Monday, July 12, 2010

பயணம் ஒன்று .. பார்வை பல ...















அண்மையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட ஒன்பதுபேர் பற்றிய செய்திகளே கடந்த‌ வாரம் தமிழ் வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்ட விடயமாக இருந்தது.

இச்செய்திகளில் பெரும்பாலானவை கொஞ்சம் உண்மை, கொஞ்சம் வசவு, கொஞ்சம் புனைவு என்பதாக அவரவர் தளத்தில் நின்று வெளியிடப்பட்ட கருத்துகளாகவே அமைந்திருந்தன.

வழமையாக முந்திக் கொண்டு செய்திவெளியிடும் இணையதளங்களில் சில, இச்செய்தியை சுயதணிக்கை செய்து தமது “ஊடக நேர்மையை” வெளிப்படுத்தின.

இந்நிலையில் இப்பயணத்தில் இணைந்து கொண்ட சிலரை தொடர்பு கொண்ட நாம் அவர்கள் தெரிவித்த தகவல்கள், இச்செய்தியின் பின்னணியாக அமைந்த சம்பவங்கள் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இச்செய்திக்கட்டுரையை வரைந்துள்ளோம்.

ருப்பினும் நாம் பெற்றுக்கொண்ட தகவல்கள், குறிப்பாக இலங்கைத்தீவில் இடம்பெற்ற சந்திப்புகள் பற்றிய, உண்மைத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் எமக்கு இருக்கவில்லை என்பதனை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் சிறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட பயணங்களில் பங்கெடுக்கவைப்பதும்;, அவர்களை புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாகவும், புத்திசீவிகளாகவும் தரமுயர்த்தி தமக்குச் சாதகமான முறையில் பரப்புரைகளை மேற்கொள்வதும், சிறிலங்காவின் நன்கறிந்த தந்திரோபாயமாக இருந்து வருகிறது. இந்த வலையில் விருப்பத்துடன் விழுந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள், முட்டாள்த்தனமாக விழுபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம்.

இந்தவகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள் சிலருக்கும் சிறிலங்கா தூதரக அதிகாரிளுக்குமிடையிலான ஒரு சந்திப்பு கடந்தவருடம் செப்ரெம்பர் மாதத்தில் நடைபெற்றதாக எமக்குத்  தெரியவந்தது. இச்ந்திப்பில் தமிழர் நலவாழ்வு அமைப்பினைச் (ரீ.எச்.ஒ) சேர்ந்த மருத்துவர் ஆறுமுகம் புவிநாதன், ஏ.விமலதாசன், சார்ல்ஸ் அந்தனிதாஸ் ஆகியோருடன் முன்னாள் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும், லண்டனிலுள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சாவும் கலந்து கொண்டனர். இதே காலப்பகுதியில் சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட எவன்ஸ் மற்றும், ஹரோ உள்ளுராட்சிச்சபை உறுப்பினர் தயா இடைக்காடர் ஆகியோர் கொண்ட தொழிற்கட்சிக்குழு ஒன்றும் தனியாக சந்திப்புகளை நடாத்தினார்கள்.

இச்சந்திப்பு தொடர்பாக நாம் ரீ.எச்.ஓ குழுவினரிடம் வினவியபோது,  தாம் பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தித்துறை அமைச்சராக இருந்த, கரத் தோமஸ் அவர்களின் ஆலோசனைப்படியே சிறிலங்கா தூதரக அதிகாரியை சந்தித்ததாகத் தெரிவித்தனர். பிரித்தானிய தமிழர்பேரவையின் முக்கியஸ்தர்களான தொழிற்கட்சி ஆதரவாளர்கள் சிலரும் இச்சந்திப்பிற்கு தமது ஆதரவு வழங்கியிருந்தனர்.  இவற்றிலிருந்து தொழிற்கட்சி தரப்பில் “இனங்களுக்கிடையிலான நல்லிணகத்தை” ஏற்றபடுத்துதல் என்ற நோக்கத்துடன் இச்சந்திப்புகள் ஊக்குவிக்கப்பட்டமையை உணரக்கூடியதாகவிருந்தது.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காகவும் தாம் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அதற்கென Relief and Rehabilitation Network (RRN) என்ற அமைப்பினை உருவாக்கி செயற்படவிருப்பதாகவும் ரி.எச்.ஒ. இன் இணைப்பாளர் புவிநாதன் எமக்குத் தெரிவித்திருந்தார். தமது தமிழர் நலவாழ்வு நிறுவனத்துடன் Standing Committee of Tamils,  ஆரோபணம் சிறுவர் அறக்கட்டளை ஆகியவையும் இணைந்து இவ்வமைப்பில் செயற்படவிருப்பதாகவும் அறிவித்தார். இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஹரோ உள்ளுராட்சிச்சபை மண்டபத்தில் கடந்தவருடம் நொவெம்பர் மாதம் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் மற்றய சமூக அமைப்புகளையும் தம்முடன் இணைத்து செயற்படவிருப்பதாகவும், ரொபர்ட் எவன்ஸ் இந்த அமைப்பின் தலைவராகச் செயற்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆர். ஆர். என்இ  மற்றும் ரி.எச்.ஓ ஆகியவற்றுக்கும் சிறிலங்கா தூதரகத்திற்கும் இடையிலான தொடர்புகள் காரணமாக, மற்றய அமைப்புகள் இவர்களுடன் சேர்ந்தியங்க மறுத்தவிட்டார்கள். புவிநாதன் அங்கம் வகிக்கும் ஊர்ச்சங்கமான தென்மராட்சி அபிவிருத்திச்சபை (பிரித்தானியா) கூட இவர்களுடன் சேர்ந்தியங்க இணங்கவில்லை. இருப்பினும் சிறிலங்கா தூதரகத்துடனான தொடர்பினை இவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.

இதன் நீட்சியாக ரி.எச்.ஓ வின் பிரதிநிதிகளாக வேலாயுதபிள்ளை அருட்குமார், ஏ.விமலதாசன், சார்ல்ஸ் அன்ரனிதாஸ் ஆகியோர் (ஜுன் 15-20) கொழும்புக்கு சென்றனர். இவர்களில் மருத்துவர் அருட்குமார் நலவாழ்வு நிறுவனத்தின் உறுப்பினர் அல்ல, இதில் வேடிக்கை என்னவெனில் சுகாதாரத்துறை சாராத மற்றய இருவரும் அதன் நிரந்தர அங்கத்தவர்கள். விமலதாசன், அதன் தலைவர். சார்ல்ஸ் அன்ரனிதாஸ், இந்தியசார்பு ரெலோ இயக்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதியாக இருந்தவர். பல்வேறு புலனாய்வு அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணிவருபவர் எனப் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இவர்களுடன் சிவனடியான் சிறிபதி (தீபம், பிரித்தானியா), பேரின்பநாயகம் அல்லது பெரின் இன்பம் (முன்னாள் நிதித்துறைச் செயற்பாட்டாளர் கனடா), சிவசக்தி(கனடா), கங்காதரன் (பத்மநாதனின் உறவினர், பிரான்ஸ்), உரூபமூர்த்தி(அவுஸ்திரேலியா), சந்திரா மோகன்ராஜ் (சுவிற்சலாந்து) ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் சிறிலங்காப் புலனாய்வாளர்களின் பாதுகாவலில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் அழைப்பின்பேரில் சென்றிருந்தபோதிலும், ஒரு குழுவாக இணைந்து செய்யபடவில்லை எனத் தெரியவருகிறது.

ரி.எச்.ஓ. வின் பணிப்பாளர் புவிநாதனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பத்மநாதன், சிறிலங்காப்படைகளால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதனைத் தாம் சிறிலங்கா தூதரக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியபின் அங்கு சென்றதாக ரி.எச்.ஒ. பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக பத்மநாதன் புலம்பெயர் நாடுகளிலுள்ள‌ தனது சகாக்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறார் என்ற செய்திகள் வெளிவந்தமையும் அதனை அவரது சகாக்கள் மறைத்து வந்தமையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதாகவிருக்கும்.

இப்பயணத்தின்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தாபாய இராஜபக்ச, இராணுவ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கப்பில ஹெந்தவிதாராண, இராணுவத்தளபதி சவேந்தர் சில்வா. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து “புனர்வாழ்வு” விடயங்கள் தொடர்பாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துச் சந்திப்புகளின் போதும் குமரன் பத்மநாதனும் உடனிருந்தததாக சார்ல்ஸ் எம்மிடம் தெரிவித்தார். சேலையணிந்த (அழகிய) இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த சிங்களப் பெண்கள் சிலரும் தங்களைச் சந்தித்து உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

சார்ல்ஸ், மேற்படி சந்திப்புகனையிட்டு திருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது. தமது சந்திப்பு தொடர்பாக பிபிசி இன் சந்தேசிய சிங்கள சேவைக்க வழங்கிய பேட்டியிலும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  சிறிலங்கா படையதிகாரிகளிடம் பத்மநாதன் பற்றிய மிகவும் உயர்வான எண்ணம் உள்ளதாகவும், அவரது மனங்கோணாமல் அவர்கள் பார்த்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்மநாதன் சிறிலங்கா அரசின் தாளத்திற்கு ஆடுவதை, அவர் வேறுவிதமாக இவ்விதம் குறிப்பிட்டிருக்ககூடும், ஏனெனில் தமிழ்நெற் இணையதளத்திற்கு மருத்துவர் அருட்குமார் வழங்கிய செவ்வியில், பத்மநாதன் சிறிலங்கா அரசிற்கேற்ப செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வன்னியில் போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முகாம் ஒன்றுக்கு தங்களை அழைத்துச் சென்றதாகவும், அப்போது தங்களுடன் பத்மநாதனும் உடனிருந்ததாகவும் ரீ.எச்.ஓ பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேற்படி முகாமில் போரின் இறுதிக்காலகட்டத்தில் இணைந்த இளநிலைப்போராளிகளே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மூத்த போராளிகள் எவரையும் சந்திக்க தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் செட்டிக்குளம் வலயம் நான்கிற்கு கூட தங்களை அழைத்துச் செல்லவில்லை என அருட்குமார் தெரிவித்திருந்தார். இதனை மறுதலித்த சார்ல்ஸ் அங்கு ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த போராளிகள் சிலருடன் தான் உரையாடியதாகக் கூறினார். இருப்பினும், பத்மநாதனுக்கோ தம்முடன் வந்த மற்றவர்களுக்கோ அவர்களை தெரிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் அவர்கள் எந்தப்படையணியை சேர்ந்தவர்கள் என்பதனை அவர் எப்படி உறுதிப்படுத்திக் கொண்டார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை.

குறுகிய நலன் அடிப்படையில், சிறிலங்கா அரசாங்கத்துடனும் அதன் ஆயுதப்படைகளுடனும் நட்புரீதியான சந்திப்புகள் நடாத்துவது அவர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்காதா என நாம் புவிநாதனிடம் வினவியவோது, தாங்கள் தனித்து புனர்வாழ்வு விடயங்களில் மட்டுமே அக்கறைப்படுவதாகவும், மனிதவுரிமை விடயங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற மற்றய அமைப்புகள் பார்த்துக்கொள்ளும் எனப் பதிலளிளத்தார்.

அதுபோல் போர்க்குற்றவாளியாகக் கருதப்படும் கோத்தாபாய இராஜபக்சவுடனும், புலனாய்வு அதிகாரிகளுடனும்  சந்திப்புகளை நடாத்தியதைப்பற்றி கருத்துக்கூறுகையில்,  கோத்தாபாய போர்க்குற்றவாளி என்ற விடயத்தை தானும் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அங்கு செயற்படும் அரசுசாரா நிறுவனங்கள் (NGOs)  அவரது கட்டுபாட்டின் கீழ் வருவதால், அவரைச்சந்திப்பதைத் தவிர வேறுவழியில்லை எனத் தெரிவித்தார்.

மேற்படி சந்திப்புகள் தொடர்பாக மருத்துவர் அருட்குமார் தமிழ் நெற் இணயைதளத்திற்கு தெரிவித்திருக்கும் கருத்துகள் அங்குள்ள உண்மை நிலையை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனால் ஒரு பயணத்தை மேற்கொண்டபின்னர்தான் இவ்வாறான முடிவுக்கு வரவேண்டியுள்ளதா? சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் நாம்  உள்ளோமா?  கற்றறிந்தவர்களின் நிலை இதுவென்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? என்பவை அரசியல் விடயங்களில் அனுபவமுள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கேட்கின்ற கேள்விகளாக இருக்கின்றன.

நன்றி: ஒரு பேப்பர்

மேலும் ஈழச் செய்திகளுக்கு...

No comments:

Post a Comment