Saturday, July 10, 2010

கப்பலில் திரிஷா காணாமல் போனது எப்படி? சென்னையில் தாயார் பரபரப்பு பேட்டி















வெளிநாட்டு கப்பலில் படப்பிடிப்பு நடந்தபோது, திரிஷா திடீரென்று காணாமல் போனார். பாதுகாப்பு அதிகாரிகள் 2 மணி நேரம் தேடி, அவரை மீட்டனர்.
 
கமல்ஹாசன்-திரிஷா ஜோடியாக நடிக்கும் மன்மதன் அம்பு படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது இத்தாலியில் நடைபெறுகிறது. கமல்ஹாசன்-திரிஷா நடித்த காட்சிகள், நடுக்கடலில் பிரமாண்டமான ஒரு கப்பலில் படமாக்கப்பட்டு வருகின்றன. டைட்டானிக் கப்பல் போல் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் ஆடம்பர கப்பல் அது. உல்லாசப்பயணமாக பல கோடீஸ்வரர்கள் அந்த கப்பலில் பயணம் செய்து வருகிறார்கள்.
 
18 அடுக்குகள் கொண்ட அந்த கப்பலில், ஒரு அடுக்கில் இருந்து இன்னொரு அடுக்குக்கு செல்ல லிப்ட் வசதிகள் உள்ளன. கூட்டத்தில் யாரும் காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, பட குழுவினரிடம் வரைபடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கப்பலின் ஒரு தளத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், அடுத்த தளத்துக்கு காட்சிகள் மாற்றப்பட்டன. படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அடுத்த தளத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தபோது, திரிஷா திடீரென்று காணாமல் போனார்.
 
திரிஷாவுடன் அவருடைய தாயார் உமாவும் சென்று இருந்தார். மகளை காணாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர்-நடிகைகளின் பாதுகாப்புக்காக அழைத்து சென்றிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாலாபுறமும் திரிஷாவை தேட ஆரம்பித்தார்கள். கப்பலில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு திரிஷாவை தேடி ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். 2 மணி நேர தேடுதலுக்குப்பின், திரிஷா ஒரு ஷாப்பிங் சென்டரில் இருந்து மீட்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட பிறகே தாயார் உமா சமாதானம் அடைந்தார்.
 
சென்னை திரும்பிய அவர், இதுபற்றி நிருபர்களிடம் கூறியதாவது, டைட்டானிக் படத்தில் வருவது போல், மிக பிரமாண்டமான கப்பல் அது. ஒரு முனையில் இன்னொரு முனைக்கு செல்வதற்கு பல கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். கப்பல் முழுவதும் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பின்போது, லொகேஷன் மாற்றப்பட்டபோது கூட்டத்தில் திரிஷாவும், நானும் பிரிந்து விட்டோம்.
 
கப்பலில் செல்போன் வேலை செய்யாததால், திரிஷா எங்கே போனார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பயந்து போய்விட்டேன். பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பதற்றம் அடைந்து விட்டார்கள். திரிஷாவை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அழைத்து வந்த பிறகே எனக்கு போன உயிர் திரும்பி வந்தது. இவ்வாறு உமா கூறினார்.

மேலும் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்...

No comments:

Post a Comment