Sunday, July 11, 2010
விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு முயலவேண்டாம்; ஒரு வேண்டுகோள்
முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர்க்களத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டனர்.
அவர்களில் சிலர் போரின்போது எதிர்பாராமல் பிடிபட்டனர்.
வேறு சிலர் சரணடைந்தனர்.
எதற்காக ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தனர்-அவர்கள் ஏன் சண்டையிட்டுச் சாகவில்லை- குப்பி கடித்து மாளவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
இறுதிநேரத்தில் போராளிகளைச் சரணடையுமாறு கட்டளையிட்டது தேசியத் தலைமையே.
தேசியத் தலைமையும் மூத்த தளபதிகளும் முன்நின்று சரணடையுமாறு போராளிகளை அனுப்பி வைத்ததற்கு- சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளே சாட்சி.
ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைக் கொடுத்தாலும் போர்க்களத்தில் திருப்பத்தை நிகழ்த்த முடியாது என்ற யதார்த்தம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணரப்பட்டிருந்தது.
சண்டையிட்டு மாய்வதாலோ- குப்பி கடித்து சாவதாலோ ஆகப் போவது ஒன்றுமில்லை. எல்லாமே கையை மீறிச் சென்று விட்ட நிலை அது.
போராளிகள் சரணடைந்து உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று நோக்கத்தில் தேசியத் தலைமை எடுத்த முடிவு அது.
ஆயிரக்கணக்கான போராளிகளின் மரணங்கள் நிகழ்ந்தால்- அது அவர்களின் குடும்பங்களையும் நடுத்தெருவுக்குக் கொண்டு வரும் என்பதைத் தேசியத் தலைமை உணர்ந்திருந்தது.
எனவே போராளிகளை சரணடையுமாறு அறிவுறுத்தியது தேசியத் தலைமை.
அந்த முடிவுக்கேற்ப சரணடைந்தவர்களே அதிகம்.
சரணடைந்த போராளிகள் இன்று அடையாளம் தெரியாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் எங்கே- என்னவாயினர் என்று கூடத் தெரியாது.
சிங்களப் படைகள் காவலில் உள்ள போராளிகளைச் சித்திரவதை செய்து- ஆயுதங்களை தோண்டியெடுப்பது தொடக்கம் இரகசியங்களை கறப்பது வரை எல்லாவற்றையும் செய்கின்றனர் என்பது வெளிப்படை.
தடுப்புக்காவலில் உள்ள போராளிகள்- தமது விடுதலையைத் துரிதப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், சித்திரவதைகளைத் தாங்க முடியாமலும் இரகசியங்களை உளறுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.
இப்படியான இரகசியங்கள் சிங்களப் படைகளுக்கு கசிந்து விடக் கூடாது என்பதற்காகவே புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட போது கழுத்தில் சயனைட் கட்டும் மரபை உருவாக்கினார் தேசியத் தலைவர்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் அந்த மரபுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆயிரக்கணக்கில் குப்பி கடித்துச் சாவதால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தே அந்த முடிவை எடுத்தார்.
அதேவேளை தடுப்புக்காவலில் உள்ளவர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்பது போன்ற பிரசாரங்களும் முன்னெக்கப்படுகின்றன.
இந்தப் பிரசாரங்களுக்குத் துணை நிற்பது புலம்பெயர் சமூகத்தில் உள்ளவர்களும் ஊடகங்களுமே.
இவர்கள் ஆயுதம் தூக்கியவர்களோ, களத்தின் யதார்த்தத்தை அறிந்தவர்களோ அல்ல.
அவர்களின் தேவைகள் வேறு விதமானவை.
இந்தியப் படைகள் காலத்தில் நூற்றுக்கணக்கான போராளிகள் சிறைப்பட்டனர்.
ஆனால் அவர்களை புலிகளின் தலைமை ஒதுக்கி வைக்கவில்லை.
மீளவும் சேர்த்து உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியது.
புலிகள் இயக்கத்துக்கு ஆயுதப் போராட்டம் நடத்தக் கூடியபலம் இல்லை என்றுணர்ந்த நிலையில் ஆயுதங்களைக் காட்டிக் கொடுக்கும் போராளிகளை துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு யாருக்குமே தகுதியில்லை.
ஐந்து- பத்து- இருபது- முப்பது வருடங்கள் விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
ஆயுதமே தூக்காதவர்கள், ஆயுதப் போராட்டத்தைக் காட்டி புலம்பெயர் மக்களின்; பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு இப்படியான குற்றச்சாட்டைச் சுமத்தும் தகுதி கிடையாது.
ஒரு காலத்தில் போராளிகள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்களை- தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்தவர்களை இன்று இவர்கள் துரோகிகள் என்று துச்சமாகப் பிரசாரம் செய்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் தந்த பாடத்தை நாம் சரியாகப் படிக்கவில்லை.
நன்றி மறந்த சமூகமாக மாறிவிட்ட தமிழருக்கு முள்ளிவாய்க்கால் அழிவுகளின் முடிவாக அமைய முடியாது.
மேலும் செய்திகளுக்கு...
Labels:
அனுபவம்,
ஈழம்,
துரோகிகள்,
விடுதைப்புலிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment