Saturday, July 10, 2010

மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியின் நேர்காணல் தொடர்ச்சி















அல்பாஷா : அப்படியாயின், சனநாயகம் என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?


கோபால்ஜி : எங்களது உடனடியான குறிக்கோள், ஒரு புதிய சனநாயகப் புரட்சியாகும். புதிய சனநாயக இந்தியாவில், அதிகாரம் என்பது நான்கு வர்க்கங்களில் கூட்டணியிடம் இருக்கும். பாட்டாளிகள், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டணியாக அது இருக்கும். இதில் எந்தவொரு தனிவர்க்கமும் அதிகாரம் செலுத்துவதாக இருக்காது. புதிய அரசு விவசாயிகளை நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து விடுதலை செய்யும். தேசிய மூலதனத்தைத் தரகு மூலதனத்திலிருந்து விடுவிக்கும். தரகு முதலாளிகளின் உடைமைகள் பறி முதல் செய்யப்படும். அயல்நாட்டுக் கடன்கள் இரத்து செய்யப்படும். பண்ணையார்களிடமிருந்து உபரி நிலம் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பிரித்தணிக்கப்படும். சமூகம், அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்து வத்தையும் ஒழிக்கும்.

புதிய சனநாயகப் புரட்சி உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக இந்தியாவை உருவாக்கும். அதில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன்னுரிமையும், பிரிந்து போகும் உரிமையும் அங்கீகரிக்கப்படும் புதிய சனநாயக அரசு எந்தவொரு மதத்தையும் ஆதரிக்காது. மதம் தனி மனிதரின் சொந்த விசயமாக இருக்கும். வேலை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சமவாய்ப்பு இருக்கும் என்பதுடன் ஒவ்வொருவரும் அவற்றைப் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும்.

அல்பா ஷா : அரசின் வளர்ச்சித் திட்டங்களை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்?

கோபால்ஜி : பொது மக்களின் வளர்ச்சி பற்றி இந்திய அரசு குறைந்த அளவிற்குக்கூட அக்கறை இல்லாமல் இருக்கிறது. அரசின் கணக்குப்படி, 77% மக்கள் ஒரு நாளைக்கு %.20க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதன்படி, 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். 62 ஆண்டுக்கால சுதந்தரத்துக்குப் பின் இத்தகைய கேவலமான நிலை! ஆனால் அதே சமயம் சில இந்தியர்கள் கோடீசுவரர்களாகி வருகின்றனர். இந்திய அரசு இதுபற்றிப் பெருமிதம் கொள்கிறது.

பங்குச்சந்தைக் குறியீட்டு எண், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தக் கூடாது. சில பணக்காரர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று அரசு கருதுகிறது. சாதாரண மக்களின் அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்பதில் அரசு அக்கறையின்றி இருக்கிறது. உலகவங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் அறிவுரைகளின்படி, தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. நம்முடைய இயற்கை வளங்களை, நிலங்களை, காடுகளை, இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய எசமானர்களுக்கும் விற்றிட முயல்கின்றனர்.

தற்செயல் நிகழ்வாக, மாவோயிஸ்டுகள் வலிமையுடன் உள்ள ஜார்கண்ட், சத்தீஷ்கர், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இயற்கை வளங்கள் மிகுந்து உள்ளன. இந்தியாவின் இயற்கை வளங்களில் 80%  இப்பகுதியில் உள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கி, இப்பகுதியிலிருந்து விரட்டாத வரையில், நிலத்தையும் இயற்கை வளத்தையும் அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களுக்கு வெளிப்படையாக விற்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அல்பா ஷா : கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்று கூறுகிறீர்களா?

கோபால்ஜி : அப்படியில்லை. சுரங்கம் தோண்டுவது அல்லது ஆலைகள், தொழிற்சாலைகளை நிறுவுவது ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நம்முடைய இயற்கை வளங்களும், தாயக நிலமும் இந்தியப் பெருமுதலாளிகளாலும், அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களாலும், அவர்களுடைய சொந்த இலாபத்திற்காகச் சூறையாடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். மக்களின் மேம்பாட்டிற்காக ஆலைகளையும் சுரங்கங்களையும் அமைக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆர்வம் காட்டுவதில்லை. இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று நெருக்குதல் தரப்படுகிறது. அவ்வாறு வெளியேறாவிடில், அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். நகரங்களில் இம்மக்கள் கூலியாட்களாக வாழும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டனர். அதைப் போலவே இப்போதும் நிகழும். பொக்காரோவிலும் மற்ற இடங்களிலும் பெருந்திட்டங்களைச் செயல்படுத்திய போது, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர்க்கு, நிலமோ, வீடோ, அங்குக் கட்டப்பட்ட ஆலையில் வேலையோ வழங்கப்படவில்லை. பல ஆயிரக் கணக்கில் பழங்குடியினர் வெளியேற்றப்பட்டனர்.

எனவே, மீண்டும் அதுபோல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எனவே இயற்கை வளங்கள் கொள்ளை போவதையும், சூறையாடப்படுவதையும் எதிர்த்திட நாங்கள் மக்களை அணிதிரட்டுகின்றோம். எங்களுடைய நிலமும், இயற்கை வளங்களும் ஏகாதிபத்திய வாதிகளாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் இந்தியப் பெரு முதலாளிகளாலும் சூறையாடப்படுவதை அனுமதிக்க மாட்டோம். மாவோயிஸ்டு அரசில், ஆலைகளை, சுரங்கங்களை அமைப்பதற்குமுன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலில் சுரங்கங்களும் ஆலைகளும் நாட்டுடைமையாக்கப்படும். நாட்டின் நலனுக்காக அவை இயங்கும். முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக அவை செயல்படா. இரண்டாவது, பொதுவாகப் பயிரிடப்படும் நிலங்களைச் சுரங்கம் வெட்டுவதற்காகவோ, பிறவற்றுக்காகவோ எடுக்கக் கூடாது. மூன்றாவதாக, அவ்வாறு நிலங்களை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளபோது, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்ததற்கு உரிய இழப்பீடும், வேலையும், வீடும், பயிரிடுவதற்கு சிறுபகுதி நிலமும் அளிக்கப்பட வேண்டும். புதிய சனநாயக அரசு இடம் பெயர்ந்த மக்களின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்றுச் செயல்படும்.

நான்காவதாக, இச்சுரங்கங்களும் ஆலைகளும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையில் அமைக்கப்படும். அய்ந்தாவதாக, இத்திட்டங்களை அமைப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதல் பெறப்படும். சுரங்கங்களையும் ஆலைகளையும் நிர்வாகம் செய்வதில் அம்மக்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும். இந்தியாவில் புதிய சனநாயக அரசு அமையும் போது, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் அரசு செயல்படும்.

அல்பா ஷா : ஜார்கண்ட் பகுதியில் உங்கள் கட்சி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளின்  திட்டவட்டமான சாதனைகள் எவை?

கோபால்ஜி : உழைக்கும் மக்களும், நிலமற்ற தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும் இந்தியாவில் ஓர் ஆற்றல் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக உருவாகியுள்ளனர். இதுவே எமது முதலாவதும் முதன்மையானதுமான சாதனையாகும். நாங்கள் போராடும் பகுதிகளில் நிலப்பிரபுத்துவ அதிகாரம் என்பது பெரும்பகுதி தகர்க்கப்பட்டுவிட்டது. இப் பகுதியில் போராடும் மக்கள் தமக்கெனத் தனியாக கொரில்லாப் படையை  அமைத்து உள்ளனர்.

காலங்காலமாக இழிவாக நடத்தப்பட்டு வந்த தலித்துகளும், பழங்குடியினரும் இப்போது சமூகத்தில் உரிய இடமும், மதிப்பும் பெற்றுள்ளனர். இது எமது இரண்டாவது சாதனை. பெண்களை, தலித்துகளை, பழங்குடியினரை இழிவாக நடத்தும் போக்குகளும், காட்டுப்பகுதிகளில் மேல்சாதியினரும் அயலாரும் செலுத்தி வந்த ஆதிக்கமும் வேகமாக மாறத்தெடங்கி உள்ளன. ஊழல் மலிந்த, கொடிய வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மூன்றாவது சாதனை

யாகும். வனத்துறையின் கீழ்நிலை ஊழியர்கள்கூட கடுமையான ஒடுக்கு முறைகளை ஏவினர். ஆனால் இவர்கள் மாஃபியா கும்பலின், பண்ணையார்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து காடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் காடுகளில் சுதந்தரமாக நடமாடி, தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். காடுகள் அழிக்கப்படுவதை நாங்கள் தடுத்து வருகிறோம். நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டம் எமது நான்காவது சாதனையாகும். எங்கள் போராட்டப் பகுதிகளில் மக்கள் சனநாயக உரிமைகளைத் துய்க்கின்றனர். பண்ணையார்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பெரும்பாலான இடங்களில் பண்ணையார்களை கிராமங்களை விட்டு விரட்டியுள்ளோம். பல இடங்களில் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். நிலத்தை இதற்கு முன் உழுது கொண்டிருந்த நிலமற்றவர்களுக்கும், ஏழை உழவர்களுக்கும் இந்நிலங்களைப் பிரித்து அளித்துள்ளோம்.

ஜார்கண்டிலும் பீகாரிலும் விவசாயக் கூலி மிகவும் குறைவாக இருந்தது. காடுகளில் டெண்டு இலைகளையும் பிற பொருள்களையும் பொறுக்கி எடுத்து வருவதற்கான கூலி மிகவும் குறைவாக இருந்தது. எனவே அதிகக் கூலி கேட்டுப் போராடுமாறு செய்தோம். எனவே தற்போது முன்னைவிட அதிகக் கூலி பெறுகின்றனர். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் திருட்டையும் வழிப்பறியையும் ஒழித்து விட்டோம். அத்துடன், அரசோ அல்லது பெரிய ஒப்பந்தக்காரர்களோ குளம், ஆற்றுப்படுகை, கடைவீதி, தோப்புகள் முதலானவற்றை ஏலம் விடும் முறைக்கு முடிவுகட்டி விட்டோம். எனவே இவற்றை மக்கள் தம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எங்கள் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதியில் வகுப்பு மோதல் இல்லை. சங்பரிவாரக்  குண்டர்கள் எம் பகுதியில் வகுப்பு மோதலை உண்டாக்கத் துணியமாட்டார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் அவ்வாறு முயன்றபோது, ஒரிசாவில் கந்தமாலில் சாமி இலட்சுமானந்தாவைத் தண்டித்தது போல் தண்டனைகள் தருகின்றோம். மற்றொரு முக்கியமான சாதனை என்னவெனில், முதலாளிகள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருவதாகும். எனவே, நிலத்தையும் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரையில், நடுவண் அரசில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாத வரையில் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த இயலாது. இருப்பினும், எங்கெல்லாம் புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் மக்களுக்கு நலம் பயக்கும் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். வேளாண்மையிலும் வேளாண்மை சார்ந்த பிற தொழில்களிலும் கூட்டுறவு முறையை ஊக்குவித்துள்ளோம். மிகவும் பின் தங்கிய பகுதிகளின், கூலியில்லா விருப்ப உழைப்பைக் கொண்டு கிணறுகள், குளங்கள், கால்வாய்களை வெட்டி வருகின்றோம். பள்ளிகளை மருத்துவமனைகளைத் திறந்துள்ளோம். குறைந்த விலையில் மருந்துகளை அளிக்கின்றோம். புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில் இப்பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆயினும் இவை தொடக்க நிலைப் பணிகளேயாகும்.

அல்பா ஷா : இந்திய அரசு மாவோயிஸ்டு கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கோபால்ஜி : பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது என்பது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருப்பதன் ஒரு பகுதியே ஆகும். தெற்காசியப் பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இந்திய ஆளும்வர்க்கம் உருவாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிரானது என்று கருதப்படுகின்ற எந்த ஒரு இயக்கத்தையும் அல்லது எந்தவொரு எதிர்ப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துகின்றனர்.

இந்தப் பின்னணியில் தான், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன எழுச்சிப் போராட்டங்களையும், உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் பயங்கரவாதச் செயல்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவதன் மூலம், மாவோயிஸ்டு கட்சியின் மக்கள் திரன் அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களை  - சனநாயக உணர்வு கொண்டோரை எளிதில் கைது செய்ய முடியும். அரசின், சனநாயகத்துக்கு விரோதமான செயல்களை, அதன் ஒடுக்கு முறைகளைக் கண்டித்துப் பேசுவோரைக் காவல்துறை கைது செய்வதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளர்கள், மக்கள் உரிமை இயக்கத்தினர் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். எனவே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் போக்கை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இரண்டாவதாக, எங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கண்மூடித்தனமாகக் கொல்வது, அப்பாவி மக்களைக் கொல்வது பொதுவாகப் பயங்கரவாதச் செயலில் நிகழும். அத்தகைய கொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். குறிப்பாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிரானவர்கள் நாங்கள். கிராமப்புறங்களில் அப்பாவி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எச்செயலையும் நாங்கள் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆயுதமேந்திய எங்கள் படையினர் அத்தகைய தவறைச் செய்யும் போது நாங்கள் எமக்குள் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறோம்.

எங்கள் தத்துவம் மார்க்சியம் - லெனினியம் - மாவோயிசம் என்பதாகும். இந்தியாவை உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்களை பயங்கரவாதிகள் எனக் கூறுவது வஞ்சமும் தந்திரமும் கொண்ட சூழ்ச்சியாகும். இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றலாம் என்று இந்திய அரசு நினைக்கிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதால், எங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் நாங்கள் தொடக்கக் காலம் முதலே தலைமறைவு இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது, பொது மக்களைக் குறிப்பாக, போராட்டப் பகுதிகளில் உள்ள மக்களைத் துன்புறுத்துவதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரம் தருவதற்காகவேயாகும்.

அதேசமயம் இதன் இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல்லாயிரம் இராணுவத்தினரும் துணை நிலைப்படையினரும் என்ன செய்வது கொண்டிருக்கிறார்கள்? போலி மோதலில் அன்றாடம் இளைஞர்களைச் சுட்டுக்கொன்று கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் போராடுகின்ற பகுதிகளில் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் என்ன செய்கிறார்கள்? நூற்றுக் கணக்கில் இளைஞர்களைக் கொல்கிறார்கள். ஆளும் வர்க்கத்தினர் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1984 கலவரத்தில் சீக்கியர்களைக் கொன்று குவித்தார்கள். அண்மையில் ஒரிசாவில் கிறித்தவர்களையும், 2002இல் குசராத்தில் இசுலாமியரையும் ஆயிரக்கணக்கில் கொன்றனர். இக் கலவரங்களில் எத்தனை இந்து வெறியர்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர்? 1947 முதல் காவல் துறையும் இந்தத்துவ சக்திகளும் கைகோத்துச் செயல்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் அய்ந்து இலட்சம் விவசாயிகள் அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-09ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் அன்றாடக் கூலிகளாக மாறிவிட்டனர். பட்டினியால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். உட்சா பட்நாயக் குறிப்பிட்டுள்ளது போல இது ஒரு ‘வறுமைக்குடியரசு’. இச்சாவுகளுக்குயார் பொறுப்பு? பட்டினியாலும் பசியாலும் பிற நோய்களாலும் பல்லாயிரம் மக்கள் மடிந்து கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு? வேறு வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் அவலத்தை - இன்னலை கேட்பதற்கு யாருமில்லை! இந்திய மக்கள் மீது அரசு வன்முறையைத் திணிக்கிறது.

அல்பாஷா : போர் தீவிரமடைந்து வருகிறது. அரசும் தன்னுடைய இராணுவத் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளது. இருதரப்பினருக்குமான போரில் ஏழை விவசாயிகள் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். உங்களிடம் ஏ.கே.47 துப்பாக்கிகளும் கண்ணி வெடிகளும் உள்ளன. அதனால் உங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். இச்சண்டையில் சாதாரண கிராமமக்கள் மடியப்போகிறார்கள். இதை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

கோபால்ஜி : மன்னிக்க வேண்டும். உங்கள் கேள்வியே தவறான முறையில் கேட்கப்பட்டுள்ளது. இப்போர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் அன்று. இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான போர். மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி என்பது என்ன? மக்கள் விடுதலை கொரில்லாப்படை என்பது என்ன? இவை மக்கள் வலிமையாக அணி திரண்டுள்ள அமைப்புகளே தவிர வேறு அல்ல. ஆகவே மாவோயிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சியை - மக்கள் விடுதலை கொரில்லாப்படையை அரசுப்படைகள் தாக்குவது மக்கள் அணிதிரள்வதையே ஒடுக்குவதாகும். மக்கள் இதை உணர்த்திருக்கிறார்கள். எனவே இத்தகையபோர் என்பது எங்கள் கட்சிக்கு எதிரான போர் அன்று. இது மக்களுக்கு எதிரான போரேயாகும்.

அல்பா ஷா : மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேறல்ல; மக்கள் வேறல்ல; இரண்டும் ஒன்றே என்று நீங்கள் கூறுவதைப் போலவே இந்திய அரசும் மக்களும் வேறு வேறானவர் என்று நீங்கள் பிரித்துக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக, உங்கள் தாக்குதலின் இலக்காக இருக்கின்ற காவல்துறையினர் - உங்களுடைய ஆதரவாளர்கள், கொரில்லாப்படையினர் எந்தக்குடும்பங்களிலிருந்து வந்துள்ளனரோ, அதே குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற காவல்துறையினரை நீங்கள் ஏன் கொல்லுகிறீர்கள்?

கோபால்ஜி : பொதுவாகப் போலீசுக்காரர்கள் கிராமப்புற ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பதும், எங்கள் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதும் உண்மை. போலீசுக்காரர்கள் எங்கள் பகுதியைக் கைப்பற்ற வரும்போது, எம்மீதான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போது, மக்களையும் மக்கள் இயக்கத்தையும் ஒடுக்க முனையும் போது மட்டுமே எங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். சில எடுத்துக் காட்டுகளைக் கூற விரும்புகின்றேன்.

காவல்துறையிலும் இராணுவத்திலும் பல இடங்களில் பணியாற்றும் பலபேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் குடும்பத்தினரின் பிள்ளைகள். இவர்களுடைய குடும்பத்தினர் எங்கள் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். விழாக்காலங்களிலோ, வேறு விடுமுறைகளிலோ காவல்துறையிலும் இராணுத்திலும் பணியாற்றுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கும் போது அவர்களை நாங்கள் தாக்குவதில்லை. அப்படியான ஒரு நிகழ்ச்சி கூட நடந்ததில்லை. அடுத்து பொதுவாக மாவட்ட அளவில் இயங்கும் போலீசாரை நாங்கள் தாக்குவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களைத் தாக்க வரும் போதும், மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒடுக்கப்படும்போது மட்டுமே நாங்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

போரில் எதிரி, நம் சொந்த வர்க்கத்தினரையே நம்மீது ஏவிவிடும் போது, அவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. காவல்துறையிலும் இராணுவத்திலும் பணியாற்றுவோருக்கு எங்கள் வேண்டுகோள் இதுதான். நீங்கள் எந்த அரசுக்காகப் போராடுகிறீர்களோ, அது உங்களுக்கான அரசு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஆளும் வர்க்கத்திற்காகச் சேவை செய்கிறீர்களோ அவர்கள் உங்கள் குடும்பங்களின் நலனுக்கு எதிரானவர்கள். எனவே, பிற்போக்குத்தனமான இராணுவத்திலிருந்தும் காவல்துறையிலிருந்தும் விலகி மக்கள் விடுதலை கொரில்லாப் படையில் சேருங்கள் என்பதே எங்கள் அழைப்பாகும்.         

(சிந்தனையாளன் ஜூன் 2010 இதழில் வெளியானது)

நன்றி : கீற்று

மேலும் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்...

No comments:

Post a Comment