Showing posts with label மாவீரர்கள். Show all posts
Showing posts with label மாவீரர்கள். Show all posts

Thursday, July 15, 2010

லெப்.சீலன்















லெப்.சீலன்
 (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி,
திருகோணமலை,
வீரப்பிறப்பு 11-12-1960
வீரச்சாவு 15-07-1983)

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.

சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.

தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.

அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.

1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.

1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.

1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.

1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந்த் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.

திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந்த் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.

லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை போட்டுச் செல்கின்றது.

இவ்விரு வேங்கைகளின் 27 வது ஆண்டின் நினைவின் இன்றைய தினத்திலே லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் இருவருக்கும் எமது அகவணக்கத்தை செலுத்தி அவர்கள் விட்டுச் சென்ற வழியிலே ஒன்றிணைந்த தமிழினத்தின் பலமாக எமது விடியலின் கதவினைத் திறக்க அயராது பாடுபடுவோம்..

விடுதலையடைவோம்!!

மேலும் மாவீரர் வரலாறுகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்..

Thursday, May 20, 2010

பிரிகேடியர் சொர்ணம்













(சூசைப்பிள்ளை ஜோசப் அன்ரனிதாஸ்,
திருகோணமலை,
08.04.1964 - 15.05.2009)

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த‌ ஜோசப் தம்பதிகளின் இரண்டாவது மகவாக 1964ம் ஆண்டு பிறந்தார் அன்ரனிதாஸ். ஆனால் அன்ரனிதாஸின் மூதாதையர்கள் யாழ் மாவட்டம் மானிப்பாயிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.

பிறப்பால் கிறித்தவராக இருந்தபோதும் சிறு வயது அன்ரனிதாஸுக்கு முற்போக்கு சிந்தனைகள் அதிகம். ஜாதியும் மதமும் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்காக பயன்படுகிறதே என்று வருத்தப்படுவதுண்டாம் அவர்.

திருகோணமலையில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவது கண்டு கொதித்துப் போயிருந்தார் இளைஞனாகவிருந்த அவர். புலிகள் இயக்கத்தில் சேர‌ விரும்பினார் ஆனாலும் குடும்ப நிலமை தடுத்தது.தகுந்த சந்தர்ப்பம் ஒன்றுக்காக காத்திருந்த அவருக்கு 1983ல் இடம்பெற்ற இனக்கலவரம் நல்ல சாக்காக அமைந்தது. அவ்வளவுதான் குடும்ப பந்தங்களை அறுத்தெரிந்து புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று













பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார்.

தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற‌வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 11, 2010

லெப். கேணல் பொன்னம்மான்













(யோகரத்தினம் குகன்
கலட்டி, யாழ்ப்பாணம்
23-12-1956 14-02-1987)

அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா.... என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 6, 2010

துயிலும் இல்லங்களை அழிப்பது தமிழ் சமூகத்தை அந்நியப்படுத்துவதற்கே வழி கோலும் : த கார்டியன்












தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை `புல்டோசர்` கொண்டு அழிப்பதும், போர் குறித்த நினைவுகளை மறக்குமாறு மக்களை வற்புறுத்துவதும் தமிழ்ச் சமூகத்தை மேலும் அந்நியப்படுத்துவதற்கே வழிகோலும் என்பதுடன் இனநல்லிணக்கத்திற்கும் குந்தகத்தை ஏற்படுத்தும் என பிரித்தானியாவின் முன்னணி பத்திரிகையான `த கார்டியன்(The Guardian) தெரிவித்துள்ளது.

த கார்டியன் பத்திரிகையின் இணையத் தளத்தில் ஆய்வாளரான மாலதி டி அல்விஸ்(Malathi de Alwis) என்பவர் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் முக்கியமான விடயங்களாக அபிவிருத்தியும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும்தான் இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறுவதைக் கேட்கும் போது புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் எழுகின்றது. ஆயினும், அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தினால் அபிவிருத்தியும், நல்லிணக்கமும் அந்த மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது.மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 19, 2010

கேணல் சங்கர்














வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்
(வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
18.9.1949-26.9.2001)

யாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியின் கடற்கரைப் பிரதேசமான வல்வெட்டித்துறை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பல தளபதிகளையும் தலைவர்களையும் தந்துதவிய ஒரு ஊராகும்.

அங்கு வாழ்ந்த வைத்தியலிங்கம் தம்பதிகளுக்கு ஆறு ஆண் பிள்ளைகள். இவர்களில் இரண்டாவது மகனாக 1949ல் அவதரித்தார் சொர்ணலிங்கம். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் ஹாட்லிக் கல்லூரியில் 1959 முதல் 1969 வரையிலும் பயின்றார்.

பள்ளி நாட்களில் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய சொர்ணலிங்கம் மிகவும் துடிப்பு மிகுந்த மாணவராவார். தாமோதரம் பிள்ளை இல்லத்தின் மூலம் ஹாட்லியில் பல விளையாட்டுக்களிலும் பங்கு பற்றியவர்.

பின்னர் சென்னையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் விமான பொறியியல் பயின்ற அவர் அதில் சிறப்பு சித்தி பெற்று கனடாவின் `ஏர் கனடா`வில் வேலைக்குச் சேர்ந்தார். பணி நிமித்தம் கனடாவின் மொன்றியல் நகருக்குச் சென்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வசித்தார்.

1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர் தாயகம் திரும்பி தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார்.

விடுதலைப் புலிகளுடனான அவரின் தொடர்பு உண்மையில் 1971ம் ஆண்டே தொடங்கி விட்டிருந்தது. சென்னையில் தங்கி படித்த காலத்திலேயே சாதுவான தொடர்புகளை ஏற்படுத்திய அவர் கனடா சென்றதும் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கொள்வனவு சம்பந்தமான அலுவலகங்களை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

1985ம் ஆண்டு சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் மூலமாக புளொட் இயக்கத்திடமிருந்து பொட்டு அம்மானை மீட்டு தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.

பின்னர் தலைவருடன் சேர்ந்து இயக்கத்துக்கு சொந்தமாக கப்பல் ஒன்றையும் ரோலர் ஒன்றையும் வாங்கினார். ரோலரில் புலிகள் இயக்க வரலாற்றில் முதல் முறையாக ரேடார் ஒன்றையும் பொருத்தினார்.

தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி `கடற்புறா` என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர்.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர்.

இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவை அமைத்ததும் சங்கர் அவர்களே. அதே போன்று 2001ல் நடைபெற்ற கட்டுநாயக்கா விமானநிலையம் மீதான தாக்குதல் திட்டத்தை உருவாக்கி அதை செம்மையாக வழி நடத்தியவரும் அவரே.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது. கேணல் சங்கரின் மூன்று சகோதரர்களும் தங்களை விடுதலைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்துள்ளனர்.

1987இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தார்த்(வைத்தியலிங்கம் வசீகரன்), லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன்(வைத்தியலிங்கம் மனோகரன்) இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக `சயனைட்` அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இவரின் இளைய சகோதரன் மன்னாரில் இராணுவத்துடன் இடம்பெற்ற ஒரு மோதலில் காணாமல் போனார். அதன் பின்னர் அவர் பற்றி எந்த செய்தியும் இல்லை.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் ஒரு சகோதரர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்.  ஒரே ஒரு மருத்துவ சகோதரன் மற்றும் தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசித்து வருகிறார்.

இவ்வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

-சாணக்கியன்