுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி, தமிழகம் உலகப் புகழ் பெற்று வருகிறது. இதைத் தமிழக அரசும் பல சமயங்களில் பெருமையோடு சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறோம். அப்படி இருக்கும்போது பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இங்கே எந்தவித பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இல்லை. இது இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் தெரியாத விஷயமும் அல்ல.

`ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்` என்று சொல்லி தற்போதைய அரசும் தனது பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டுவிட முடியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஒருவேளை தமிழக முதல்வருக்கு தெரியாமலேகூட நடந்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த நிலையை மாற்றி மீண்டும் அவரை இங்கே வரச்சொல்வதற்கு தமிழக முதல்வரால் முடியும். தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ரத்து செய்து, தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து பார்வதி அம்மாளின் பெயரை நீக்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இந்த அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் இருக்கிறது.

உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரமும் தாய்ப் பாசத்தின் பெருமை உணர்ந்த ஒரு தமிழர் என்பதால் இதை உணர்வுபூர்வமாக அவரால் புரிந்து கொள்ள முடியும்.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்த உண்மைகள் இப்போதுதான் மெள்ள மெள்ள வெளியாகத் தொடங்கியுள்ளன. அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க் காலக் குற்றங்கள் குறித்து விசாரித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு, அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த அமைதிக்கான நிறுவனம் ஒன்றின் முன்முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை `ட‌ப்ளின் அறிக்கை` என்று அறியப்படுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை ஆய்வு செய்த அந்தத் தீர்ப்பாயம், அங்கே போர்க்கால குற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகத் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உலக அளவில் எழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கையை தமிழக அரசும் இந்நேரம் வலியுறுத்தியிருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வைத்தான் பார்க்கிறோம். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் கைவிட்டுவிடவில்லை. அவர்களுடைய உணர்வு நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டே இருக்கிறது. இதைத் தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.

பார்வதி அம்மாள் தமிழகத்துக்கு வந்து, உரிய சிகிச்சை பெற்றால்தான் தமிழ்நாட்டின் மனிதாபி மானத்துக்கு மறுபடி உயிர் கிடைக்கும்.

நன்றி: ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment