Saturday, April 17, 2010
இன்றைய தேவைகளையும் - நீண்டகால நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட வாருங்கள்
கடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல் கொள்கைகள் தொடர்பாக பரவலான விழிப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும், வளர்ச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டினைப் பலவீனப்படுத்திட முற்பட்ட சில அரசியல் சக்திகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்குடனும் திருமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எமது பொதுக்கூட்டங்கள் - கலந்துரையாடல்கள் - சந்திப்புக்களில் பங்கேற்ற மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன், எமது கொள்கைகளை முழுமையாக ஆதரித்து குரல் கொடுத்த புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், புலம்பெயர் ஊடகத்துறையினர் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இந்தத் தேர்தலானது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டு, இறுதிப் போரின் போது இடம் பெற்ற பெரும் மனித அவலங்களின் தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டிடாத காலகட்டத்தில் எம் மீது திணிக்கப்பட்டுவிட்டது. அனைத்துவித சனநாயக நடவடிக்கைகளும் தோல்வியடைந்து, ஆயுதம் தரித்த உரிமைப் போராக அது மாற்றங் கண்ட வரலாற்றினைக் கொண்டிருந்த எமது தேசம் மீளவும் சிறீலங்காவின் சனநாயக அமைவுக்குள் நம்பிக்கை வைப்பதற்கான எதுவித நியாயமான காரணங்களும் இல்லாத காலகட்டத்தில் இந்தத் தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளது.
இது பெருமளவு மக்கள் தேர்தல் நடவடிக்கைகளினையும், தேர்தலினையும் புறக்கணித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு முன்னோக்கி செல்வதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டது.
அதிகாரப்பகிர்வு, மிகவும் பலவீனமான சமஸ்டி ஆட்சி என்கின்ற நிலைப்பாடுகளின் தோல்வியே எமது மக்களை 1977 பொதுத்தேர்தலில் தமிழீழத் தனியரசு என்கின்ற அரசியல் இலக்கிற்கு வாக்களிக்கும் நிலைமைக்குத் தள்ளிமையும் - தொடர்ச்சியாக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை நிலைப்பாட்டிற்கான 2004 பொதுத் தேர்தல் ஆணையும் எம் முன்னே உள்ள கொள்கை வழிகாட்டல்களாகும்.
இந்தப் பின்னணியில் மீளவும் நாங்கள் 1977ற்கு முற்பட்ட நிலைப்பாட்டிற்குச் செல்வது மிகவும் ஆபத்தான - தற்கொலைக்கொப்பான அரசியல் பாதை என்பதை வலியுறுத்தியே நாங்கள் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை நிறுவினோம். நாங்கள் இந்தத் தேர்தல்களை பாரளுமன்றத்திற்கான ஆசனங்களைப் கைப்பற்றுதல் எனும் குறுகிய நோக்குடன் அணுகவில்லை என்பதை நாங்கள் ஆரம்பம் முதலே தெளிவாக சொல்லி வந்தோம்.
தமிழ் மக்களின் நீண்டகால நலன்களும், பாதுகாப்பும் இன்று ஏற்பட்டுள்ள குறுங்கால அச்ச நிலையினால் தோற்கடிக்கப்படாது இருப்பதற்கான விழிப்பினை ஏற்படுத்துவதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது. எமது தேர்தல் விஞ்ஞாபனம் இந்த அடிப்படையிலேயே எழுதப்பட்டது. தமிழர் தேசம் எனும் நிலைப்பாட்டினை தெளிவாகவும், துணிச்சலுடனும் நாங்கள் வரைவு செய்தோம்.
இந்த தமிழ்த்தேசம் சிங்கள தேசத்துடன் இணைந்து கூட்டாக செயற்படுவதற்கான நவீனத்துவமான வழிமுறைகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். எங்களால் இயன்றவரை திருமலை மற்றும் யாழ் மாவட்டங்களில் நாங்கள் பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும், சந்திப்புக்கள் வாயிலாகவும் இவற்றினை தெளிவுபடுத்தி வந்துள்ளோம். நாம் இத்தேர்தல்களில் பலத்த சவால்களைச் சந்தித்தோம். எமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதற்கான ஊடக சூழல் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் நிலவவில்லை.
அதனை மீறி மக்களை நேரிடையாக சென்றடைவதற்கான கால அவகாசமோ, வளங்களோ எமக்குக் கிடைக்கவில்லை. அத்துடன், சில பகுதிகளுக்குச் சென்று நாங்கள் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. எனினும், நாங்கள் தேசம் என்பது தொடர்பான சிந்தனைகளையும், இலங்கைத் தீவின் அரசு, சிங்கள - தமிழ்த் தேசங்களின் கூட்டாக இருக்கும் வகைகள் பற்றிய எண்ண ஓட்டங்களையும் இயன்றளவு மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தேசியப்பற்றுக் கொண்ட செயற்பாட்டாளர்கள் முன்பாக வைத்துள்ளோம்.
மேலும், புதிய இளம்வீச்சுக்கொண்ட ஆர்வலர்களையும் நாங்கள் இந்ததத் தேர்தல் மேடைகளைப் பயன்படுத்தி மக்கள் முன்பாக அறிமுகம் செய்துள்ளோம். இந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்ற மக்களின் வெளிப்படையான கருத்துக்களைக் கேட்டதன் மூலமும், தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்காத மக்களின் மௌனமான சமிக்கைகளை புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் நாங்கள் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வடிவமைத்துச் செயற்படுத்தவுள்ளோம்.
எங்கள் நடவடிக்கைகள் அடுத்துவரும் காலகட்டங்களில் மக்களின் குறுங்கால மனிதாபிமான நலன்களை பிரதிபலிக்கும் அதேவேளையில் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பாதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும் அமையும். தமிழர் தாயகத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் விரிவுபட்ட மக்கள் கட்டமைப்புக்களை நிறுவுவதையும், மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதையும் எம்முன்னுள்ள அவசர உடனடிப் பணிகளாக கருதுகின்றோம்.
இதற்கான ஆதரவினை அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், கற்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அழைக்கின்றோம். அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்டமைப்புக்களும் புலம்பெயர் ஊடகங்களும் தொடர்ந்தும் எம்முடன் கரம்கோர்த்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.
அதே வேளை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. 150000 திற்கும் அதிகமான மக்களும் 40000 திற்கும் அதிகமான இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்து வலிமை பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
அவ்வாறான ஓர் சூழ் நிலை ஏற்படும் பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அத்துடன் ‘தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசம்` என்ற நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் சகல தரப்புக்களுடனும் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம்.
நன்றி
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
17.04.2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment