Saturday, April 24, 2010

பிரபாகரனின் தாயார் செய்த குற்றம் தான் என்ன?














விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (80 வயது) என்ன குற்றம் செய்தார் என்று கூறாமலே நடு இரவில் சென்னை வானூர்தி நிலையம் வந்தடைந்தவுடன் தரை இறங்கவிடாமலே திரும்பவும் மலேசியா நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள் இந்திய வல்லாதிக்க ஆட்சி.

இதற்கு துணை போய்விட்டார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதியில்லை என்று கூறி விமானத்தை விட்டுக் கீழே இறங்குவதற்கு கூட பார்வதி அம்மாளை அனுமதிக்கவில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16-4-2010 இரவு மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து அதே விமானத்தில் மலேசியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டனர். பிரபாகரனின் தாயார் தனது சிகிச்சைக்காக விசா பெறலாம் என்ற நிலையில் அரசின் உத்தரவு அமைந்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்த விசாவினைப் பெற்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது மத்திய அரசினுடைய அதிகாரிகள் சிலர் விமான நிலையத்தில்-விமானத்துக்குள்ளே நுழைந்து தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறி மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அவரை அழைத்துச் செல்வதற்காக சென்னை வானூர்தி நிலையம் சென்றிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அதிர்ச்சியுடன் தமது வீடுகள் திரும்பினர்.

வேடிக்கை என்னவென்றால் தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற கடும் கொந்தளிப்பான நிலைக்குப் பின்னர் கருணாநிதி தனது வழக்கமான நீலிக்கண்ணீர் வடிப்பு நாடகத்தை வெளிப்படித்தினார்.

கருணாநிதியின் கண்துடைப்பு நாடகம்

தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் தனது பேச்சில் கூறியதாவது: “இதுபற்றிய முழுத் தகவலை மறுநாள் காலையில் பத்திரிகைகளைப் படித்த பிறகே தெரிந்து கொள்ள முடிந்தது. இதேபோல ஒரு சம்பவம் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பாலசிங்கம் சத்தியேந்திரா ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோள்படிதான் இடப்பட்டது எனக் கூறப்பட்டது. அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது. எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக சந்திரஹாசன் மீதான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகு பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது."

மேலும் அவர் கூறியதாவது: “பார்வதியம்மாள் தமிழகத்துக்கு வருவது பற்றி அவரிடமிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புகிறவர்களிடம் இருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும் பார்வதியம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தித் தொடர்பு இருந்திருக்கிறதே தவிர தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் கிடையாது. கடந்த 2003-ம் ஆண்டில் தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தின் 2-வது பத்தியில் இலங்கைத் தமிழர்கள் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதியம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் சட்ட ரீதியாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும். அவர்களது பெயர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கடிதம் எழுதி அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள்-எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ-மிக முக்கியமான இந்தப் பிரச்சனையில் எல்லா கட்சியினரும் குரல் எழுப்புகின்ற இந்தப் பிரச்சனையில் அவர்கள் (அதிமுக) மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியில் இருக்கிறார்கள். அது தமிழர் கூட்டணி எனச் சொல்லப்படுகிறது.”

“அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சனையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு உரிய பிரச்சனை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறேன். பார்வதியம்மாள் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால் இந்தச் செய்தி முறையாக உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவுக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் அங்கே மருத்துவ வசதி பெறுவதாக செய்திகள் வந்திருக்கின்றன. மீண்டும் தமிழகம் சென்று மருத்துவம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால் அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி கடிதம் எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசின் பதிலைப் பற்றி-அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால் அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன்" இப்படியாக நீலிக்கண்ணீர் விட்டார் முதல்வர் கருணாநிதி.

70-ஆம் ஆண்டுகளில் செல்வராஜா யோகச்சந்திரன் என்றழைக்கப்படும் குட்டிமணியை நாடு கடத்தினார் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி. பின்னர் சிங்கள ஆட்சியாளர்களினால் கைது செய்யப்பட்டு கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட பின்னர் கருணாநிதியோ ஏதோ தனது பழைய நாசகார வேலைகளை மறைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் குட்டிமணி மற்றும் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் மாந்தர்கள் படுகொலையை தனது கட்சி வளர்ச்சிக்கான பிரச்சாரமாக கருணாநிதி மேற்கொண்டார்.

பாவம் இந்த பார்வதி அம்மாள். படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் சென்றார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் சென்ற விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர். அத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று போற்றப்படும் தமிழகத்திற்குள் பார்வதி அம்மாள் தனக்கு உரித்துடைய தமிழகத்துக்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்று சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும்.

மானத்தமிழ் தலைவர்கள் என்ன கூறுகின்றார்கள்?

நெடுமாறன் கூறியதாவது: “பார்வதி அம்மாள் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.

விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது. விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர்க் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள்.

முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்தக் கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார். உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை தாய்த் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்."

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கூறியதாவது: “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை தமிழகத்தில் தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய பிரபாகரனின் தாயார் சிகிச்சை பெற சென்னை வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பிய செயல் மனிதாபிமானமற்றது. கொடுங்குற்றம் புரிந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குக் கூட தண்டனையை நிறைவேற்றும் முன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் பார்வதி அம்மாளை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கவும் அவர் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தில் தங்கியிருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்."

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது: “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல. இந்த விஷயம் பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி குறைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. சென்னை விமான நிலையத்தில் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தகவல் உடனடியாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை.

இந்திய அதிகாரிகள் மூலம் விசா பெற்றுத்தான் பார்வதி அம்மாள் சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தன்னை இறங்கவிடமாட்டார்கள் என்று அவர் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அவரை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத் தகவல் தெரிந்தும் மௌனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்? 2003-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர தடைவிதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு இன்றைய நிலை வேறு. 2003-ம் ஆண்டு பட்டியலை பல ஆண்டுகள் கழித்துதான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை. தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சு10ழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்தப் பட்டியலை ரத்து செய்திருக்கலாம். ஏன் இதை இன்றுகூட செய்யவில்லை என்பதுதான் கேள்வி."

சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்கு மத்திய அரசின் தவறான உள்நோக்கமே காரணம் என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: “பார்வதி அம்மாளை பிரபாகரனின் தாயாராக பார்க்காமல் முறையான அனுமதி பெற்று மருத்துவ சிகிச்சை பெற வந்த 80 வயது மூதாட்டி என்ற முறையில் பார்த்தால் அவரைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசின் செயல் மனிதாபிமானமற்றது. பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பலர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

நாடாளுமன்றத்தைத் தாக்க சதி செய்த அப்சல் குரு மத்திய அரசால் விருந்தாளி போல் நடத்தப்படுகிறார். மும்பை தாக்குதலுக்குக் காரணமான கசாப்பிற்கு இன்று பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட இங்கு ராஜபட்ச சகோதரர்களுக்கு மத்திய அரசால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வயதானவர் என்ற முறையிலாவது பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும். மத்திய அரசின் இந்தப் போக்கு ஒரு தவறான உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மத்திய அரசின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக அரசுக்கோ முதல்வர் கருணாநிதிக்கோ தெரியாமல் இருக்க சாத்தியமில்லை. பார்வதி அம்மாள் தமிழகத்தில் இருந்தபோது பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவே இருந்தனர். இன்று ராஜபக்சவை திருப்திப்படுத்துவதற்காக எடுத்துள்ள முடிவை மனிதாபிமானமற்றது என்றுதான் கூற வேண்டும்."

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையில் கூறியுள்ளதாவது: “பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம் 2002 இல் அ.தி.மு.க. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதி பெற்றுக்கொண்ட கடிதம்தான் என்பதையும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் பக்கவாத நோயினால் தாக்குண்டு பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து மலேசியாவிற்குச் சென்று அங்கு சரியான சிகிச்சைக்கு வழி இல்லை என்பதற்காக விசா பெற்று இங்கே (தமிழ்நாட்டிற்கு) மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ள நிலையில் 16.4.2010 அன்று விமான நிலையத்தில் அவரை இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது மனிதநேயத்திற்கு விரோதமான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்திருந்தோம் (17.4.2010). பல கட்சியினரும் உணர்ச்சிபூர்வமாக அறிக்கை விடுத்தனர். அ.தி.மு.க.வைத் தவிர!

சட்டப்பேரவையில் இந்நிலை ஏற்பட்டதற்கு மூல காரணம் 2002 இல் பிரபாகரனின் தாய் தந்தையர் இலங்கை சென்றுவிட்ட நிலையில் அவர்கள் மீண்டும் திரும்பி வந்தால் அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு ஆணையை மத்திய அரசுக்கு எழுதிப் பெற்ற பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும். அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் இந்தச் சாதனையைச் செய்தார்! நம் அதிகாரிகளுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை இதனால்தான் என்ற உண்மையை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

அதோடு பிரபாகரனின் தாயார் இங்கே வந்து மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் மத்திய அரசுக்கு தமது அரசு கடிதம் எழுதி உதவிடத் தயார் என்றும் குறிப்பிட்டிருப்பது மிகவும் மனிதாபிமானத்துடன் கூடிய நல்ல செயல்; நம் முதல்வரின் கூற்றை வரவேற்பதோடு அவர்கள் இம்முயற்சியைச் செய்யவேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதற்குமுன்புகூட ஜெயலலிதா (அ.தி.மு.க.) ஆட்சியின்போது தோழர்கள் பழ. நெடுமாறன் சுப. வீரபாண்டியன் போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு பேசத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கிய நிலை தொடர்வதை ரத்து செய்து அவர்களது வாய்ப்பூட்டை விலக்கிய செயலும் கலைஞர் அரசின் மனிதநேயம் மனித உரிமைக் காப்பினைக் காட்டுவதாகும். எனவே இதற்குக் காரணமான அ.தி.மு.க. ஆட்சிபற்றி தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துகொள்வது முக்கியமாகும்."

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “இந்திய குடிவரவைச் சார்ந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கைச் சுற்றறிக்கையே காரணம் என்பது தெரியவருகிறது. அதாவது 1980க்குப் பின்னர் தமிழகத்திற்கு வந்த மேதகு பிரபாகரன் அவர்களின் பெற்றோர் 2003ஆம் ஆண்டு வரையில் திருச்சிராப்பள்ளியிலேயே தங்கியிருந்தனர். 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து பலரும் ஈழத்திற்குத் திரும்பினர். அதே போல மேதகு பிரபாகரன் அவர்களது பெற்றோரும் 2003ஆம் ஆண்டு தமது தாயகத்திற்குத் திரும்பினர். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார்.

அந்த விண்ணப்பத்தின் அடிப்படையிலேதான் அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தத் தடையின் அடிப்படையில்தான் அதிகாரிகள் அன்னை பார்வதி அம்மாள் அவர்களை சென்னையில் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதாவது பார்வதி அம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு அன்றைய அதிமுக அரசு பெற்ற தடையாணைதான் காரணம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. எனினும் அதனைக் காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் பெறவிடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கையானது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். இந்நிலையில் இந்திய அரசின் அனுமதி மறுப்புப் பட்டியலிலிருந்து அன்னை பார்வதி அம்மாள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்திற்கு அவரை அழைத்து வரவேண்டும் எனவும் தமிழக அரசை வற்புறுத்துகிறோம்."

இந்தியா தமிழருக்கு எதிரான செயல்களை தொடர்ந்தும் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை நிரூபித்து காட்டியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயர் இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளமைக்கு நாம்தமிழர் இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம்தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழ் உணர்வாளரும் இயக்குனருமான செந்தமிழ் சீமான் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் தனது உடல்நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளமை மனிதாபிமானம் அற்றசெயல் மட்டுமல்ல சட்டவிரோதசெயல் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்தியமண்ணிற்கு தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மாறுபாடி குஜராத்தி மலையாளி தெலுங்காளி வரையில் அனைவரும் உல்லாசமாக வாழவும் அதிகாரத்திலும் இருக்கையில் எங்கள் அன்னையின் உடல்நலத்திற்கு சிகிச்சை பெற இந்தமண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது வெட்கக்கேடான விடயம் என்றும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்கமுடியாது ஆனால் பாக்கிஸ்தான் நாட்டு சிறுவனுக்கு சிகிச்சைபெற இந்தியா உதவி உலகத்திற்கு படம் எடுத்துக் காட்டியவர்கள் இதில் இரட்டைவேடம் போடுகின்றார்கள். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்களின் தாயாரை மனிதாபிமானம் அற்று திருப்பி அனுப்பியதன் மூலம் இந்திய மாநில அரசுகள் தமிழர்களுக்கு எதிரான தங்கள் செயல்களை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கின்றதை வெளிக்காட்டி நிற்கின்றது."

தேசியத் தலைவர் பிரபாகரனை தமது முடிசூடா மன்னனாக போற்றிய பல தமிழ் நாட்டுத் தலைவர்கள் இன்று பல மாறு பட்ட கருத்துக்களை பல வடிவங்களில் கூறுகின்றார்கள். குறிப்பாக வீரமணி அவர்கள் இன்று ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க முனைகின்றார். இவர் பல காலகட்டங்களில் ஜெயலலிதாவுடன் செயலாற்றியவர். இன்று கருணாநிதியுடன் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார். ஆக இப்படியான தமிழ் நாட்டுத் தமிழர்களினால் தான் இன்று ஈழப் போராட்டம் இந்த நிலையை அடைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது.

புது டெல்லியில் இருந்து பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அத்வானி இந்திய நாடாளுமன்றத்தில் பார்வதி அம்மாளின் நிகழ்வை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவர்களுக்கு அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தும் நடுவண் அரசு பாவம் ஒன்றும் அறியா பிரபாகரனின் தாயார் மட்டும் நாட்டுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இது மனிதாபிமானத்திற்கு விழுந்த பலத்த அடியாகத் தான் பார்க்கவேண்டும் என்று கூறியதன் மூலம் அத்வானி போன்ற வட இந்தியத் தலைவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களிலும் விட பரவாயில்லை போலும். நிச்சயம் பார்வதி அம்மாளை நாட்டுக்குள் விடாமல் செய்ததன் மூலம் இந்தியா மீண்டும் பெரும் தவறை இழைத்துவிட்டது.

மனிதாபிமானம் பேசிய புத்தர் காந்தி நேரு என்று பல தலைசிறந்த தலைவர்கள் பிறந்த இந்திய நாடு இன்று தலை குனிந்து வெட்கப்படும் நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு குற்றமும் செய்யாத பார்வதி அம்மாளை நாட்டுக்குள் விடாமல் செய்ததன் மூலம் மீண்டும் ஈழத் தமிழரின் வெறுப்புக்குள்ளாகியுள்ளது இந்திய நடுவண் அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இயங்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. இந்தியாவின் ஈழத் தமிழர் விரோத போக்கு எல்லை கடந்து சென்று கொண்டிருக்கின்றது என்பதை பல கடந்த கால நிகழ்வுகள் மற்றும் இந்த சம்பவம் மூலம் நிரூபணமாக்கப்பட்டுவிட்டது.



அனலை நிதிஸ் ச. குமாரன்

nithis.s.kumaaran@gmail.com

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரலாறு பாகம் ஒன்று














திருவேங்கடம் வேலுப்பிள்ளை
(வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
10/01/1924 to 06/01/2010)

இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம்.

இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை.....

யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.

வல்வெட்டித்துறை என்னும் பெயர் அப்பிரதேசத்துக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இலங்கையை ஆண்டபோது `வெல்வெட்` என்னும் ஒரு வகை துணி அப்பிரதேசத்தில் இருந்த ஒரு துறைமுகம் மூலமாக ஏற்றுமதியானது.

வெல்வெட் + துறை தான் பிற்காலத்தில் மருவி வல்வெட்டித்துறையானது.

வல்வெட்டித்துறையில் வசித்த பெரும்பாலான மக்களின் பரம்பரைத் தொழிலாகவிருந்தது மீன் பிடியாகும். ஆனாலும் அங்கிருந்த மக்களில் சிலருக்கிருந்த கடல் பற்றிய அறிவு காரணமாக தூர நாடுகளுக்கான கப்பல் பயணத்தின் மாலுமிகளாகவும் செயற்பட்டனர். ஆரம்பகாலத்தில் கடத்தலுக்கும் பெயர் போன ஒரு ஊர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாகவும் நியாயமற்ற வகையிலும் வல்வெட்டித்துறை கடத்தலுடன் மட்டுமே தொடர்பு படுத்தி பேசப் பட்டது.

வல்வெட்டித்துறையும் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளைப் போன்றே பெரும் எண்ணிக்கையிலான கல்வியாளர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய ஒரு ஊராகும்.

அவ்வாறாக வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும் குடும்பமாகும்.

`திருமேனியார் குடும்பம்` என்றுதான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள்.

வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது.

பிரபாகரனின் மூதாதையர்களே சிவன் கோயிலை கட்டுப்படுத்தி வந்தவர்கள் என்ற காரணத்தால் எசமான் குடும்பம் என்றும்  அழைக்கப்பட்டார்கள்.

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல் வழியாகப் இந்தியாவின் கடற்கரையை அண்டிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தவர்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அத்துடன் ஒரு கொடை வள்ளல்.

அந்தக் காலத்தில் விவசாயக் காணிகளையும் பெரும் பண்ணைகளையும் சொந்தமாகக் கொண்டவர். அப்படியான ஒரு 90 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்தது. இங்குதான் புலிகளும் இராணுவத்தினரும் இறுதி யுத்தத்தில் மோதிக் கொண்டனர் என்பது மிகவும் அதிசயத் தக்க ஒரு நிகழ்வு.

அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். 1822ல் வெங்கடாசலத்தின் மறைந்த தந்தை வேலாயுதம் ஒருநாள் அவரின் கனவில் வந்து சிவனுக்காக ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே அந்தக் குடும்பத்துக்கு பிள்ளையார் மற்றும் அம்மன் கோயில்களுடன் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து அதை தனது வைராக்கியமாகவே கொண்டிருந்தார் அவர். சிறிது சிறிதாக கோயில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்கத் தொடங்கினார். விரைவிலேயே பெருந்தொகைப் பணத்தைச் சேர்த்துவிட்டார்.

முதன் முதலாக அம்மன் கோயிலுக்கு அருகாக 60 `பேர்ச்` அளவு கொண்ட காணி ஒன்றை வாங்கினார். தான் கொண்ட வைராக்கியம் காரணமாக அன்றிலிருந்து சிவன் கோயில் கட்டி முடியும்வரை தன் உடம்பில் மேலாடை உடுத்தாமல் ஒரு தவம் போன்று இருந்த காரணத்தால் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று இவருடைய சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து. அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்!

வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். அத‌னால் அவர்களது குடும்பமே அந்தக் கோயிலின் பரம்பரை சொந்தக்காரர்களாகவும் தர்மகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

ஒருவாராக 1867-ம் ஆண்டு சிவன் கோயில் கட்டப்பட்டு அந்த ஆண்டே குடமுழுக்கும் செய்யப்பட்டது.

வெங்கடாசலமும் அவரது சகோதரர் குழந்தைவேல்பிள்ளையும் சேர்ந்து கொழும்பு செக்குத் தெருவிலும் கீரிமலையிலும் ஏன் பர்மியத் தலைநகர் ரங்கூனிலும் கூட கோயில் கட்டினார்கள்.

வெங்கடாசலத்தின் மகனின் பெயரும் வேலுப்பிள்ளை தான். இந்த வேலுப்பிள்ளையாரின் மகனான‌ திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. திருவேங்கடம் தனது ஒரே ஒரு மகனுக்கு தன் தந்தையின் ஞாபகார்த்தமாக வேலுப்பிள்ளை என்றே பெயரிட்டார்.

பிரபாகரனின் அப்பாவான வேலுப்பிள்ளையும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்டவராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் இலங்கை அரசுப் பணியில் எழுத்தராகச் சேர்ந்தார் வேலுப்பிள்ளை. முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில்தான் அவர் பணி ஓய்வு பெற்றார். 1982 ல் அவர் மாவட்ட நில அதிகாரியாக ஓய்வு பெற்றபோது இலங்கையின் காணி அமைச்சராக இருந்தது காமினி திசாநாயக்காவாகும்.

அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

வேலுப்பிள்ளை தனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது 1947ல் பார்வதி அம்மாளை மணம் முடித்தார்.

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.

மூத்தவர் மனோகரன் 1948ல் பிறந்தார். கப்பலில் வானொலி அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்.

அடுத்தவர் ஜெகதீஸ்வரி 1949ல் பிறந்தார். பின்னாளில் அப்போதிக்கரியாக இருந்த மதியாபரணத்தை கல்யாணம் செய்தார். ஐரோப்பாவில் வசித்த இவர்கள் தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கிறார்கள்.

அடுத்தவர் வினோதினி 1952ல் பிறந்தார். பின்னாளில் வர்த்தகப் பட்டதாரியான ராஜேந்திரனை கல்யாணம் செய்து கொண்டவர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் கனடா சென்ற அவர் தற்போதும் அங்கேதான் வசிக்கிறார்.

கடைக்குட்டியாகப் பிறந்தவர் சாட்சாத் பிரபாகரனே தான். 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார்.  அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

இக்குழந்தையின் பிறப்பின் பின்னாளும் முன்னாளும் ஒரு பெரும் வரலாறே அடங்கிக் கிட‌க்கிறது.

அதை வரும் வாரத்தில் பார்க்கலாம்.....

- சாணக்கியன்

‘ரெட்டச்சுழி’யில் இமிடேட் கேரக்டர்..! கோபத்தில் குஷ்பூ














நடிகை குஷ்பூ திருமணத்திற்கு முந்தைய உறவுகள் பற்றியும், கற்பு பற்றியும் எடுத்துவிட்ட அறிக்கைகளினாலும், பேச்சினாலும் கொந்தளித்த சூழலை தமிழ்நாட்டில் யாரும் மறந்திருக்க முடியாது..

இன்னமும் அது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்தச் சூழலில் இதனை அடையாளப்படுத்தியே ஒரு திரைப்படத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள்.

சிகரமும், இயக்கமும் ரெட்டச்சுழி படத்தில் நடிகை குஷ்பூவை இமிடேட் செய்து ஒரு சிறுமியின் கேரக்டர் வருகிறது.

அந்தச் சிறுமியின் பெயரே குஷ்பூதான். பேசுகின்ற பேச்சுக்களெல்லாம் பெரிய குஷ்பூவை போலவே இருப்பதை தியேட்டரில் ரசிகர்கள் பெருமளவு ரசிக்கிறார்களாம்..

“குஷ்பூ நீ வாயைத் தொறக்காத.. நீ என்ன பேசினாலும் பிரச்சினையாயிரும்..!”

“குஷ்பூ செருப்பை வாசல்லயே கழட்டி வைச்சிட்டு வா.. அப்புறம் யாராவது ஏதாவது பிரச்சினையைக் கிளப்பிருவாங்க..!”

இப்படி குஷ்பூ சம்பந்தப்பட்ட டாபிக்குகளே டயலாக்குகளாகவும் வர இந்தக் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறதாம்..

தற்போது தனது குழந்தைகளுடன் லண்டனில் ஹாலிடேயில் இருக்கும் குஷ்பூவிடம் இதை யாரோ போட்டுக் கொடுத்திருக்க.. கர்புர்ரென்றாகி விட்டாராம்.

“படத்தைப் பார்த்துட்டு அப்புறமா பேசிக்கிறேன்” என்று இப்போதைக்கு சொல்லியிருக்கிறார்.

30-ம் தேதிதான் குஷ்பூ நாடு திரும்புகிறார்.. அதுக்கப்புறம்..?

Friday, April 23, 2010

எங்கே போயினர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்?














தமிழீழ தேசிய தாயை! தமிழ்  நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து  அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி  அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும்  ஒரு எழிச்சியோடு புரட்சி செய்யப்  புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள்  அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின்  தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின்  தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான  போராட்டங்களை இன, மான, உணர்வோடு  நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில்  தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு  எதிராக இருந்தவர்கள் கூட எம்  தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து  மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில்  குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறையில் சிக்கி அழிந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தமிழினத்தையும் மறுபிறவி எடுக்கவைத்து தமிழர்களை தரணியெங்கும் தலை நிமிரவைத்த தமிழ் இனத்தின் தேசியத் தாய்க்கு,தமிழக இந்திய அரசுகளால் இழைக்கப்பட்ட இந்த வக்கிரமான கொடுமையை கண்டிக்கத்தவறியது ஏன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுடைய பொறுப்பில் இருந்துகொண்டு இந்தியத் தூதரகங்கள் முன் இதற்க்கான எதிர்ப்புக்களைக் காட்டத் தவறியது ஏன்?

இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன்கூட இவர்கள் எதிர்ப்புக்களைக் காட்டி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கத் தவறியதன் காரணம் என்ன?

சரி திருகோணமலையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கூட இந்திய மத்திய அரசிற்கோ தமிழ் நாட்டு அரசிற்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கத் தவறியது ஏன் தமிழீழத் தேசியத் தாய்க்கு நடந்த கொடுமைக்கு கூட ஒரு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத நீங்கள் தமிழ் இனத்தின் ஏகப்பிரதிநிதிகளா நீங்கள் தமிழ் இனத்தின் தலைமைகளா?

இவற்றுக்கும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டப்போகிறீர்களா?

அல்லது இதுவும் இராஜதந்திரம் என்று எம் இனத்தின் காதுகளில் சந்தணம் பூசப் போகிறீர்களா? இந்த ஏகப்பிரதிநிதிகள் சொல்வதை கேட்பவர்கள் கேனயனாக இருந்தால் சம்பந்தரின் தலையில் சண் தொலைக்காட்சி தெரியுமாம், கிணத்துத் தவளைபோல பதவி மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்றுகொண்டு சிங்கள இனவெறி அரசையும் இந்தியப் பாதக அரசையும் இராஜதந்திரமான முறையில் அணுகுவதாகக் கூறி எம் மக்களை ஏமாற்றிக்கொண்டு, இனவெறி பிடித்த அரசுகளிடம் அடிபணிந்து தன்மானத்தை விற்று, இதுவரை காலமும் எந்த உரிமைகளுக்காக, எமது சந்ததி அகிம்சை வழியிலும் ஆயுதம் ஏந்தியும் உயிராயுதங்களாகவும் களத்திலே போராடி வெடியாக வெடித்துக் களப்பலியாகி, எம் தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனார்களோ! அந்த வித்துக்களை பிடுங்கி எறிந்து, அந்த மான மாவீரர்களின் இலட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்து, அவர்களின் தாயகக் கனவுகளையெல்லாம் கலைத்து, தாய்மண்ணின்காவல்த் தெய்வங்களுக்கும், எம்தேசியத்தலைமைக்கும்,ஏன்ஒட்டுமொத்த தமிழ் இனத்திர்க்குமே நம்பிக்கைத் துரோகம் செய்து, தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட இவர்களா?

தமிழர்களின் ஏகப்பிரதி நிதிகள்! இவர்கள்தான் தமிழினத்தின் உரிமைகளை வென்று தரப்போகிறவர்களா? ஒட்டுமொத்த தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக சிந்தித்து செயற்பட்ட தவறிய இவர்கள் கடந்த காலங்களில் இந்திய இலங்கை அரசுகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் பணத்திற்காக கொடுத்த வாக்குறுதிகள் காரணமாக தற்போது சுயமாக எந்த முடிவுகளும் எடுக்க இயலாத இவர்கள்! இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறார்கள்?

சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர,சம்மந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பத்திரிகை அறிக்கையும்,வானொலிக்கு வழங்கிய பேட்டியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளது அவர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து?

பி,பி,சீ,தமிழ் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இருந்து சில,இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கி எமக்கு வாக்களித்துள்ளனர் அவர்களின் ஆணையை நிறைவேற்ற இனி வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட விரும்புகிறோம்! இரா சம்மந்தரின் பத்திரிக்கை அறிக்கை?

தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையை நிறைவேற்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக இருக்கிறது,பிளவு படாத இலங்கைக்குள்,(தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட)தமிழ் மக்களுக்கென ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும்,அவ்வாறான செயற்ப்பாடு தமிழ் மக்களின் நலனை மட்டுமல்ல முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும் என்று திருமலையில் நடந்த மாநாட்டின் பின்னர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார், இந்த அறிக்கைகளில் இருந்து ஒவ்வெரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டியது,

இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்ப்பாடுகளில் எமக்கு ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கும், இவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உரிமைகளை விற்று விற்றுப் பிழைப்பு நடத்தப் பிறப்பெடுத்தவர்கள் , இவர்கள் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர், வன்னி யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வாழுகின்ற எம் மக்களின் மீள் குடியேற்றத்தை காரணம் காட்டி, அவர்களுக்கு உதயுவதற்கு என்ற போர்வையில் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து பெருமளவான பணத்தினைப் பெற்று, அந்தப்பணத்தில் கூட்டமைப்பின் முக்கியமானவர்கள் ஒருசிலர் ஏப்பம் விடத் துணிந்துவிட்டனர் அவர்களை இனம்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்!

தமிழன் என்று சொல்லடா தலைவன் வழி நில்லடா தன்மானமுள்ள தமிழனாக வாழடா!

இன்று தமிழர் பிரதேசம் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தமிழ் மக்களின் சுதந்திரமான நிம்மதியான சுயகவுரவத்துடன் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும் என்ற இலச்சியத்தை நெஞ்சில் நிறுத்தி அந்த மண்ணிலே மக்களுக்காக செத்து மடிந்து வித்தாகிப்போன மாவீரர்களின்,

வீரமறவர்களின் துயிலும் இல்லங்கள் நினைவுச் சின்னங்கள் தூபிகள் அனைத்தும் சிங்கள இனவெறி காடையர்களால் அடித்து உடைத்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்க அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களும் அரசியல்த் தலைவர்களும் தமக்கும் அந்தக் கல்லறைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லாதது போன்று வாய்பொத்தி கண்மூடி கைகட்டி சூடுசொரணை அற்ற தன்மானமற்ற நன்றிமறந்த மானங்கெட்ட சுயநல வாழ்வில் என்னசந்தோசம் காண்கிறார்களோ தெரியவில்லை தமிழன் தமிழனாக மட்டும் வாழ வேண்டும் பச்சோந்திகளாக அல்ல !

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்! நன்றி!

தமிழரசன்!

பார்வதி அம்மாளை திருப்பி அழைக்க சிதம்பரம் அனுமதிப்பாரா ?














ஈழத்து இறுதிப் போரின் போதான உச்சகட்ட இனப் படுகொலை நினைவுகள் யார் நினைவிலிருந்தும் எளிதில் அகலாது. முள்ளிவாய்க்கால் பயங்கரம் நிகழ்ந்து ஓராண்டு ஆகப்போகும் நிலையில், ஈழத் தமிழினத்துக்கு நடந்த கொடுமைகளை எண்ணி தமிழ்நாட்டுத் தமிழர்கள் `குற்ற உணர்வோடு` உள்ளம் வெம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு `இரக்கமற்ற` செய்தி இதயத்தை அறுக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயார் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவரை தமிழகத்துக்குள் கால் பதிக்கவும் அனுமதிக்காமல் சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி வந்ததுமே தமிழினப் பற்றாளர்கள் பொங்கி எழத் தொடங்கியுள்ளனர். நடந்ததைக் கண்டித்து அடுத்தடுத்த போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு `போர் முடிந்தது` என சிங்கள அரசு அறிவித்த நிலையில், அங்கு தங்கியிருந்த பிரபாகரனின் பெற்றோர் மற்ற தமிழ் மக்களோடு சேர்ந்து மாணிக் பண்ணை பகுதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். அங்கு சிங்கள ராணுவத்தினர் பரிசோதித்தபோது பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை தமது அடையாளத்தைச் சொன்னதும், ராஜபக்ஷே அரசு அதை வைத்தும் அரசியல் செய்ய விரும்பியது.

தாமே முன்வந்து தாங்கள் யாரென்று சொன்னபிறகும்கூட அவர்கள் எங்கோ ஒளிந்து கொண்டிருந்ததாகவும், ராணுவத்தின் சோதனையில்தான் அவர்கள் பிரபா கரனின் பெற்றோர் என்பது தெரியவந்ததாகவும் கதை கட்டியது ராஜபக்ஷே அரசாங்கம். அவர்களைக் கைது செய்து, பல்வேறு இடங்களுக்கு அலைக்கழித்து... கடைசியாக பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமுக்குக் கொண்டுபோய் சிறை வைத்தார்கள்.

பிரபாகரனின் வயது முதிர்ந்த பெற்றோரைப் பார்ப்பதற்கு எவரையும் ராஜபக்சே அரசு அனுமதிக்கவில்லை. தமிழ் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள்கூட அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களைச் சிறையில் வைக்கவில்லை என்றும், கௌரவத்தோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்றும் ராஜபக்சே சொல்லி வந்தாலும், உண்மையில் எந்த வசதியும் இல்லாமல் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட சூழலில்தான் அந்த மூத்த தம்பதி இருந்தார்கள்.

இந்த நிலையில் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் உடல்நலம் மிகவும் மோச மடைந்து, சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். வேலுப்பிள்ளை அவர்களின் உடலை அடக்கம் செய்வ தற்கு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு பிரபாகரன் குடும்பத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதுமட்டுமின்றி, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்கே பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், சிவாஜிலிங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேதான் கடந்த சில காலமாக வாழ்ந்து வருகிறார்.

மனதளவில் நொறுங்கிப் போனது மட்டுமின்றி, பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் பார்வதியம்மாள், அதற்கான முழுமையான மருத்துவ வசதிகள் மலேசியாவில் இல்லாத காரணத்தால்தான் தமிழகத்துக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு விரும்பினார். முறைப்படி விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, மலேசியாவிலிருக்கும் இந்திய தூதரகமும் மருத்துவ காரணங்களுக்காக ஆறு மாதங்கள் தமிழகத்தில் தங்கியிருக்க அவருக்கு அனுமதி வழங்கிவிட்டது. இப்படி உரிய ஆவணங்களோடும் அனுமதியோடும் தமிழகம் வந்த பார்வதி அம்மாளை குடியுரிமைத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானமென்றே கருதவேண்டி இருக்கிறது.

பிரபாகரனின் பெற்றோரான வேலுப்பிள்ளை அவர் களும், பார்வதி அம்மாளும் இறுதிப் போருக்கு முன்பாக நீண்ட காலம் தமிழகத்தில்தான் தங்கியிருந்தார்கள். 1983-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீது ஏவப்பட்ட கலவரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்த அவர் கள், திருச்சியில்தான் தங்கியிருந்தார்கள். இருபது ஆண்டு காலம் அவர்கள் இங்கே வாழ்ந்து வந்தனர். ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட அசாதாரணமான சூழலிலும்கூட அவர்களுக்குத் தொந்தரவு எதுவும் ஏற்படவில்லை. 2002-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டுக்குப் பிறகு, அங்கு சற்றே நிலைமை மேம்பட்ட காரணத்தால், மீண்டும் தாயகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக அந்தத் தம்பதி 2003-ல் இலங்கைக்குப் போனார்கள்.

இன்று அந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட நிலைக்கு ஒரே காரணம் அவர் பிரபாகரனின் தாய் என்ற பார்வைதான். அந்தப் பார்வையே சரியா, தவறா என்ற விவாதம் இருக்கும் நிலையில்... அதையெல்லாம் தாண்டி அந்தக் குடும்பத்தின் மாண்பு இங்கே கவனித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காரணம், பிரபாகரனின் குடும்ப வரலாற்றை அவ்வளவாக எவரும் அதிகம் அறிந்த தில்லை.

இலங்கை வல்வெட்டித்துறை பகுதியில் மிக்க சிறப்போடு வாழ்ந்த குடும்பம் அது. `திருமேனியார் குடும்பம்` என்றுதான் மரியாதையோடு அழைப்பார்கள் இந்த குடும்பத்தாரை. வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ்பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் அந்தக் குடும்பத்தினர். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் கட்டப்பட்டதுதான். பார்வதி அம்மாளின் குடும்பத்தை `எசமான் குடும்பம்` என்று அழைப்பார்கள். பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளையின் குடும்பத்தைப் போலவே பார்வதி அம்மாளின் பெற்றோரும் புகழ்பெற்று விளங்கியவர்கள் அங்கே!

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல்வழியாகப் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்தவர். டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பலமடங்குப் பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வணிகராகத் திகழ்ந்தார்.

அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். 1867-ம் ஆண்டு அந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அந்தக் கோயில் கட்டி முடியும்வரை மேலே உடை உடுத்து வதில்லை என்று திறந்த மேனியராக அவர் இருந்த காரணத்தினால்தான் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று அவர் சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

இடையில் வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து... அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்! அவருடைய மகனின் பெயர் திருவேங்கடம். திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. அவரும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்ட வராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையைப் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் அரசுப் பணியில் வேலுப்பிள்ளை சேர்ந்தார். முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில் அவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பிறகு, தமிழகத்தில் அவர் வந்து தங்கியிருந்த இருபது ஆண்டுகளில் ஒரு சிறு பிரச்னையும் அவரது குடும்பத்தினரால் எழுந்ததில்லை.

தற்போது பிரபாரனின் தாயார் பார்வதிஅம்மாள், சிகிச்சைக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு நோய்த் துன்பத் தோடு திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருக்கிறது. உண்மையில், இந்த உண்ணாவிரதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து அவருடைய வீட்டின் முன் நடத்தப்படுவதே சரியாக இருக்கும். ஏன் தெரியுமா..?

2003-ம் ஆண்டு பிரபாகரனின் பெற்றோர் இலங் கைக்கு சென்றவுடன் அன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை அனுப்பியது. `மீண்டும் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் தமிழகம் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்` என்பதே அந்தக் கோரிக்கை. மத்திய அரசும் அதனடிப்படையில் தடை ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் தடை ஆணையின் அடிப் படையில் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படக் கூடாத நபர்களின் பட்டியலில் வேலுப்பிள்ளை தம்பதியின் பெயரும் இடம் பெற்றுவிட்டது.

 தற்போதும் அதன் காரணமாகத்தான் விமான நிலைய அதிகாரிகள் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் - அவருக்கு உரிய விசா வழங்கப்பட்டிருந்தும்கூட! பார்வதி அம்மாள் இங்கே தமிழகத்துக்கு ஒரு சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு அரசியல் நிகழ்ச்சி களுக்காகவோ வரவில்லை. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளக்கூட இயலாத நிலையில் இருக்கும் அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத்தான் இங்கு வந்தார். பல்வேறு நோய் களுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி, தமிழகம் உலகப் புகழ் பெற்று வருகிறது. இதைத் தமிழக அரசும் பல சமயங்களில் பெருமையோடு சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறோம். அப்படி இருக்கும்போது பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இங்கே எந்தவித பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இல்லை. இது இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் தெரியாத விஷயமும் அல்ல.

`ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்` என்று சொல்லி தற்போதைய அரசும் தனது பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டுவிட முடியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஒருவேளை தமிழக முதல்வருக்கு தெரியாமலேகூட நடந்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த நிலையை மாற்றி மீண்டும் அவரை இங்கே வரச்சொல்வதற்கு தமிழக முதல்வரால் முடியும். தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ரத்து செய்து, தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து பார்வதி அம்மாளின் பெயரை நீக்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இந்த அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் இருக்கிறது.

உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரமும் தாய்ப் பாசத்தின் பெருமை உணர்ந்த ஒரு தமிழர் என்பதால் இதை உணர்வுபூர்வமாக அவரால் புரிந்து கொள்ள முடியும்.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்த உண்மைகள் இப்போதுதான் மெள்ள மெள்ள வெளியாகத் தொடங்கியுள்ளன. அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க் காலக் குற்றங்கள் குறித்து விசாரித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு, அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த அமைதிக்கான நிறுவனம் ஒன்றின் முன்முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை `ட‌ப்ளின் அறிக்கை` என்று அறியப்படுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை ஆய்வு செய்த அந்தத் தீர்ப்பாயம், அங்கே போர்க்கால குற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகத் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உலக அளவில் எழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கையை தமிழக அரசும் இந்நேரம் வலியுறுத்தியிருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வைத்தான் பார்க்கிறோம். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் கைவிட்டுவிடவில்லை. அவர்களுடைய உணர்வு நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டே இருக்கிறது. இதைத் தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.

பார்வதி அம்மாள் தமிழகத்துக்கு வந்து, உரிய சிகிச்சை பெற்றால்தான் தமிழ்நாட்டின் மனிதாபி மானத்துக்கு மறுபடி உயிர் கிடைக்கும்.

நன்றி: ஜூனியர் விகடன்

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் மரணம்














பிரபல மலையாள நடிகரான ஸ்ரீநாத் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கொத்தமங்கலம் என்னும் ஊரில் இன்று காலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் அவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான `சிகார்` என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீநாத் அங்கு வந்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வந்தார்.

அவருடைய உடலை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள். ஆனாலும் மேல்விசாரணையில்தான் எதுவும் தெரிய வரும் என்று சொல்லப்படுகிறது.

50 வயதான ஸ்ரீநாத் 1980-களில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் ஸ்ரீநாத் தமிழில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த `இரயில் பயணங்களில்` படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

`ஷாலினி எண்டே கூத்துக்காரி`, `எது நிஜங்களூடே கதா`, `ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு`, `கிரீடம்` என்ற புகழ் பெற்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாளத்தில் கடைசியாக `கேரளா கபே` என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மலையாளப் படவுலகில் ஸ்ரீநாத் நுழைந்தபோது தன்னுடன் ஜோடியாக நடிக்கத் துவங்கிய பிரபல இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவின் தங்கையான சாந்தி கிருஷ்ணாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் சில வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஸ்ரீநாத் இதன் பின்பு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீநாத் அரசியலிலும் கொஞ்சம் ஆர்வமாக இருந்தார். கடந்த பொதுத்தேர்தலில் அட்டிங்கல் தொகுதியில் சிவசேனா வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சமீப நாட்களில் மிக அதிகமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். சிறந்த டிவி நடிகருக்கான மாநில விருதை ஸ்ரீநாத் பெற்றிருக்கிறார்.

இவருடைய மரணத்துக்கான காரணத்தை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.

ஸ்ரீநாத்தின் மரணம் குறித்து நடிகர்கள் மோகன்லால், காலாபவன் மணி, மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் இன்னசென்ட் என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்ரீநாத் தமிழில் கதாநாயகனாக நடித்திருந்த `இரயில் பயணங்கள்` திரைப்படம்  வெள்ளிவிழா  கண்ட  புகழ்  பெற்றத்  திரைப்படம்.  டி.ராஜேந்திரின்  இரண்டாவது  திரைப்படமான  இப்படத்தின்  பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட். `இரயில் பயணங்கள்` படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஜோதியும் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கேன்ஸர் நோயினால் மரணடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்














1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி வைகோ பேசியதாவது :

1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி கருத்து கோரியிருந்தது.

கலைஞர் சிறிதும் யோசிக்காமல் குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல் குட்டிமணி சென்னை விமான நிலையத்தில் சிங்கள அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் நான் தி.மு.க.வின் வெறி பிடித்த தொண்டன். கலைஞரின் அதி முக்கிய விசுவாசி. தீவிரமான தம்பி.. அப்போது நாடாளுமன்றத்திலே தி.மு.க.வின் சார்பிலே இலங்கை பிரச்சினை குறித்து நான்தான் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தேன்.


அந்த நேரத்தில் நடந்த இந்த குட்டிமணியின் நாடு கடத்தல் உத்தரவில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த உடனேயே தமிழகத்தில் ஊர், ஊருக்கு “குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கருணாநிதி ஒழிக” என்று சொல்லி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

தி.மு.க.வின் அதி தீவிர தொண்டனான நான் இதைப் பார்த்து பெரிதும் வருத்தப்பட்டேன். முடிந்த அளவுக்கு அந்த போஸ்டர்களை கிழிக்கின்ற அளவுக்குக்கூட சென்றிருந்தேன். இதுவெல்லாம் அந்த நிகழ்ச்சியை தமிழகத்து மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது என்பதை உணர்ந்த நான் அடுத்து செய்ததுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம்.

குட்டிமணியின் வழக்கறிஞர் கரிகாலன் எனக்கும் நல்ல நண்பர்தான். அவரிடம் நான் பேசினேன். குட்டிமணி கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் கலைஞருக்குத் தொடர்பில்லை என்று குட்டிமணியிடம் ஒரு கடிதம் வாங்கித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வழக்கறிஞர் கரிகாலனால் குட்டிமணியைச் சந்திக்க முடியும் என்பதால் நான் இதை மிகவும் அவசரப்படுத்தினேன். கரிகாலன் முதல் முறை குட்டிமணியைச் சந்தித்து இது பற்றித் தெரிவித்தபோது குட்டிமணி இது பற்றி தங்கத்துரை மற்றும் ஜெகனிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லியனுப்பி விட்டார்.

ஆனால் அடுத்த முறை கரிகாலன் அவர்களைச் சந்தித்தபோது ஒரு கடிதத்தை எழுதியனுப்பினார் குட்டிமணி. அந்தக் கடித வாசகங்கள்கூட நான் எழுதிக் கொடுத்தவைதான். அதேபோல் குட்டிமணி எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதுல இருந்தது என்னவென்றால், “குட்டிமணியாகிய நான் கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டபோது, நான் ஒரு தமிழ் போராளி என்பது தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரியவே தெரியாது..” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கலிங்கப்பட்டியில் இருந்த எனக்கு கரிகாலன் மூலமாகக் கிடைத்தது. நான் உடனேயே இதனை கருணாநிதிக்கு அனுப்பி வைத்தேன். பின்பு ஒரு பத்து நாட்கள் கழித்து சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்து அந்தக் கடிதம் பற்றிக் கேட்டபோது “இவ்ளோ முக்கியமான லெட்டரை எதுக்கு போஸ்ட்ல அனுப்புனீங்க..? இப்பத்தான் எல்லா லெட்டரையும் பிரிச்சுப் பார்த்துட்டுத்தான கொடுக்குறாங்க.. சென்சார்ஷிப் இருக்குன்னு உங்களுக்கே தெரியாதா..?” என்றார்.

இப்படியும் ஒருவேளை நடந்தாலும் நடக்கும் என்பதால் நான் அந்தக் கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தேன். அந்தக் காப்பியை உடனேயே எடுத்து கருணாநிதியிடம் கொடுத்தேன். அதனை கருணாநிதி வாங்கிப் படித்துவிட்டு அடுத்த நாளே முரசொலியில் அதனை வெளியிட்டார். ஆனால் அந்தக் கடிதத்தை வாங்க உதவிய என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட அப்போது குறிப்பிடவில்லை.

ஆனால் இதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் என்று இப்போதும் கருதுகிறேன்..” என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார் வைகோ.  

Thursday, April 22, 2010

பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பியது கொடூரமானது - பத்திரிகையாளர் ஞாநி கடும் கண்டனம்














மருத்துவ சிகிச்சை பெற சென்னைக்கு வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை திருப்பியனுப்பிய இந்திய, தமிழக அரசுகளை பிரபல பத்திரிகையாளர் ஞாநி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் குமுதம் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :

“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேஷியாவுக்கு செல்ல ராஜபக்சேவே அனுமதிக்கிறார். பாகிஸ்தானுடன் கடும் பிரச்சினைகள் இருந்தபோதும், இந்தியாவில் சிகிச்சை பெற ஏராளமான பாகிஸ்தானியர்களை அனுமதிக்கிறோம்.

பார்வதியம்மாளுக்குக் காலையில் விசா கொடுத்துவிட்டு மாலையில் இந்தியா மறுத்தது கடும் கண்டனத்துக்குரியது. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருமே கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று மருத்துவ சிகிச்சை பெற எவருக்கும் உரிமை உண்டு. இது அடிப்படை மனித உரிமை.

இன்னொரு பக்கம் பார்வதியம்மாள் ஏன் இப்படி மனித நேயமற்ற இந்திய - தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகளை நம்பி அவதிப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது..

இந்தியாவில்தான் சிகிச்சை பெற வேண்டுமென்பது பார்வதியம்மாளின் விருப்பமென்றால் அதை இந்திய, தமிழக அரசுகள் தடுப்பது கொடூரமானது. ஜெயலலிதா காலத்தில் பிரபாகரனின் பெற்றோர் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்தான் இப்போதும் பார்வதியம்மாள் தடுக்கப்பட்டதற்குக் காரணம் என்று கலைஞர் விளக்கியிருக்கிறார்.

இவர் ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகப் போகிறதே.. ஏன் அந்தக் கடிதத்தை இவர் இதுவரை ரத்து செய்யவில்லை..? பார்வதியம்மாள் விஷயத்தில் சட்டமன்றத்தில் வாயைத் திறந்தவர் நளினி விஷயத்தில் ஏன் இன்னும் இறுக்க மூடிக் கொண்டே இருக்கிறார்?”

இவ்வாறு ஞானி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் விடுதலை பெற்று வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம்














சிறிலங்காவின் மனித உரிமைச் செயற்பாட்டாளரான செறீன் சேவியர், போரினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவினது வடக்கின் தலைநகராம் யாழ்ப்பாணத்தில் தனது பணியுடன் தொடர்புடைய கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது தென்னாசியப் பெண்களின் தேசிய உடையான சேலையையே அணிந்து செல்வார்.

'இந்தப் பிரதேச மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் நீங்கள் சேலையுடன்தான் இருக்கவேண்டும்' என மனித உரிமைகளுக்கான இல்லம் [Home for Human Rights - HHR] என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான செறின் சேவியர் கூறுகிறார்.

ஆனால், மேற்கு நாடொன்றில் தனது கல்வியினைக் கற்ற சேவியர் கொழும்பிலுள்ள தனது செயலகத்தில் இருக்கும் போது ஜீன்சுடன் காணப்படுகிறார்.

இதனால்தான், முன்னோக்கிய ஒரு முயற்சியாகக் கருதப்படும் ஏதாவது ஒன்றை சிறிலங்காவின் பழமைவாதக் கருத்துக்களில் இன்னமும் ஊறிப்போயிருக்கும் நகரமான யாழ்ப்பாணத்துப் பெண்களுக்கு இவரால் செய்யமுடிகிறது.

இவ்வாறு ஈழத்தமிழ் பெண்களின் முன்னேற்றம் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றை அனைத்துலக செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஜபிஎஸ் [Inter Press Service - IPS] வெளியிட்டுள்ளது.
அதன் செய்தியாளராகிய Feizal Samath எழுதிய அச்செய்திக் கட்டுரையை 'புதினபலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

பழமைவாதத் தளைகளிலிருந்தும் பாரம்பரியமாக இருந்துவரும் கட்டுப்பாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்துப் பெண்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் கடந்த வருடம் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குத்தான் அவர்கள் நன்றி கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்குத் தனிநாட்டினை அமைத்துக்கொடுக்கும் போரில் விடுதலைப் புலிகள் தோற்றுவிட்டாலும், பெண் என்றால் இதுதான் செய்யவேண்டும் என்ற காலங்காலமாக இருந்துவரும் கட்டுப்பாடுகளைத் தாண்டி தமக்கான புதிய வாய்ப்புக்களையும் வழிகளையும் யாழ்ப்பாணத்துப் பெண்கள் தேடுவதற்குப் விடுதலைப் புலிகள் உதவியிருக்கிறார்கள்.

இது தவிர, தமக்குத் தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்ட துன்பங்களின் விளைவாகவும் பெண்கள் சமூக ரீதியான கட்டுப்பாடுகளைத் தாண்டி, தமக்கான புதிய வாய்ப்புக்களைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்து நிற்கும் ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்குவர். மோதல்களில் சிக்குண்டு கணவன் உடல் உறுப்பு இழக்க, நடைமுறையில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு மனைவியிடம் சென்றுசேரும் சம்பவங்களும் அதிகமுண்டு.

விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையிலான மோதல்கள் இடம்பெற்ற வேளையில் குடாநாட்டிலும் தொடர்புடைய ஏனைய பிரசேங்களிலும் 'பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்கவேண்டியிருந்தது' என சேவியர் கூறுகிறார்.

'தமது கணவன்மார் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். உதாரணமாக, போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்லமுடியாத நிலையில் இருந்தால், குடும்பத்திற்குத் தேவையான வெளி வேலைகளைச் செய்யவேண்டிய நிலைக்குப் பெண்ணே தள்ளப்படுகிறார்'

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்படும் ஆண்கள் போராட்டக் குழுக்களுடன் இணைந்துகொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற அல்லது அந்த அமைப்புக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் வீடுகளிலிருந்து ஆண்கள்; இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

இந்தக் காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைச் சமாளித்தார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் இவ்வாறு விபரிக்கிறார்கள்.

'இவர்களிடம் இரட்டைச் சுமை: குடும்பத்தினை நிர்வகிப்பதோடு தேவையான முடிவுகளைகளையும் எடுக்கவேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே பெரும்பாலான பெண்கள் காலம் காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள்.'

இவ்வாறாக பெண்கள் புதிய வாய்ப்புக்களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தவர்களின் நலவாழ்வு மற்றும் கல்வி ஆகிய விடயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்துச் சமூகத்தைப் பொறுத்தவரையில், இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே இதுநாள் வரைக்கும் கருதப்பட்டு வந்தது.

வடக்குக் கிழக்கில் பெரும்பகுதியினை விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காலப்பகுதியில், காலம் காலமாக இருந்துவந்த சாதீய முறைமை எவ்வாறு ஆட்டம் கண்டது என்பதையும் சேவியர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட அந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் சாதிய பிரிப்பில் கீழ் மட்டத்தை சேர்ந்தவர்களே.

விடுதலைப் போராட்டம் மக்களின் பேராதரவுடன் முனைப்புப் பெற்றிருந்த அந்தக் காலப்பகுதியில், உயர் சாதித் தமிழர்கள் எனக் கருதப்படுவோர் பலர், சாதி ரீதியான பிரிப்புகளைப் புறம்தள்ளிவிட்டு, குறைந்த சாதியினைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பாசத்துடன் 'தம்பி' என அழைத்தார்கள்.

சமூக ரீதியான கடப்பாடுகள் மற்றும் பெற்றோரின் அழுத்தம் ஆகியவற்றிலிருந்து தமிழ் இளைஞர்கள் தங்களை விடுவித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தங்களது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

ஏன், பெண்கள் கூட தமதமைப்புடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கேயுரிய வெட்கம் போன்ற குணாம்சங்களைக் கொண்ட கிராமப்புற இளம் பெண்களை குறித்ததொரு இலக்குடன் ஆயுதங்களைக் கையில் ஏந்தியவாறு, ஜீன்சுடனும் சேட்டுடனும் செயற்படும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டினார்கள்.

'சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளைப் புறம்தள்ளிவிட்டு பெண் விடுதலை என்ற இலச்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடாத்தப்படும் நாளை எதிர்பார்த்திருந்தார்கள். இந்த இளம் பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியது' என சேவியர் கூறுகிறார்.

'தனது கணவருடன் இருந்தாலும் பால் சமத்துவம் தொடர்பிலும் பெண் விடுதலை தொடர்பாகவும் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் எங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டார்கள்' என்கிறார் சேவியர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியனாக பாலசிங்கம் செயற்பட்ட அதேவேளையில் அவரது துணைவியாரான அவுஸ்ரேலியாவினைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்தார்.

சில வருடங்களின் முன்னர் அன்ரன் பாலசிங்கம் இதய நோயினால் மரணமடைந்திருந்தார். மருத்துவத் தாதியான அடேல் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

தனது தந்தையார் ஆற்றிய சிவில் உரிமை வழக்கறிஞர் என்ற பணியினைத் தொடர்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்படுவதற்கு இரண்டு வருடங்களின் முன்னர், 2007ஆம் ஆண்டு செறீன் சேவியர் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார்.

தமிழர்களது உரிமைகளுக்காகப் போராடும் செறின் சேவியரது அமைப்பு தமிழர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனையினை இலவசமாக வழங்கி வருகிறது.

சமூகத்தில் தமக்காக அதிக பங்கினை எடுப்பதற்கு குடாநாட்டுப் பெண்கள் படிப்படியாக முனைந்து வருவதாக இவர் கூறுகிறார். 'எவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பெண்களைப் போல யாழ்ப்பாணத்துப் பெண்களும் சுதந்திரமாக செயற்படும் நிலையினை அடைவதற்கு இன்னமும் நீண்ட காலம் எடுக்கும்' என செறின் சேவியர் குறிப்பிடுகிறார்.

மேற்குலகில் கல்வி பயின்றுவிட்டு குடாநாட்டில் தொழில் புரியும் தமிழ் பெண்கள், புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்துசெல்லும் தமிழ்ப் பெண்கள் மற்றும் போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் வந்துசெல்லும் பெருமளவிலான சிங்கள இனப் பெண்களைத் தவிர குடாநாட்டில் பெண்கள் எவரும் ஜீன்ஸ் அணிவதைக் காணமுடியவில்லை.

அதேநேரம் குடாநாட்டு வீதிகளில் குறைந்தளவிலான பெண்களே உந்துருளி ஓட்டிச்செல்வதை அவதானிக்க முடிகிறது.

நகரிலுள்ள பெண்களுக்கான விடுதியொன்றில் இளம்பெண்கள் கட்டைக் காற்சட்டையுடன் [shorts] இருக்கிறார்கள். அதுவும் விடுதி வளாகத்திற்குள் மாத்திரமே இவர்கள் காற்சட்டை அணிய முடியும்.

'குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்னர் பெண்கள் சேலைகளைக் கைவிட்டுவிட்டு பாவாடை [skirts] அணிய ஆரம்பித்தார்கள். இதற்கு சமூகத்தின் முதியவர்கள் மத்தியிலிருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது.

பெண் விடுதலை என்பது சிறிது சிறிதாக இடம்பெற்றுவந்தாலும் இதுபோன்ற சமூக ரீதியான கட்டுப்பாடுகளும் தளைகளும் பெண்களுக்குத் தொடர்ந்தும் இருக்கத்தான் செய்கிறது' எனத் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இந்த விடுதியின் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

நன்றி : புதினப்பலகை
'புதினப்பலகை'க்காக 'தி.வண்ணமதி'யால் மொழிபெயர்க்கப்பட்டது

இலங்கை இனப் படுகொலையை மறைக்கும் இந்திய பாலிவுட் திரை














இன்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy - IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது.

ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழா ஐஃபா விருது வழங்கு விழாவாகும். இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 110 நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஐஃபா விருது விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்ட விழாவாகும்.

2000வது ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும், 2001இல் தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டியிலும், 2002இல் மலேசியாவிலும், 2003இல் தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கிலும், 2004இல் சிங்கப்பூரிலும், 2005இல் ஆம்ஸ்டர்டாமிலும், 2006இல் துபாயிலும், 2007இல் இங்கிலாந்தின் யார்‌க்சயர் நகரிலும், 2008இல் பாங்காக்கிலும், 2009ஆம் ஆண்டு மக்காவிலும் ஐஃபா விருது விழா நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வந்த நாளில் இருந்தே இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், கொழும்புவில் இதை நடத்துவதற்கான பின்னணிக் குறித்தும் பல விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம், ஐஃபா விருது விழாவை நடத்த அயர்லாந்து அரசும், தென் கொரியாவும், ஜப்பானும், இங்கிலாந்தும் ஐஃபா அமைப்பை மிகவும் நெருக்கின. இதற்குக் காரணம் இந்த விழா நடைபெறும் நகரம், அந்த நாட்டு அரசிற்கு மிகப் பெரிய நிதிச் செலவு ஏதுமின்றி, ஐஃபா விழா நடப்பதாலேயே அந்த நகரை உலகின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இது அந்த நாட்டிற்கு சுற்றுலா வருகையை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவதாக, இந்த விழாவில் பங்கேற்கவும், பார்க்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிற்கு வருகின்றனர்.

சிங்கப்பூரில் ஐஃபா விழா நடக்கும்போது 30,000 சுற்றுலா பயணிகள் கூடுதலாக அந்நாட்டிற்கு வந்தனர். மூன்றாவதாக, இந்த விழாவின்போது ஏற்படும் வணிக ஒப்பந்தங்கள். பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நான்காவதாக, விழா நிக்ழ்ச்சி தொலைக்காட்சியின் மூலம் 50 முதல் 60 கோடி பேர் வரை கண்டுகளிப்பதால் அந்நாட்டி‌ன் சுற்றுலா மையங்களையும், இயற்கை எழிலையும் காட்டி, அதன் மூலம் திரைப்படப் படபிடிப்புகளுக்கு வாய்ப்பை மேம்படுத்தலாம்.

இதுவே இவ்விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று முன்னேறிய நாடுகள் கூட அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா அதற்காக ஐஃபாவிற்கு ரூ.50 கோடி அளிப்பதாகக் கூட உறுதியளித்திருந்து என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், சற்றும் எதிர்பாரா வண்ணம் இந்த விழாவை கொழும்புவில் நடத்த இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும், அதற்கு என்ன பின்னணி என்றும் கேள்வி எழுந்தது.

இந்தியப் பின்னணி!

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்க அரசு நடத்தி முடித்திட்ட இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து இன்று வரை சிறிலங்க அரசிற்கு உலகளாவிய அளவில் அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்கடி அதிகரித்து வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு தட்டிக்கழித்த காரணத்தினால், அந்நாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு அளித்துவந்த இறக்குமதி வரிச் சலுகையை நிறுத்துவதென முடிவெடுத்து அறிவித்தது.

அயர்லாந்து தலைநகரில் கடந்த ஜனவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் நடந்த உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம், தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்றும், வன்னி முகாமில் நடந்த மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை மெய்‌ப்பிக்கின்றது என்றும் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, அந்நாட்டிற்கு எதிரான தமிழினப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

ஐ.நா.வின் நிதிச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக உள்ளவரும், தனது வாழ்வில் காந்தியின் அகிம்சை கொள்கையை கடைபிடித்து வருவதற்காக விருது பெற்ற பிரான்சுவா ஹூடார்ட் தலைமையிலான நிரந்தரத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஊடகங்கள் பெரும் செய்தியாக்கியதன் காரணமாக, அதுவரை அசையாமல் இருந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன், போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்தார்.

தனது நாட்டு மக்களின் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய சிறிலங்காவை உலக நாடுகள் தனிமைப்படுத்தி வரும் நிலையில்தான், அந்த நாட்டின் ‘பெருமை’யை கூட்ட, இந்திய அரசின் உந்துதலால் ஐஃபா விருது விழா கொழும்புவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்க அரசிற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இந்திய அரசின் ‘முயற்சி’யே என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட் துணை போகிறதா?

சிறிலங்க அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போருக்கு எல்லா விதத்திலும் துணை போனது இந்திய அரசு என்பது உலகளாவிய உண்மையாகிவிட்ட நிலையில், அதனை மறைப்பதற்கு இந்த விழாவை நடத்த இந்திய அரசின் திட்டத்திற்கு பாலிவுட் துணை போகிறதே என்பதுதான் தமிழகத்தில் எழுந்துள்ள அதிர்ச்சியலையாகும்.

‘இலங்கை ஒரு அமைதியான, அழகிய தீவு’ என்றும், அருமையான சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்றும் கூறி, அந்நாட்டை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அங்கு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மறைக்க நடக்கும் முயற்சியே இந்த விழா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திய அரசின் துணைகொண்டு தமிழினப் படுகொலை செய்து முடித்த சிறிலங்க அரசிற்கு, அதனை மறைக்க உதவவே ஐஃபா விருது வழங்கு விழாவை அங்கு தள்ளியுள்ளது டெல்லி அரசு. இல்லையென்றால் லண்டன், சியோல், டோக்கியோ ஆகிய நகரங்கள் தொங்கிக்கொண்டு பின்னால் வர, உலக நாடுகளின் சினத்திற்கு ஆளாகி நிற்கும் இலங்கையை ஐஃபா எதற்குத் தேர்ந்தெடுக்கிறது?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இரண்டரை ஆண்டுகள் நடந்த அந்த இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாய விசாரணையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உலகின் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுவரும் சூழலில், இனப்படுகொலைக்கு காரணமான அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக தங்கிக்கொண்டு விழா அறிவிப்பை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை.

இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டது அமிதாப் பச்சனுக்கோ அல்லது இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கோ தெரியாதா? சிறிலங்க கடற்படையினரால் 400க்கும் அதிகமான தமிழ்நாட்டின் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மறைத்து அந்நாட்டோடு உறவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் இந்திய அரசின் மனிதாபிமற்ற நடவடிக்கைக்கு பாலிவுட் திரையுலகம் துணை போகலாமா?

தன்னை வரவேற்ற நடன மாதர்களின் புன்னகையை பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சன், “அவர்களின் புன்னகையில் சிறிலங்காவின் ஆளுமையும் தெரிகிறது” என்று பேசியதைக் கேட்டபோது, அந்தப் புன்னகையைக் காட்டி சிறிலங்க அரசு மறைக்க நினைக்கும் இனப்படுகொலைக்கு இவரும் துணை போகிறாரே என்றே வருந்தம் தோன்றுகிறது.

சினிமா உலகம் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கிறது என்று அமிதாப் பச்சன் பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு இணைப்பு தமிழ், இந்தி திரையுலகங்களுக்கு இடையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ்நாட்டி‌ல் பல நட்சத்திரங்களும், தொழல்நுட்ப நெறிஞர்களும் பாலிவுட்டில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அவர்கள் மனதில் தமிழினப் படுகொலை ஆறாத இரணமாக நிலைத்துள்ளது என்பதை பாலிவுட் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழினப் படுகொலையை கண்டித்துப் போராடியது தமிழ்த் திரைப்படவுலகம் என்பதை மறந்துவிட்டு பாலிவுட் கொழும்புவில் விழா நடத்துமானால் அது தமிழனையும், தமிழ்த் திரையுலகத்தை தனிமைப்படுத்துவதாக ஆகாதா?

உள்நாட்டுப் போரினால் அங்கு ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் தங்கள் குடும்ப உறவுகளையும், வாழ்ந்த இடங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக‌த் திரிகின்றனர் என்பதை அறிந்துதான் அந்த விழாவை அங்கு நடத்த ஐஃபா முடிவெடுத்ததா? அல்லது எதையுமே அறியாத ஒரு கனவுலகில் அமிதாப்பும் பாலிவுட்டும் மிதக்கின்றனவா? புரியவில்லை.

தங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் துயரத்தில்தான் உள்ளனர். சிறிலங்க கடற்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களின் மீனவர்களின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய இரணம் இன்னமும் ஆறவில்லை. அதற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏங்கித் தவிக்கிறது. இதனைப் புரியாத பாலிவுட், கொழும்புவில் விருது விழாவை நடத்தச் செல்லுமானால், அது இதுநாள் வரை போற்றப்படும் உறவிற்கு பாதமாகவே முடியும்.

நன்றி :வெப் துனியா

Wednesday, April 21, 2010

எச்சரிக்கைப் பட்டியலில் 81 வயதுத் தாய்! நள்ளிரவில் நடந்த மனிதாபிமானப் படுகொலை














உலகில் வேறெங்கும் இப்படி நடந்திருக்காது, வரலாற்றில் கூட படித்திருக்க மாட்டோம், அப்படிப்பட்ட ஒரு ஈவிரக்கமற்ற மனிதாபிமானப் படுகொலை இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், சென்னையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து 6 மாத கால (மருத்துவ) விசா பெற்று விமானத்தில் சென்னை வந்துள்ளார். அவரை விமானத்திலிருந்தே இறங்க விடாமல், அதிலேயே அமர வைத்து, “உங்களுக்கு தவறாக விசா வழங்கப்பட்டுள்ளது, நாங்கள் உங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது” என்று ‘மிகுந்த கரிசண’த்துடன் கூறி, அவரை அதே விமானத்தில் மீண்டும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள்!

இந்திய அரசிடமிருந்தோ அல்லது அதன் குடியேற்றத் துறை அதிகாரிகளிடமிருந்தோ மனிதாபிமானத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு நிச்சயமாகத் தமிழர்கள் முட்டாள்கல்ல. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த அமைத்தித் தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையில் அரசின் நிலையை விளக்கிவிட்டு, அந்தத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு ‘ரா’ முதல் ராடார் வரை இரகசியமாக அளித்து ‘இனப் படுகொலையை துரிதமாக நடத்தி முடி’ என்று ஊக்கப்படுத்திய அரசல்லவா இந்திய அரசு?

எனவே, 81 வயதான ஒரு மூதாட்டியை - அவர் 3 மணி நேரம் பயணம் செய்து களைப்புற்றிருந்த நிலையிலும் - அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அதே விமானத்தில் ஏற்றி திருப்பி அனுப்ப குடியேற்றத் துறை கூறிய காரணம் என்ன என்பதைப் படிக்கும்போதுதான் வாயால் சிரிக்க முடியவில்லை.

அந்தக் காரணத்தை ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக உண்மையை மட்டுமே செய்தியாக்கி வெளியிடும் பாரம்பரியமிக்க, தமிழக முதல்வர் கருணாநிதியினால் மிகவும் மதிக்கப்படும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

“கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி உரிய மருத்துவ விசாவுடன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதைக் கண்ட குடியேற்ற அதிகாரிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர்” என்று அச்செய்தியை கூறத் துவங்கியுள்ள அந்த ஆங்கில இதழ், “அதற்குக் காரணம்: அவருடைய (பார்வதியின்) பெயர் மத்திய அரசின் எச்சரிக்கை சுற்றறிக்கை பட்டியலில் இருந்துதான். இந்த பட்டியலில் உள்ள ஒருவருக்கு விசா வழங்கவேண்டுமெனில், விசா வழங்கும் அதிகாரி, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் அவர் அல்லது அவளுக்கு விசா வழங்க வேண்டும். பார்வதியின் பெயர் இந்தப் பட்டியலில் இருந்தும் அவருக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது” என்று குடியேற்றத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.


விசா அதிகாரிக்கு அந்தப் பட்டியலைப் பற்றி தெரியாதா?


இந்தப் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்றது எப்படி? அதையும் குடியேற்றத்துறை வட்டாரங்கள் அந்தப் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளன.

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும், பார்வதியும் 2003ஆம் ஆண்டுவரை திருச்சி இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் இலங்கைக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு (ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது) மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களை மத்திய அரசு சேர்த்துவிட்டது என்று அச்செய்தி கூறுகிறது.

நமது கேள்வி இதுதான்: யார் யாரெல்லாம் இந்தியா வரக்கூடாது என்கிற தடை பட்டியலில் பார்வதி அம்மாளின் பெயரும் இருக்கிறதென்றால், அந்தப் பட்டியலை ஒவ்வொரு நாட்டிலும் இயங்கிவரும் இந்திய அரசின் தூதரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமே? அந்தப் பட்டியலைக் கண்ட பிறகுதானே விசா வழங்கு அதிகாரி எந்த ஒரு நபருக்கும் விசா வழங்குவதா கூடாதா என்பதை முடிவு செய்யமுடியும்? அதுமட்டுமின்றி, விசா கோருபவரின் பெயர் பட்டியலில் இல்லாவிட்டாலும், அந்த நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அது குறித்து ஆலோசனை பெற்றுதானே விசா அளிப்பு அதிகாரி செயல்படுகிறார்? இதுதானே நடைமுறையாக இருந்துவருகிறது? பிறகு பட்டியில் இடம்பெற்றவருக்கு எப்படி விசா வழங்கப்பட்டது?

பட்டியலில் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் நமது காதில் பூ சுற்றும் காரணமே தவிர வேறில்லை. அவர் இங்கே வருவதை விரும்பாத ‘அரசியல்’தான் இதற்குக் காரணமே தவிர, பட்டியலும் இல்லை, புடலங்காயும் இல்லை.

எந்த ஒரு காரணத்தையும் கூறாமல் அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தபோது அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் இருந்துவிட்டாய் என்பது அல்லது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்கிற புருடா உட்பட ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாடு கடத்துவது இந்தியாவின் குடியேற்றத்துறைக்குப் புதியதல்ல.

முறையோடு உரிய விசா பெற்று வந்த பல ஈழத் தமிழர்களை இப்படி நாடுகடத்தியுள்ளது இந்திய குடியேற்றத்துறை. இப்போது நடந்துள்ளதன் பின்னணியில் அரசியல் உள்ளதோ என்பதைத்தான் சந்தேக்கிக்க வேண்டி உள்ளது.

காவல் துறைக்கு தெரிந்தது, முதல்வருக்கு தெரியாதா?

இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப் பேரவையில் இப்பிரச்சனையின் மீது கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய பல உறுப்பினர்கள் - காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் சுதர்சனம் தவிர- அனைவரும் பார்வதி அம்மாள் திரும்ப அனுப்பப்பட்டதைக் கண்டித்ததோடு மட்டுமின்றி, அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்து வரச் செய்து மருத்துவ சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.


இந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, “இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடப்பதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன், அந்த அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால் அந்தச் செய்தி முறையாக உரிய வகையில் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் சிகிச்சை பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பார்வதி அம்மையார் சார்பாக கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது என்றும், ஆனால் அது மாநில அரசுக்குத் தெரியாது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

முதல்வர் கூறியதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. ஏதோ மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியாமல், குடியேற்றத்துறை அறிந்திராத நிலையில் பார்வதி அம்மையார் மருத்துவ விசா பெற்றுக் கொண்டு வந்துவிடவில்லை, அவருக்கு மருத்துவ விசா வழங்க மத்திய அரசு சம்மதமளித்தப் பின்னரே விசா வழங்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஆனால், பார்வதி அம்மாளை அழைத்துச் செல்ல மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலர் வைகோவும், பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்றபோது, அவர்கள் (விமானம் வருவதற்கு முன்னரே அங்கு சென்ற நிலையில்) பெருமளவிற்கு குவிக்கப்பட்டிருந்த தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் கட்டுப்பாடு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்புப் படையின் கீழ் உள்ளது, அங்கு செல்வதற்கு நாங்கள் அனுமதிச் சீட்டு பெற்றுள்ளோம், எங்களைத் தடுத்து நிறுத்த நீங்கள் யார்? என்று அவர்கள் இருவரும் கேள்வி எழுப்ப பெரும் விவாதம் நடந்துள்ளது (இதைத்தான் ‘ஒரு தகராறு நடப்பதாக’ முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்). பார்வதி அம்மாள் சென்னை வர இருப்பது தமிழக காவல் துறைக்குத் தெரிகிறது, ஆனால் காவல் துறையின் பொறுப்பை தன்னக்கத்தே வைத்துள்ள தமிழக முதல்வர் அதுகுறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறி, அவருக்கே உரித்தான பாணியில் பழைய வரலாற்றை புரட்டிப்போட்டு அலசியுள்ளார். தமிழக முதல்வரைப் போலவே, குடியேற்றத் துறைக்கும் அவரது வருகை தெரியவில்லை. விமானத்தில் பார்வதி அம்மாளைப் பார்த்ததும் அவர்களுக்கும் ஆச்சரியம்! என்னே கதை விடல்?

81 வயதான பெண்மணி, பக்கவாதம் தாக்கி முடியாத நிலையில் சிகிச்சை பெற சென்னை வருகிறார். ஆனால் மனித உரிமை பிரகடனத்தையும், மானுட அணுகுமுறையையும் மருந்துக்கும் மதிக்காத மத்திய அரசும், எதுவானாலும் அதனை தனது ஆட்சிக்கு ஏற்படும் ஆபத்தாகவே பார்க்கும் மாநில முதல்வரும் இணைந்து அரங்கேற்றிய நாடகம்தான் இந்த நள்ளிரவு மனிதாபிமான படுகொலை.

மனிதாபிமானத்திற்கு எதிரான இந்திய அரசின் உண்மை முகம் ஒரு நாள் சர்வதேச அரங்கில் வெளிச்சமாகும். அன்றைக்கு அது துணை நின்ற இனப் படுகொலை, நடத்திவரும் பழங்குடியினப் படுகொலை, இப்படிப்பட்ட மனிதாபிமான படுகொலை ஆகிய அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அது இந்தியாவின் ஜனநாயக முகத்திரையை கிழிக்கும்.

நன்றி : வெப் துனியா

இலங்கை வரும்படி அழைப்பு – புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்














ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும்.  இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?

இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.

கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.

விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம்.

கமல்ஹாஸனோ  “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.

விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.

ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.

இந்த விழாவின் தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும் ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில் திரையிடப் போகிறார்க்களாம்.

இதற்காக மணிரத்னத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால், இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன் தவிக்கிறாராம் மணிரத்னம்.

”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.

சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!

பார்வதி அம்மாளின் வலியை புரிந்து கொள்ளாத கருணாநிதியும் மன்மோகனும்














86 வயதில் முதுகுத்தண்டு வலிக்கு இராமச்சந்திராவில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் , அனைத்திந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்ற 78 வயது இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கும் தெரியாதா முதுமையில் வரும் உடல் உபாதையின் வலியும், அந்நேரத்து மருத்துவத்தின் அவசியமும் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற ஒரே காரணத்துக்காக 80 வயது முதியவர் பார்வதியம்மாளை கொஞ்சமும் இரக்கமின்றி இந்த இருவரும் தலைமை ஏற்று இருக்கும் அரசுகளும் திருப்பியனுப்பியது எந்த விதத்தில் (அரசியல் லாபம் தவிர்த்து) நியாயம் என்று புரியவில்லை.

உங்களின் பார்வையில் பிரபாகரன் ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்றாலும் கூட, அவரை பெற்று எடுத்ததை தவிர பார்வதியம்மாள் என்ன தவறு செய்தார்? பிரபாகரன் பார்வதிய‌ம்மாளின் கருவில் இருந்தபோதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவைராகவா இருந்தார்? அல்லது இப்படி ஒரு இயக்கம் வரும் , அதற்கு தலைமை ஏற்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவே கருவுற்று பார்வதியம்மாள் பிரபாகரனை பெற்றெடுத்தாரா?

ராஜிவின் கொலை , தமிழீழ விடுதலைப் புலிகள் , பிரபாகரனின் தாயார், சோனியாவின் ஆசை, அரசியல் லாபம் என்பதெல்லாம் விடுங்கள். ஒரு 80 வயது முதியவர், இராணுவ முகாமில் அடைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர், கணவனை இழந்து வாடுபவர், உடலாலும் , உள்ளத்தாலும் சோர்ந்து போனவர் என்ற ஏதாவது காரணத்தை பார்த்தாவது அந்த அம்மையாருக்கு இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கலாமே, நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருந்திருந்தால்.

உங்கள் பார்வையில் தவறு செய்தவர் குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் மன்னிப்பு கிடையாது, உதவி கிடையாது என்றால், இன்றைய அரசியல்வாதிகளில் 99 % பேரின் குடும்ப உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்தப்பட்சம் மாநிலமாவது கடத்தப்பட வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கவேண்டும். ஒரு பிரதமரை கொன்ற தவறை காட்டிலும், பல இலட்சம் மக்களை தினம் தினம் ஏதாவது ஒரு விதத்தில் அணு அணுவாக கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் தவறு எந்த வகையில் சிறியது ?

86 வயதிலும் உங்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி இருக்கிறோமே கலைஞர் அவர்களே, உங்கள் மேல் பல விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், உங்களின் பல செய்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும், உங்களை நடு இரவில் கைது செய்த போது எங்கள் மனம் பதைத்த‌தே, அரசியல் ரீதியாக உங்களை கடுமையாக எதிர்த்த பலரும் அப்போது உங்கள் பக்கம் நின்றது நிச்சயம் உங்கள் நினைவில் இருக்கும். உங்களின் நினைவாற்றலை அறிந்தவர்கள் நாங்கள். நீங்கள் உடல்நலமின்றி பெரிய மருத்துவமனைகளில் படுத்த போதும் கூட நீங்கள் உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று தானே நினைத்தோம். அப்போதெல்லாம் சொல்லப்பட்ட வாக்கியம் என்ன தெரியுமா ? "என்ன இருந்தாலும் பாவம் அந்த‌ வயது தாண்டிய முதியவர்.. " .

அரசியலில், ஆட்சியில் தவறு செய்தவர் என்ற போதிலும், உங்களுக்காக ஏன் எங்கள் மனம் பதைத்தது? மனிதாபிமானம் தானே காரணம். முதியர் ஒருவர் இப்படி அலைக்கழிக்க படுகின்றாரே என்ற வருத்தம் தானே காரணம்? அந்த பதைபதைப்பு உங்களுக்கு இப்போது இருக்க வேண்டாமா?

சரி, நீங்கள் திருப்பியனுப்பவில்லை. நம்புகிறோம். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்டது.. இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுக்கு தகவல் தரவேண்டியதில்லை என்பதெல்லாம் சரி. ஆனாலும் உளவுத்துறையின் மூலம் ஒரு மாநில முதல்வருக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்க முடியுமா? ஒருவேளை நீங்கள் சொல்வது போல , இந்த விஷயமே உங்களுக்கு மறுநாள் பத்திரிகை பார்த்து தான் தெரிந்தது என்றால், உளவுத்துறையில் இருக்கும் ஓட்டையை அடைக்கும் வேலையை முதலில் பாருங்கள்.

தேர்தல் நேரத்தில் இதைவிட பெரிய பிரச்சனையை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்..

அவர் வருவதும் , திருப்பி அனுப்பபடுகிறார் என்பதும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நீங்கள் மௌனம் காத்திருக்க / அல்லது அமைச்சர் பதவிக்கு கொடுத்ததை போன்ற அழுத்தத்தை மத்திய அரசுக்கு தராமல் விட்டிருக்கவேண்டும்.

காரணம் 1. சோனியா , மத்திய அரசுடனான கூட்டு, தமிழக காங்கிரஸ் ஆதரவு

காரணம் 2. அந்த அம்மையார் வர ஏற்பாடுகள் செய்தது வைகோவும் , பழ நெடுமாறனும்

இந்த காரணங்களுக்காக மௌனம் சாதித்துவிட்டு பின்னர் சமாளித்து ஆகவேண்டுமே என்று , இரவு தான் தெரியும் , காலை தான் தெரியும் என்று அறிக்கை வாசிக்கின்றீர்கள் என்பது தெளிவாகவே புரிகிறது கலைஞரே.

இப்போதும் கெட்டுவிடவில்லை . அவர் கோரிக்கை வைத்தால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக சட்டசபையில் சொல்லியதும், டி ஆர் பாலு அவர்களை பாராளுமன்றத்தில் பேச வைத்தது மட்டும் போதாது. நீங்களும் ஒரு முதியவர் என்ற வகையில் அவரின் வலியை உணருங்கள். அவர் கோரிக்கை வைக்க வேண்டும் என்று நீங்கள் காத்திருக்கலாம், ஆனால் அவரின் பக்கவாதம் காத்திருக்காது. உங்களின் இரவு கைதின் போது தங்கள் கண்டனங்களை தெரிவித்தவர்கள் உங்களின் கோரிக்கைக்கு காத்திருந்தார்களா?

2003 ல் முதல்வராக இருந்த அம்மையார் செய்துவிட்டு போன ஒரு தவறை திருத்தும் வாய்ப்பு இது. மத்திய அரசுக்கு நீங்களே கோரிக்கை விடுங்கள். 2009 ல் போரை நிறுத்துங்கள் என்று விளையாட்டு பிள்ளையாக வைத்த கோரிக்கையாக அல்லாமல், தி மு க விற்கு இன்னுமொரு மத்திய அமைச்சர் பதவி தரும் வாய்ப்பிருந்தால் , அதற்கு எப்படி , எந்த விதத்தில் , எவ்வளவு அழுத்தமாக "கோரிக்கை" வைப்பீர்களோ அதுபோல வையுங்கள். அந்த அம்மையாரின் பெயரை மட்டுமாவது முன்னால் முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய "ப்லாக் லிஸ்ட்" ல் இருந்து எடுத்திட வையுங்கள். குறைந்த பட்சம் இந்த சிகிச்சைக்காக மட்டும் பார்வதியம்மாள் வந்து போக அனுமதி வாங்கி கொடுங்கள்.

உங்களின் 1 ரூ அரிசியை விட, வண்ண தொலைகாட்சியை விட, காப்பிட்டு திட்டத்தை விட, இந்த விஷயத்தில் நீங்கள் வாங்கி தரும் அனுமதி எங்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கும், பல காலம் உங்கள் பெயரை சொல்லும்.

அன்றைய இரவில் பார்வதியம்மாளுக்கு விமானத்தில் நடந்தது என்ன..?














பக்கவாதம், மறதி, உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வியாதிகளால் பார்வதி அம்மாளுக்கு மலேசியாவிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கே சென்னையில் உள்ள மருத்துவ வசதிகளை சுட்டிக்காட்டி செல்லும்படி வலியுறுத்தியுள்ளார்கள்.

அதனால்தான் மலேசியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சிலர், சிவாஜிலிங்கத்தின் உறவினர்களோடு பேசி, அவரைச் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார்களாம்.. பார்வதி அம்மாளைத் தாங்கிய விமானம் சென்னை வந்திறங்கிய உடனேயே அவரை விமானத்தில் இருந்து கீழே இறங்க விடாதபடி அதிகாரிகள் கெடுபிடி செய்ய..

அந்த அம்மாளின் உதவிக்காக உடன் வந்திருந்த விஜயலட்சுமி என்ற பெண், “எதற்காக அனுமதி மறுக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். “பார்வதி அம்மாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்” என்றார்களாம் விமான நிலைய அதிகாரிகள். அதோடு அதே விமானத்தில் பார்வதி அம்மாளை திருப்பியனுப்பும் முடிவை அவர்கள் சொல்ல..

பயணக் களைப்பில் இருந்த அந்த மூதாட்டி, “செத்த நேரம் ஓய்வு எடுக்கணுமே?” என்றாராம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் பார்வதி அம்மாளுக்கு வழங்கப்பட்ட விசாவின் காலக்கெடுவும் அன்றோடு முடிந்திருந்த நிலையில், அங்கே திரும்பிச் செல்வதும் சாத்தியமற்றதாக.. விமான நிலைய அதிகாரிகளிடம், “புலிகள் இயக்கத்தில் பார்வதி அம்மாள் உறுப்பினராக இல்லை என்பதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்கெனவே விசாரித்துவிட்டது. அதன் பிறகே அங்கிருந்து வெளியே செல்ல ஆறு மாத விசா கிடைத்தது. இதற்கிடையில் மலேசிய விசாவும் கிடைத்துவிட்டது. அதனால் பார்வதி அம்மாள் வேறு எந்த நாட்டுக்குமே போக முடியாது” என்று சொல்லி மறுபடியும் அனுமதிக்காகப் போராடியிருக்கிறார் விஜயலட்சுமி.

அதற்கும் அசைந்து கொடுக்காமல், பார்வதி அம்மாளை நள்ளிரவில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

பார்வதி அம்மாள் போன வேகத்தில் திரும்பி வந்ததைக் கண்ட மலேசிய அரசு அவசர கதியில் அவருக்கு ஒரு மாத கால விசாவை வழங்கியுள்ளது. அங்கு போய் இறங்கியதுமே அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

“ஐயா.. ஐயா..” என தன் கணவர் வேலுப்பிள்ளை நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தாராம் பார்வதி அம்மாள். “சென்னைக்குப் போகலையா..? என்னை எப்போ சென்னைக்கு அழைச்சுட்டுப் போகப் போறீங்க..?” என கேட்டிருக்கிறார்.

சென்னை போய் திரும்பி வந்ததே அவருக்கு முழுமையாகப் பதிவாகவில்லையாம். அதை மெதுவாக எடுத்துச் சொன்னதுமே, “எதுக்கு அனுப்புனாங்க.. அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. அவருக்கு என்ன பண்ணிட்டோம்..?” என கலங்கியிருக்கிறார்.

Tuesday, April 20, 2010

புரியாத புதிர் பிரபாகரன் பிறந்த கதை














1963ம் ஆண்டு துரு துரு என்று சுழன்றுகொண்டிருக்கும் பார்வை. ஆனால் எதையுமே ஊடுருவிப் பார்க்கும் அழகான பெரிய விழிகள் ஏகாந்தமாக அக்கோயில்களின் வீதிகளினை அளந்து கொண்டிருக்கும் சிறிய கால்கள்.

ஆனால் ஏனைய சிறுவர்களுக்கு இருக்கும் அதீதமான குறும்புகள் அற்று யாரைப்பார்த்தாலும் வெட்கப்பட்டு அல்லது சங்கோசப்பட்டு அமைதியாக ஒதுங்கிப் போகும் சுபாவம்.

இதுதான் மட்டக்களப்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கும் உறவினரான வேலுப்பிள்ளையின் கடைக்குட்டிச் சிறுவனான பிரபாகரன்.

பார்க்கப் பார்க்க காரோடும் வெள்ளைச்சாமிக்கு (சோமசுந்தரம் சிவபாதசுந்தரம்) என்னவோ செய்தது.

ஆனால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை!. ஏதோ ஒரு வித்தியாசம்?... தந்தை வழிச் சொத்தான வல்வை வைத்தீஸ்வரர் கோயில் உற்சவங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் சாமி வீதிவலம் வரும்போது அர்ச்சகருக்கு முன்பாக கொடியுடன் நடந்து வருபவர்தான் சிறுவன் பிரபாகரன்.

வெள்ளைச்சாமிக்கு ஏனோ புரியவில்லை சாதாரண சிறுவர்கள் காரில் செல்லும்போது தம்மையே சாரதியாக எண்ணிக் கொண்டு முண்டியடித்து முன் சீற்றிலேயே ஏற விரும்புவார்கள்.

ஆனால் சிறுவன் பிரபாகரனோ கார் ஓடும்போது ஏற்படும் அந்தப் பெற்றோல் எரியும் மணம் பிடிப்பதில்லை எனக் கூறி பின் சீற்றிலேயே அமர்ந்து கொள்வதும் வெளியிலே அமைதியாகப் பார்த்துக் கொண்டு வருவதும் வழமையான நிகழ்ச்சியே.

ஆனால் வெள்ளைச்சாமிக்கு ஏனோ ஆச்சரியம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெள்ளைச்சாமி சிறுவனுக்கு வேடிக்கையாகக் கூறுவது “டேய் உன் மூக்கை வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு வா.” அதேசமயம் தாய் தந்தையர்க்குக் கூறுவது “இவன் ஒரு வித்தியாசமான ஆள் என்னவென்று புரியவில்லையே”.

ஆம் அன்று அந்த ஒன்பது வயதுச் சிறுவனை வெள்ளைச்சாமிக்கு மட்டுமே புரியவில்லை. ஆனால் இன்று ஐம்பது வயது கட்நத அதே பிரபாகரனை முழு உலகத்திற்கும் புரியவில்லை.

ஏன் உலகின் உச்சமான வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் புரியவில்லை. ஏன் இவ்வாறு நடந்தது? யார் இந்தப் பிரபாகரன்?

இவர் வெறுமனே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரா? அல்லது தமிழீழ மக்களின் தேசியத் தலைவரா? பலரும் பலவாறாக எழுதுகின்றார்கள் பேசுகின்றார்கள்.

ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் இவரது பெயர் வெற்றி பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களான மாசேதுங், கோஷிமின், பிடல்கஸ்ரோ என்போரின் வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டது.

ஆனால் முன் கூறிய மூவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு.

இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் போராட்டத் தலைமையை ஏற்று நடத்திய தொடர் போராட்ட வீரர். அல்லது விடுதலை இயக்கத் தலைவர் என்னும் தனிச்சிறப்பாகும்.

உலகின் ஏனைய விடுதலைப் போராட்டங் களுடன் ஒப்பிடும்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது நம்பமுடியாத பல உண்மைகளைக் கண்டு நகர்ந்து கொண்டிருப்பதாகும்.

கடலினால் சூழப்பட்ட தரைவழித் தொடர்புகளற்ற ஒரு தீவில் சிறுபான்மை இனமொன்று தன்னைவிடப் பலமடங்கு வலிமை கொண்ட அரச இயந்திரம் அதிலும் ஏகாதிபத்திய பிராந்திய மற்றும் உலக வல்லரசு களில் துணை கொண்டு இனம் மொழி நிலம் என ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு நடவடிக் கையில் ஈடுபடும் பொழுது அதனை எதிர்த்து வெற்றி கொள்வதாகும்.

இவ்வாறான நிலைமை எவ்வாறு சிறுபான்மை ஈழத்தமிழ் இனத்திற்கு சாத்தியமானது. இதுதான் இன்று உலகளாவிய ரீதியில் கேட்கப்படும் ஒரே கேள்வியாகும்.

அதற்கான விடை தலைவர் பிரபாகரன் நினைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதே.

இந்நிலையில்தான் யார் இந்தப் பிரபாகரன் என்னும் கேள்வி பூதாகரமாக எழும்புகின்றது.

இதற்கான விடையை பேனா முனை வீரர்கள் எனப்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் என்போர் பேட்டிகள் மூலமும் தமது ஆய்வுக் கட்டுரைகள் மூலமும் எதிர்வு கூறல்கள் மூலமும் எழுத முற்படுகின்றார்கள். ஆனால் முழுமை காணமுடியவில்லை.

இதேபோலவே அவரோடு உடனிருந்த தளபதிகள் மற்றும் போராளிகள் என்போரும் அவரைப்பற்றி எழுத முற்படுகின் றார்கள். ஏனெனில் அவர் ஒரு சரித்திர புருஷ‌ர்.

அவர் வரலாறு சாகாவரம் பெற்றது. இன்று மட்டுமல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் அல்ல இரண்டாயிரம் வருடங்கள் கழிந்தாலும் அவர் வரலாறு ஆய்வுக்கு உட்ப டுத்தப்படும்.

இந்நிலையில்

“இயற்கை எனது நண்பன்”
“வாழ்க்கை எனது தத்துவாசிரியன்”
“வரலாறு எனது வழிகாட்டி”

என வரலாறாய் வாழும் அவரைப்பற்றிக் கூற முற்படும்போது முதலாவதாக அவர் பிறந்தபோதினில், 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார் இது ஒரு சாதாரண நிகழ்ச்சியே. ஆனால் இதன்பின்பேதான் பெரும் வரலாறு மறைந்து கிடந்தது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் - புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம் என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONஸ் OF CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.

இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.

“ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று குறித்து நிற்கின்றது.

இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்” என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப் பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா “ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.

இவ்வாறு போர்த்துக்கேயர் காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத் திலும் மேற்கூறிய ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.

இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் என
மாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. “சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.

இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது.  இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும்.  இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.

இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ்ஈழம் என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை. கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோஅவ்வாறே குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. இதுவே 55 வருடங்களுக்கு முன் பிரபாகரன் உருவாகிய வரலாறு.

இதனையே திருமூலர் தனது திருமந்திரத்தில்

“ஏயங்கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங்கருவும் உருவாம் எனப் பல
காயங்கலந்தது காணப்பதிந்தபின்
மாயங்கலந்த மனோலயமானதே”

என தனது திருமந்திரம் முதலாம் பாகத்தில் 459ம் பாடலில் இவ்வாறு கூறியிருப் பதும் எமது முன்னைய தமிழர்களின் நுண்ணறிவிற்குச் சான்றாகும்.

நன்றி : வல்வை

http://www.valvai.com

Monday, April 19, 2010

பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட்ட விஷயத்தில் கருணாநிதி சொல்வது உண்மையா?

தனிமனித விவகாரங்கள், அந்தரங்க விஷயங்கள் (சில விதிவிலக்குகள்) தவிர வேறு எதுவும், ஒரு மாநில முதல்வருக்குத் தெரியாமல் அந்த மாநிலத்தில் நடப்பதில்லை. உளவுத் துறை, காவல் துறை தவிர நிர்வாகத் துறையிலும் அவருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தகவல் வழங்கப்பட்டே வருகிறது. மாவட்ட அளவில் நடக்கும் அனைத்தையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கவனத்துக்குப் போய்விடுகின்றன. அவர்களும் முதல்வருக்கு தகவல் தெரிவித்தபடி உள்ளனர். போதாததற்கு பெரும்பாலான தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

விமான நிலையம் போன்ற முக்கியப் பகுதிகளின் நிகழ்வுகள் 24 மணி நேரமும் மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படுகிறது. 5 செயலாளர்கள், 2 தனிச் செயலாளர்கள், எப்போதும் நிழலாய் உதவியாளர், அவர்களுக்குக் கீழ் பணியாளர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் என பெரிய அலுவலகம் முதல்வருடையது. எனவே எந்தத் தகவலும் முதல்வர் அலுவலகத்துக்குத் தெரியாமல் போவதில்லை.

பார்வதி அம்மாள் விவகாரத்தில் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதோ, தமிழக அரசுக்குத் தெரியாமல் அனைத்தும் நடந்துவிட்டது என்பதோ நம்பத் தக்கதல்ல என்பதோடு, ஒரு மாநில அரசு நிர்வாகத்தையே கேலிக்குரியதாக்கியுள்ளது.

இந்த விஷயத்தில் முதல்வர் சொல்வதில் நிறைய முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன. பார்வதி அம்மாள் வந்த விமானம் மீனம்பாக்கத்துக்குள் வருவதற்கு முன்பே குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிந்துவிட்டது. உடனடியாக சென்னை புற நகர காவல் ஆணையர் ஜாங்கிட் மீனம்பாக்கத்துக்கு விரைந்து வந்துவிட்டார். பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுவிட்டனர். விமான நிலையத்துக்குள் உரிய அனுமதி அட்டையுடன் அந்த நேரத்தில் நுழைய முயன்ற வைகோ – நெடுமாறன் தடுக்கப்பட்டனர். பின்னர் பெரும் தகராறு, வைகோவின் வாதம் என பரபரப்பாக இருந்தது விமான நிலையம்.

முதல்வருக்கு இந்தத் தகவல்களை சொல்லாமல் கமிஷனர் ஜாங்கிட் மறைத்துவிட்டார் என்கிறாரா கருணாநிதி?

பார்வதியம்மாள் பயணித்த விமானம் வந்த நேரம் 10.30. திருப்பி அனுப்பப்பட்டபோது நேரம் 12. 45. இரண்டேகால் மணிநேரம் விமான நிலையத்தில் அவர் இருந்துள்ளார். இவரது தலைமையில் இயங்கும் காவல் துறைதான் மொத்தப் பிரச்சினையையும் கையாண்டுள்ளது. அதுவும் மாநகர கமிஷனரே நேரில் வந்துள்ளார். ஆனால் இவை எதுவுமே தனக்குத் தெரியாது என்று கருணாநிதி கூறுவது, அவரது ஆட்சியின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன?

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஜெயலலிதாதான் காரணமா?

இதை விட முட்டாள்தனமான ஒரு காரணத்தை வேறு யாரும் கற்பனை செய்து கூட சொல்ல முடியாது. ஜெயலலிதா புலிகளுக்கு எதிரானவர். அவர் 2003ல் இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என்பது உண்மையாக இருந்தாலும், அதன் பிறகு முதல்வராகி இன்னும் தொடர்வது கருணாநிதிதானே!

இந்த ஏழு வருடங்களாக இப்படியொரு எச்சரிக்கைப் பட்டியல் இருப்பதே தனக்குத் தெரியாது என்கிறாரா கருணாநிதி?

பிரபாகரன்தான் புலியே தவிர, அவரைப் பெற்ற தாயும் தந்தையும் புலிகள் அமைப்புடன் எந்தத் தொடர்பிலும் இல்லையே. எந்த அடிப்படையில் ‘அவர்களை இந்தியாவுக்குள் மீண்டும் அனுமதிக்கக் கூடாது’ என்று ஜெயலலிதா கடிதம் எழுதினார்? எதற்காக அந்த அர்த்தமற்ற கடிதத்தை இதுவரை காப்பாற்றி வந்தார் கருணாநிதி? இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு முறை கூட, இன்னுமொரு கடிதம் எழுதி, ஜெயலலிதாவின் கடிதத்தைச் செயலிழக்க வைக்க வேண்டும் என்றே தோன்றவில்லையா இவருக்கு?

மத்தியில் ஆட்சியே இவருடையதுதானே… தனது மகன் மகளுக்கு பதவி பெற டெல்லியில் முகாமிட்டு பெரும் போராட்டமே நடத்தியவருக்கு இதெல்லாம் நினைவிலில்லாமல் போனதில்ஆச்சரியமில்லை.

இவர்கள் சண்டி மாடுகள் மாதிரி. எப்போதும் ஏதாவது ஒரு சாக்கு வேண்டும், தங்கள் கையாலாகாத்தனம், சுயநலத்தை மறைக்க. அடுத்தவரைக் குறை சொல்லி, அடுத்தவரோடு ஒப்பிட்டு, அடுத்தவர் மீது பொறாமைப்பட்டே தமிழர் வாழ்வை நாசமாக்கிய கும்பல்தான் கருணாநிதி – ஜெயலலிதா மற்றும் அவர்களது அடிவருடிகள்.

-வினோ

நன்றி : என்வழி

கேணல் சங்கர்














வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்
(வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
18.9.1949-26.9.2001)

யாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியின் கடற்கரைப் பிரதேசமான வல்வெட்டித்துறை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பல தளபதிகளையும் தலைவர்களையும் தந்துதவிய ஒரு ஊராகும்.

அங்கு வாழ்ந்த வைத்தியலிங்கம் தம்பதிகளுக்கு ஆறு ஆண் பிள்ளைகள். இவர்களில் இரண்டாவது மகனாக 1949ல் அவதரித்தார் சொர்ணலிங்கம். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் ஹாட்லிக் கல்லூரியில் 1959 முதல் 1969 வரையிலும் பயின்றார்.

பள்ளி நாட்களில் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய சொர்ணலிங்கம் மிகவும் துடிப்பு மிகுந்த மாணவராவார். தாமோதரம் பிள்ளை இல்லத்தின் மூலம் ஹாட்லியில் பல விளையாட்டுக்களிலும் பங்கு பற்றியவர்.

பின்னர் சென்னையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் விமான பொறியியல் பயின்ற அவர் அதில் சிறப்பு சித்தி பெற்று கனடாவின் `ஏர் கனடா`வில் வேலைக்குச் சேர்ந்தார். பணி நிமித்தம் கனடாவின் மொன்றியல் நகருக்குச் சென்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வசித்தார்.

1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர் தாயகம் திரும்பி தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார்.

விடுதலைப் புலிகளுடனான அவரின் தொடர்பு உண்மையில் 1971ம் ஆண்டே தொடங்கி விட்டிருந்தது. சென்னையில் தங்கி படித்த காலத்திலேயே சாதுவான தொடர்புகளை ஏற்படுத்திய அவர் கனடா சென்றதும் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கொள்வனவு சம்பந்தமான அலுவலகங்களை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

1985ம் ஆண்டு சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் மூலமாக புளொட் இயக்கத்திடமிருந்து பொட்டு அம்மானை மீட்டு தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.

பின்னர் தலைவருடன் சேர்ந்து இயக்கத்துக்கு சொந்தமாக கப்பல் ஒன்றையும் ரோலர் ஒன்றையும் வாங்கினார். ரோலரில் புலிகள் இயக்க வரலாற்றில் முதல் முறையாக ரேடார் ஒன்றையும் பொருத்தினார்.

தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி `கடற்புறா` என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர்.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர்.

இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவை அமைத்ததும் சங்கர் அவர்களே. அதே போன்று 2001ல் நடைபெற்ற கட்டுநாயக்கா விமானநிலையம் மீதான தாக்குதல் திட்டத்தை உருவாக்கி அதை செம்மையாக வழி நடத்தியவரும் அவரே.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது. கேணல் சங்கரின் மூன்று சகோதரர்களும் தங்களை விடுதலைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்துள்ளனர்.

1987இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தார்த்(வைத்தியலிங்கம் வசீகரன்), லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன்(வைத்தியலிங்கம் மனோகரன்) இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக `சயனைட்` அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இவரின் இளைய சகோதரன் மன்னாரில் இராணுவத்துடன் இடம்பெற்ற ஒரு மோதலில் காணாமல் போனார். அதன் பின்னர் அவர் பற்றி எந்த செய்தியும் இல்லை.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் ஒரு சகோதரர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்.  ஒரே ஒரு மருத்துவ சகோதரன் மற்றும் தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசித்து வருகிறார்.

இவ்வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

-சாணக்கியன்