Wednesday, July 14, 2010

சூடான் போன்று இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை நடக்குமா? - ஆய்வாளர்கள் கேள்வி















சர்வதேச நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக நீதி வழங்காமல் ஒரு நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். பொஸ்னியாவின் Srebrenica இனப்படுகொலையில் 15வது வருட நினைவை முன்னிட்டு அவர் பொஸ்னிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

அதேவேளை, சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலையை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்;டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்தமை, அதன் மூலம் அப்பகுதி மக்களை உளவியல் ரீதியாக அச்சத்தில் ஆழ்த்தியமை மற்றும் உரிமைகளுக்காக போராடியோர் மீது இராணுவ அடக்குமுறைகளைக் பிரயோகித்தமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடான சூடானின் டார்பூர் பிரதேசத்தில் பழங்குடியின மலைவாழ் மக்களின் மீதே அந் நாட்டரசு இந்த இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது.

பொது மக்கள் படுகொலை, பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், வீடுகளுக்குத் தீ வைத்தல், உணவுப் பொருட்களை கொள்ளையிடுவதன் மூலம் அம் மக்களை பட்டினியால் சாகடித்தல் போன்ற குற்றச் செயல்களில் சூடான் அரசுக்கு ஆதரவான படையினர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே, சூடான் அரசாங்கமும், படைத்தரப்பினரும் குறித்த பயங்கரவாதப் படையினருக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு ஜனாதிபதி ஒமர் அல் பசீர் மீது நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, இந்த இனப்படுகொலை வழக்குக் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் மனிதாபிமானத்துக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டார் என்று குற்றம்வாட்டி சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீரை கைது செய்ய கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து ஜனாதிபதி ஒமர் அல் பசீரின் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி நான்கு மாதங்களுக்கான முன்பிணை மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந் நிலையில், இவ் வழக்கினை கடந்த 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த மனுவினை நிராகரித்ததுடன், ஜனாதிபதி ஒமர் அல் பசீரைக்; கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப் போரில் சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இப் போரில் சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தன. அத்துடன், இப் போரின் இறுதி நாட்களில் சர்வதேச அனுசரணையுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன் மற்றும் பலித்தேவன் போன்றோர் சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரியின் கட்டளையின் பேரில் சுட்டுக் கொன்றதாக களத்திலிருந்த படையதிகாரி ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.

இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதே இலங்கையில் நிரந்திர அமைதி ஏற்பட வழிவகுக்கும் என்பதை அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர் தெரிவித்த கருத்து வலியுறுத்தி இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...

No comments:

Post a Comment