Tuesday, July 13, 2010

இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் அசின்














நடிகர் நடிகைகள் இலங்கை சென்றால் உங்களுக்கு என்ன? அங்கு போய் அவர்கள் நல்லதுதானே செய்கிறார்கள்? என்றெல்லாம் சிலர் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் வேலையை ஓபராய்கள், சல்மான்களைப் போலவே, அசினும் வைக்கவில்லை.

ரெடி என்ற இந்திப் படத்தில் நடிக்கத்தான் இவர் இலங்கை போனார். என் வேலை நடிப்பது. ‘இடத்தை முடிவு செய்வது தயாரிப்பாளர்-இயக்குநர். நான் என்ன செய்யட்டும்’ என்று அப்பாவியாய் கொழும்பு பத்திரிகையாளர்களிடம் கேட்டார்.

அடுத்த நாளே, “இலங்கை அழகான, அருமையான நாடு. இங்கிருந்து போகவே மனசில்லை. சென்னைக்குப் போனால் என்ன செய்வார்களோ என்று பயமாக உள்ளது. ஆனால் காவல் காதல் படத்துக்காக போக வேண்டியுள்ளதே (அது வரும்போது பாத்துக்கலாம்மா!)” என்று பசப்பினார்.

அதற்கும் அடுத்த நாள் படப்பிடிப்பைத் தவிர வேறு அத்தனை வேலைகளையும் செய்ய ஆரம்பித்தார். ஏற்கெனவே ராஜபக்சே குடும்பத்தின் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்று, ராஜ விருந்தாளியாக இருந்து வரும் அவர், அதிபர் மனைவி ஷிராந்தி மற்றும் சில முக்கிய சிங்கள பெண்மணிகள் சகிதமாக வவுனியா, யாழ்ப்பாணம் என நகர்வலம் கிளம்பினார்.

இந்த நகர்வலம் எதற்கு?

“இலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்சே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை.. ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது சினிமா நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டால் கதிமோட்சம் பெற்று விடுவோம்’ என்ற ஆவலாதியுடன் அலைகிறார்கள்,” என்ற பேருண்மையை உலகுக்குச் சொல்ல.

மேலே நாம் எழுதியுள்ள பத்தியில் உள்ள வார்த்தைகளை அப்படியே அசின் சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்தப் பொருள்படும்படியாகவே தனது பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

அவருடன் பேசும் வாய்ப்பு இன்று கிடைத்தது, சக பத்திரிகையாளர் உதவியுடன்.

அட, அப்படி என்னதான் சொல்கிறார்?

“முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் தமிழர் பகுதிக்கு வரும் முதல் வெளிநாட்டுப் பெண் நான்தான் தெரியுமா (?!). இங்கு வருவதற்கு முன் நான் கூட யோசித்தேன்.. போகலாமா வேண்டாமா என்று. வந்த பிறகுதான் அப்படி யோசித்ததே தவறு என்று தெரிந்து கொண்டேன். இங்கு அனைவரும் அத்தனை அன்பாக பழகுகிறார்கள். இங்கேயே இருந்து கொள்ளலாம் போலத்தான் உள்ளது.

நிறைய தமிழர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். தொட்டுத் தொட்டுப் பேசினார்கள் (தமிழர்களை எங்கே பார்த்தார்… அலரி மாளிகையிலா…?).

அவர்களுக்கு என்னால் முடிந்த எதையாவது செய்வேன் (போர்க்குற்றவாளி ராஜபக்சே அரசுக்கு நற்சாட்சிப் பத்திரம் தருவதுதானே?)

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மருத்துமனைக்குச் சென்றேன். அங்கு கண் மருத்துவமனைப் பிரிவை மேம்படுத்தும் பணிக்கு உதவப் போகிறேன். எனக்கு தெரிந்து தமிழர்கள் நன்றாகப் பராமரிக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் நான் படப்பிடிப்புக்குத்தான் வந்தேன். ஆனால் இப்போது இலங்கை அரசு தமிழர்களுக்குச் செய்யும் நல்ல பணிகளில் நானும் ஈடுபட விரும்புகிறேன். முதல் கட்டமாக கண்சிகிச்சை முகாம்களில் பங்கேற்கிறேன். வடக்கு மாகாணத்தில் இதுபோன்ற முகாம்களை நிறைய நடத்த இருக்கிறோம். கிழக்கு மாகாணத்துக்கும் செல்லப் போகிறேன்.

இதில் தவறேதும் இல்லை. இதற்காக என் மீது யாரும் தடை விதிக்க முடியாது!”

-இப்படி பேசிக் கொண்டே போனார் அசின்.

‘நான் நடிக்கத்தான் போகிறேன். இதில் அரசியல் கலக்காதீர்கள்’ என்று சில தினங்களுக்கு முன் பேசிய அசின், இப்போது பேசுவது என்ன? பேச வைப்பது எது அல்லது யார்? என்று புரிந்திருக்கும்.

இலங்கை அரசின் நோக்கம், முடிந்தவரை தன்னை நியாயப்படுத்திக் கொள்வது. அதற்கு கலைத்துறைச் சார்ந்தவர்கள் பெரிய அளவில் உதவுவார்கள் என நம்புகிறது. சல்மான்களும், ஓபராய்களும், சூர்யாக்களும், அசின்களும் இதற்கென்றே பிறந்த அவதாரங்கள்தானே…

தமிழருக்கு எதிரான தங்களது பொய்ப் பிரச்சாரத்துக்கு உதவிய சல்மானுக்கும் விவேக் ஓபராய்க்கும் வடக்கு புணரமைப்பு பணி காண்ட்ராக்டுகள், விளம்பர தூதர் பதவிகள்… அடுத்து அசினுக்கும் இதைவிட பெரிய பதவிகள், பொறுப்புகள் தரப்படக்கூடும். பின்ன.. நியாயம்தானே… எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கிறார்!

குறிப்பு: இப்போது கடைசியாக கிடைத்துள்ள தகவல்… இங்குள்ள நடிகர்கள், நடிகைகள் சிலரையும் தனது திருப்பணிக்கு துணை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அசின். முன்னணி நடிகர்கள் இருவர் அதற்கு உத்தரவாதமும் அளித்துள்ளனர்.

நன்றி : என்வழி

மேலதிக சினிமா செய்திகளுக்கு...

No comments:

Post a Comment