Friday, April 23, 2010

குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்














1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி வைகோ பேசியதாவது :

1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி கருத்து கோரியிருந்தது.

கலைஞர் சிறிதும் யோசிக்காமல் குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல் குட்டிமணி சென்னை விமான நிலையத்தில் சிங்கள அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் நான் தி.மு.க.வின் வெறி பிடித்த தொண்டன். கலைஞரின் அதி முக்கிய விசுவாசி. தீவிரமான தம்பி.. அப்போது நாடாளுமன்றத்திலே தி.மு.க.வின் சார்பிலே இலங்கை பிரச்சினை குறித்து நான்தான் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தேன்.


அந்த நேரத்தில் நடந்த இந்த குட்டிமணியின் நாடு கடத்தல் உத்தரவில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த உடனேயே தமிழகத்தில் ஊர், ஊருக்கு “குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கருணாநிதி ஒழிக” என்று சொல்லி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

தி.மு.க.வின் அதி தீவிர தொண்டனான நான் இதைப் பார்த்து பெரிதும் வருத்தப்பட்டேன். முடிந்த அளவுக்கு அந்த போஸ்டர்களை கிழிக்கின்ற அளவுக்குக்கூட சென்றிருந்தேன். இதுவெல்லாம் அந்த நிகழ்ச்சியை தமிழகத்து மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது என்பதை உணர்ந்த நான் அடுத்து செய்ததுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம்.

குட்டிமணியின் வழக்கறிஞர் கரிகாலன் எனக்கும் நல்ல நண்பர்தான். அவரிடம் நான் பேசினேன். குட்டிமணி கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் கலைஞருக்குத் தொடர்பில்லை என்று குட்டிமணியிடம் ஒரு கடிதம் வாங்கித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வழக்கறிஞர் கரிகாலனால் குட்டிமணியைச் சந்திக்க முடியும் என்பதால் நான் இதை மிகவும் அவசரப்படுத்தினேன். கரிகாலன் முதல் முறை குட்டிமணியைச் சந்தித்து இது பற்றித் தெரிவித்தபோது குட்டிமணி இது பற்றி தங்கத்துரை மற்றும் ஜெகனிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லியனுப்பி விட்டார்.

ஆனால் அடுத்த முறை கரிகாலன் அவர்களைச் சந்தித்தபோது ஒரு கடிதத்தை எழுதியனுப்பினார் குட்டிமணி. அந்தக் கடித வாசகங்கள்கூட நான் எழுதிக் கொடுத்தவைதான். அதேபோல் குட்டிமணி எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதுல இருந்தது என்னவென்றால், “குட்டிமணியாகிய நான் கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டபோது, நான் ஒரு தமிழ் போராளி என்பது தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரியவே தெரியாது..” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கலிங்கப்பட்டியில் இருந்த எனக்கு கரிகாலன் மூலமாகக் கிடைத்தது. நான் உடனேயே இதனை கருணாநிதிக்கு அனுப்பி வைத்தேன். பின்பு ஒரு பத்து நாட்கள் கழித்து சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்து அந்தக் கடிதம் பற்றிக் கேட்டபோது “இவ்ளோ முக்கியமான லெட்டரை எதுக்கு போஸ்ட்ல அனுப்புனீங்க..? இப்பத்தான் எல்லா லெட்டரையும் பிரிச்சுப் பார்த்துட்டுத்தான கொடுக்குறாங்க.. சென்சார்ஷிப் இருக்குன்னு உங்களுக்கே தெரியாதா..?” என்றார்.

இப்படியும் ஒருவேளை நடந்தாலும் நடக்கும் என்பதால் நான் அந்தக் கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தேன். அந்தக் காப்பியை உடனேயே எடுத்து கருணாநிதியிடம் கொடுத்தேன். அதனை கருணாநிதி வாங்கிப் படித்துவிட்டு அடுத்த நாளே முரசொலியில் அதனை வெளியிட்டார். ஆனால் அந்தக் கடிதத்தை வாங்க உதவிய என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட அப்போது குறிப்பிடவில்லை.

ஆனால் இதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் என்று இப்போதும் கருதுகிறேன்..” என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார் வைகோ.  

1 comment:

  1. You are wrong mr.vaikoo.kutti mani was arrested in the nagercoil beach of sri lanka in 1981 while making an attaempt to escape from sri lanka.On the other hand kutti mani was not an liberation seeker for tamils.a smuggler and a killer of a jewel store owner.I am sure kalaignar dont have any hands in the arrest of kuttimani.what happenend to you to tell a lie like this?? cheap politics is the last resuorce.

    ReplyDelete