Monday, April 26, 2010

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு மாறியிருக்கும் : வைகோ














“நான் இப்போது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு நிச்சயம் மாறியிருக்கும்” என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் வைகோ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி மேலும் கருத்து தெரிவித்திருக்கும் வைகோ, “என் நண்பர்களான அத்வானி, வாஜ்பாய் இருவரும் வற்புறுத்தியும் இரண்டு முறைகளும் அமைச்சர் பதவி ஏற்க மறுத்துவிட்டேன். 2004 பாராளுமன்றத் தேர்தலில் பலரும் சொல்லியும் பிடிவாதமாக தேர்தலில் நிற்க மறுத்ததுதான், நான் செய்த மிகப் பெரும் தவறு என்பதை இப்போது உணர்கிறேன்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.

அவர் மேலும் பேசும்போது, “ஆனால் எம்.பி. பதவி இல்லாமலேயே நான் 16 முறை பிரதமரைச் சந்தித்து தமிழீழம் தொடர்பாக மன்றாடினேன். இந்த நேரத்தில் நான் எம்.பி.யாக இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் அடிக்கடி இது தொடர்பாக பெரிய அளவில் விவாதங்களைக் கொண்டுவந்து அனைத்துத் தலைவர்களின் ஆதரவையும், திரட்டி சிங்கள அரசுக்கு ஆயுத பலத்தை இந்தியா கொடுப்பதைத் நிச்சயம் தடுத்திருப்பேன்.

1998-ல் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு உள்ளானார்கள். அப்போது வாஜ்பாயிடம் பேசி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நான்தான் கூட்ட வைத்தேன். அக்கூட்டத்தில் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, முலாயம்சிங் யாதவ், நிதீஷ்குமார் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களும் பங்கேற்றார்கள்.

நான் பேச எழுந்தபோது விரைவில் என் பேச்சை முடிக்க விரும்பினேன். ஆனால் நிதிஷ்குமார், “இது பற்றி நீங்கள்தான் விரிவாகச் சொல்ல வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நான் அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி விரிவாகப் பேசினேன். அந்தக் கூட்டத்தின் முடிவில்தான் “இலங்கைக்கு எந்த ஆயுதமும் விற்பதில்லை..” என்று பிரதமர் வாஜ்பாய் முடிவெடுத்தார். பிரதமர் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது.

தற்போது நான் எம்.பி.யாக இருந்திருந்தால் இது மாதிரியான தமிழீழத்திற்கான சேவையை என்னால் செய்திருக்க முடியும். ஆனால் கடந்த 2009 தேர்தலில் ஆளும்கட்சியினர் எனது தொகுதியில் மட்டும் 100 கோடி ரூபாய் செலவழித்து என்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் நான் எதையும் இழப்பு என்று நினைக்கவில்லை. என்னை மக்கள் எங்கு வைத்திருக்கிறார்களோ அங்கிருந்தே சேவை செய்வேன்..” என்றும் கூறியுள்ளார்.

1 comment: