Thursday, July 29, 2010
இசைதான் என் சுவாசம்..!
தமிழ்த் திரையுலகில் `தா` என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஸ்ரீவிஜய். இவர் இலங்கைத் தமிழர். பூர்வீகம் யாழ்ப்பாணம். வசித்தது கொழும்புவில். தற்போது சென்னையில் குடும்பத்துடன் இருக்கிறார். அவரைச் சந்தித்தோம்.
“எனது தந்தை கர்நாடக சங்கீதக் கலைஞர். இதனால் சிறு வயதில் இருந்தே குடும்பத்தில் பலருக்கும் பாடும் திறமை உண்டு. சிறு பிராயத்தில் இருந்தே ரத்தத்தில் பாட்டு கலந்து விட்டது. எனது சகோதரர்களும், தங்கையும் இசையில் ஆர்வம் உடையவர்கள்தான். இலங்கையில் கொழும்புவில் இருந்தபோது சென்னை டூ கொழும்பு இசை ஆல்பத்தை வெளியிட்டேன். அதற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஆல்பத்தில் பாடல்கள் எழுதி நானே இசையமைத்தேன். இலங்கையைப் பொறுத்தவரையில் இசை என்றால் தமிழ் இசை ஆல்பங்கள்தான்.
அப்போதுதான் ஒரு நண்பர் மூலமாக `தா` படத்தின் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. எனது இசை ஆல்பத்தை கேட்டதும், அந்த இடத்திலேயே, `எனது படத்தில் நீங்கள்தான் இசை அமைக்கிறீர்கள்` என்று கூறினார். என் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் உழைத்தேன். படத்தில் பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருக்கின்றன. பாடல்கள் தமிழ் ரசிகர்களிடம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இந்தப் படத்தில் 11 புதிய பாடகர்களை அறிமுகம் செய்துள்ளோம். பல புதிய குரல்கள் தேவைப்பட்டதால் இந்தப் படத்தில் 11 புதிய பாடகர்களை அறிமுகம் செய்துள்ளோம். நானும், எனது தங்கையும், சகோதரரும் பாடியிருக்கிறோம். படத்தின் பாடல்களை இயக்குநர் எழுதியிருக்கிறார். பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. நல்ல இசையை ரசிகர்களுக்குத் தொடர்ந்து தர வேண்டும் என்றே விரும்புகிறேன். இசையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. இசைதான் எனக்கு வாழ்க்கை.
தமிழ்த் திரையுலகம் ஈழத் தமிழர்களை புறக்கணிக்கிறது என்பது சரியானதல்ல. திறமையும், உரிய உழைப்பையும் கொடுத்தால் இங்கு ஜெயிக்கலாம். கோலிவுட்டில் வாய்ப்பு தேடுகின்றவர்கள் இங்கு வந்து முயற்சி செய்ய வேண்டும். பிற நாடுகளில் இருந்து கொண்டு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று கூறுவது தவறு. நான் தமிழன் என்றாலும், வேறு நாட்டைச் சேர்ந்தவர். அப்படியிருந்தாலும் எந்தவொரு பேதமும் இல்லாமல் என்னிடம் பழகுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். மேலும் ஒரு படத்தில் இசை அமைக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்த் திரையுலகில் உள்ள எல்லா இசைக் கலைஞர்களும் ஒவ்வொரு வகையில் ரசிக்க வைக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்" என்கிறார் ஸ்ரீவிஜய்.
Labels:
அனுபவம்,
சினிமா,
தா,
ஸ்ரீ விஜய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment