Monday, July 12, 2010

சீமான் கைது -‍ தமிழ்த்தேச விடியலுக்கான புள்ளி















நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது மீண்டும் ஒரு வழக்கினை பதிவு செய்து, கைது செய்துள்ளனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு.. நிர்வாணப்படுத்தப்பட்டு.. மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம், ஊழலும், துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு சவாலாய் இருக்கிறது.

என் சகோதரனைக் கொல்லாதே.. அவனை நீ அடித்தால் நான் உன்னை அடிப்பேன் என்ற அறச் சீற்றம் சிங்களப் பேரினவாதத்தின் மீது மலர்ந்து விட்ட இந்தியாவின் கள்ளக் காதலுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.

ஒரு மனிதனின் உணர்வு கொப்பளிக்கும் பேச்சு அதிகார உச்சங்களுக்கு அச்சுறுத்தலாய் விளைந்து, அசைக்க முடியாத அதிகாரத்தின் மாட மாளிகை, கூட கோபுரங்களை கவிழ்க்கும் பெரும் புயலாய் மாறுவது வரலாற்றில் புதிதல்ல. வரலாறு  எத்தனையோ ஆகச் சிறந்த பேச்சாளர்களை கண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் மாபெரும் பேச்சாளர்களையே தன் மூலதனமாகக் கொண்டு வளர்ந்தன.

கரகரத்த குரலால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தமிழ்நாட்டில் பாடை கட்டினார் அறிஞர் அண்ணா. இரண்டாம் உலகப் போரின்போது சரிந்து கிடந்த இங்கிலாந்தினை, சுருட்டு ஊதும் உதடுகளால் உரையாற்றி உசுப்பேற்றி உயிரூட்டியவர் சர்ச்சில். இந்திய விடுதலையில் அனலாய் தகித்த சுபாஷ் சந்திர போஸின் சொற்கள் இன்னமும் உலவுகின்றன இலட்சியங்களாய் உலகில்.
 
சொற்களின் வலிமை மிகப் பெரியது. சொற்கள் ஏந்தவைக்கும் துப்பாக்கிகள்தான் தேசங்களை உருவாக்குகின்றன. தோல்வியாலும்.. அடிமைத்தனத்தினாலும் சினம் கொண்ட மனநிலை சீறிப் பாய்ந்து உதிர்க்கும் சொற்கள் காற்றில்  மிதந்து.. கால்கள் முளைத்து.. சோம்பிக் கிடக்கும் விழிகளில் வெளிச்சத்தினைப் பாய்ச்சும் வல்லமை உடையன. சீமானின் சினமும் இத்தகையதுதான்.
 
ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைப் போரில் தவிர்க்க இயலா இருள் ஒன்று சூழ்கையில் வெளிச்ச தெறிப்பாய் வெளியே வந்தார் சீமான். முற்போக்கு மேடைகளில் பெரியாரியலையும், பொதுவுடைமையும் , தமிழினச் சிறப்பினையும், பாடல்களோடும், நகைச்சுவையோடும் விவரித்த சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனின் சந்திப்பிற்குப் பிறகு ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க சொல்லாயுதமாய் மாறிப் போனார். ஈழம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கான நாடு மட்டுமல்ல.. உலகில் வாழும் 12 கோடி தமிழர்களுக்கான தேசம் என உரக்க அவர் முழுங்குகையில் தமிழர்களுக்கான நோக்கம் ஒர்மையானது.
 
இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் குற்றவாளிகளைத் தேடும் அழகினையும், அவர்களைப் பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராசபக்சே உல்லாசப் பயணம் போக இந்தியாவிற்கு வருகிறான். ஆனால் அவனுக்கு சிவப்பு கம்பள சிங்கார வரவேற்பு. போபால் விஷவாயு வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ஆண்டர்சனை அரசே விமானம் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது.

விமானத்தில் பாதுகாப்பாக ஆண்டர்சன் ஏறுகிறானா என்று பார்க்க அன்றைய மத்திய மந்திரி `புன்னகை புகழ்` நரசிம்மராவ் வேறு காவல் காத்த கதையும் இந்த நாட்டில் தான் நடந்திருக்கிறது. இந்திய நீதிமன்றங்களால் கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா  இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான். கடமை உணர்வுமிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். மத்திய அரசு ஒரு கொலைக்குற்றவாளிக்கு விருந்து உபச்சாரம் செய்து கூத்தடிக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய கருணாநிதியின் காவல்துறை வழக்கம் போல டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுதுகிறது. யார் இதைக் கேட்பது..?

இன்று சீமானை பிடிக்க 6 தனிப்படைகள் வைத்து பாய்ந்து பாய்ந்து செயல்படும் தமிழக காவல்துறையின் வீரம் அன்று எங்கே போனது..?  இந்தியாவிற்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னமும் வாய்தாவிற்கு வாய்தா என நகர்ந்து நிலுவையில் இருக்கிறது. ஆனால் தனது சொந்த மீனவ சகோதரனின் கொலையினை சீமான் தட்டி கேட்கக் கூடாது.

ஏனென்றால் சிங்களனைத் தட்டிக் கேட்பது என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலாக மாற்றப்பட்டுவிட்டது. குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவைப் பிடிக்க கடிதம் எழுதிய தமிழக காவல்துறை, இன்று தன் சொந்த சகோதரனின் கொலையில் வெகுண்டு பேசிய  சீமானைக் கைது செய்ய வாகனங்களை மறிக்கிறது. அலைபேசிகளை அலசுகிறது. போர்க்குற்றம் செய்த சிங்கள அதிபனைக் காக்கத் துடிக்கும் ஆர்வத்தினை நம் மீனவன் உயிரின் மீது மத்திய மாநில அரசுகள் காட்டினார்களா..? இல்லையே..

பேச்சுரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியலைப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினையும், அதன் தலைமையையும் ஆதரித்து பேசுவது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சொல்லி இருக்கிறது.  இந்த நிலையில் தன் சொந்த காழ்ப்புணர்ச்சியினாலும்.. காங்கிரஸ் மீதான தன் விசுவாசத்தினை விவரிக்கும் ஆர்வத்தினாலும் மாநில அரசு சீமானைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது போன்ற அடக்குமுறைகளால் ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை தாகத்தினை முறியடித்து விடலாம் என்ற ஆட்சியாளர்களின் தவறான கணக்கு பிழையில் முடியப் போவதை எதிர்காலம் காட்டும்.
 
வீழ்ந்த இனம் இது போன்ற கைதுகளால் எழுவதற்கான… எழ வேண்டிய எத்தனிப்பிற்கான அவசியத்திற்கு தள்ளப்படுகிறது. காலம் நம்மை எந்தப் புள்ளியில் நகர்த்துகிறது என்பதை நாம் உணரத் துவங்குவோம். நம் தேசிய இனத்தின் ஒர்மைப்புள்ளியின் துவக்கமாக இதை நாம் கருதுவோம்.

- மணி.செந்தில் ( advmsk1@gmail.com)

நன்றி : கீற்று

மேலும் செய்திகள் படிக்க..

No comments:

Post a Comment