Monday, June 14, 2010
எஞ்சினியரிங் கவுன்சிலிங்கில் எந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது?
"என் தம்பி பொறியியல் நுழைவுத் தேர்வில் 295.75 பெற்றுள்ளான். அவனுக்கு பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கத்தான் விருப்பம். ஆனால் அவனுடைய ஆசிரியர்கள் உட்படப் பலரும் நீ இசிஇதானே எடுக்கப் போகிறாய் என்று கேட்பதால் குழம்பியுள்ளான். உங்கள் ஆலோசனை என்ன?" -இதுதான் எனக்கு வந்த மடல். இந்த மடலின் முக்கியத்துவம் கருதி உடனடியாகப் பதில் எழுதி அனுப்பினேன்.
இந்தத் தருணத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இதேபோன்ற ஐயங்கள் உள்ளன. எனவே சுமதிக்கு நான் கூறிய ஆலோசனைகளை மற்ற மாணவ மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன்படக்கூடும் எனக்கருதி இக்கட்டுரையை எழுத முற்பட்டேன். பிளஸ்-2 முடித்து பொறியியல் கல்லூரிகளில் இடம்பெறக் காத்திருக்கும் மாணவர்கள் கீழ்க்காணும் அடிப்படையில் / வரிசையில் தங்களது வருங்காலப் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்:
(1) மாணவர் படிக்க விரும்பும் பாடம்
(2) மாணவர் படிக்க விரும்பும் கல்லூரியில் கிடைக்கும் பாடம்
(3) பிஇ முடித்தபின் என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பாடம்
விரும்பும் பாடம்
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு மாணவர் தாம் படிக்க விரும்பும் பாடத்துக்கே முதலிடம் தர வேண்டும். வேலைவாய்ப்பு, எந்தக் கல்லூரி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
ஒரு மாணவர் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே கம்ப்யூட்டர் துறையில்தான் நுழைய வேண்டும் என்று தீர்மானித்திருக்கலாம். அல்லது மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆக வேண்டும் எனக் கனவு கண்டிருக்கலாம். இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஒரு மாணவர் ‘ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர் ஆவதே என் லட்சியம்’ என்று கூறியுள்ளார். அவர் விரும்பினால் சிறந்த கல்லூரியில் இசிஇ, இஇஇ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமே கிடைக்கும். ஆனாலும் அவர் லட்சியம் ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர் ஆவதுதான். மருத்துவப் பிரிவில் முதலிடம் பெற்றவர் எலும்பு முறிவில் மேற்படிப்புப் படிப்பதே தன் லட்சியம் என்கிறார். இரண்டாம் இடம் பெற்றவர் மருத்துவம் படித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவேன் என்கிறார்.
இவ்வாறு, தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ளும் ஆர்வமும் திறனும் உள்ள மாணவர்கள் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தாலும் பிற்காலத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுவார்கள். ஏரோநாட்டிக்கல் பாடத்தை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்த மாணவர்தான் இன்று இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானி திரு. அப்துல் கலாம் அவர்கள். பிஇ படிப்பில் மெக்கானிக்கல் பிரிவை விரும்பி எடுத்துப் படித்த பலர் இன்று அமெரிக்காவில் விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். சிவில் எஞ்சினியரிங் விரும்பிப் படித்த திரு. மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் புகழ்பெற்ற மேதையாக விளங்குகிறார்.
‘படிக்கின்ற கல்லூரி எதுவென்பது முக்கியமில்லை. பாடம்தான் முக்கியம். எந்தக் கல்லூரி ஆயினும் நான் விரும்பும் பாடம் கிடைக்கும் கல்லூரியில் படிக்கத் தயாராக உள்ளேன்’ என்று தீர்மானமாக இருக்கும் மாணவர்களிடம் உங்கள் விருப்பத்துக்காக அவர்கள் விரும்பாத பாடத்தைத் திணிக்க வேண்டாம்.
சிறந்த கல்லூரி
இரண்டாவதாக, குறிப்பிட்ட பாடம் எதிலும் பற்று இல்லாதவர்கள், எந்தப் பாடத்தை எடுத்துப் படிக்கவும் தயாராக உள்ள மாணவர்கள், சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அக்கல்லூரியில் தமது மதிப்பெண்ணுக்குக் கிடைக்கின்ற படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். சிலர் அண்ணா பல்கலை சென்னை, எம்ஐடீ குரோம்பேட்டை, ஆர்இசி (தற்போது என்ஐடீ) திருச்சி, பிஎஸ்ஜி கோயம்புத்தூர், ஜிசிடீ கோயம்புத்தூர் போன்ற தரம்மிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இந்தக் கல்லூரியில்தான் படிப்பேன். பாடத்தைப் பொறுத்தவரை சிஎஸ்இ, இசிஇ, இஇஇ – இவற்றுள் எதுவானாலும் பரவாயில்லை என முடிவெடுத்திருப்பர். மேற்கண்ட கல்விக் கூடங்கள் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கே உரிய சிறப்புக் கூறுகள் உள்ளன. இங்குப் படித்தவர்கள் அத்தகைய சிறப்புக் கூறுகளை வெற்றிப் படிக்கட்டுகளாய் மாற்றி, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். எனவே சிறந்த கல்வி நிலையம் பற்றிய கனவை மனதில் சுமந்துள்ள மாணவர்கள் அக்கல்லூரியில் தங்களின் கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்குக் கிடைக்கும் பாடத்தில் சேருவதில் தவறில்லை. சிலர், இந்தக் கல்லூரியில், இந்தப் பாடம்தான் படிப்பேன் என்று முடிவு செய்திருப்பின் மிகவும் நல்லது. அவ்வாறே இடம் கிடைப்பின் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளலாம்.
எதிர்காலத் திட்டம்
மூன்றவதாக, பிஇ முடித்தபின் என்ன செய்யப் போகிறீர்கள் என ஒரு தீர்க்கமான முடிவை இப்போதே எடுத்திருப்பின் அதற்கேற்ப பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்காலத் திட்டம் இவ்வாறு இருக்கலாம்: (1) பிஇ படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்வது. (2) உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தொடர்ந்து மேல்படிப்புப் படிப்பது. (3) சொந்தத் தொழில் தொடங்குவது.
(1) வேலைக்குச் செல்ல விரும்புவோர்
படித்து முடித்தவுடன் சிறந்த நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர விரும்புகிறவர்கள் இன்றைய சூழலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் எடுத்துப் படிப்பதே சிறந்தது. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காது என்கிற தவறான கருத்தின் அடிப்படையில், அண்ணா பல்கலைக் கழகத்திலேயே கம்ப்யூட்டர் பிரிவில் இடம் கிடைக்க வாய்ப்பிருந்தும், அதைவிடுத்து, வேறொரு கல்லூரியில் இசிஇ, இஇஇ அல்லது மெக்கானிக்கல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது மிகமிகத் தவறான முடிவாகும்.
கோவை பிஎஸ்ஜி டெக் கல்லூரியில் ஆண்டுதோறும் கேம்பஸ் இன்டர்வியூவில் முன்னணிக் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மிக அதிகமான அளவில் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன. கேம்பஸ் இன்டர்வியூ குறைந்துபோன கடந்த ஆண்டில்கூட (2001) நூற்றுக்கணக்கான பிஎஸ்ஜி டெக் மாணவர்கள் சிறந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் அதே நிறுவனங்கள் அங்கே முகாம் இட்டுள்ளன. இத்தகைய கேம்பஸ் இன்டர்வியூக்களில், முன்னணி நிறுவனங்கள் முதலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பர். அதற்கு அடுத்தபடியாகத்தான் இசிஇ, இஇஇ படித்தவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். எந்த ஆண்டிலும் எந்தக் கல்லூரியிலும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் கம்ப்யூட்டர் படித்தவர்களைவிடப் பிற பாடங்கள் படித்தவர்கள் அதிகமான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வரலாறில்லை.
எனவே படித்து முடித்தவுடன் ஒரு சிறந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்புப் பெற விரும்பும் ஒருவர், கோவை பிஎஸ்ஜி டெக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இடம் இருந்தும் அதைவிடுத்து அடுத்த தரத்திலுள்ள கல்லூரிகளில் இசிஇ / இஇஇ எடுத்துப் படிப்பது அறியாமையில் எடுக்கப்படும் அபத்தமான முடிவாகும்.
இனி வரப்போகும் காலங்களில் கம்ப்யூட்டர் துறையில் மிக அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகவே வாய்ப்பிருக்கிறது. எனவே கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைக்க நினைக்கும் அறிவாளி மாணவர்கள் பயமின்றித் தாராளமாகக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பையே தேர்வு செய்யலாம். அதைவிடுத்து, கம்ப்யூட்டர் படிப்புக்கு இனி மதிப்பில்லை என்கிற தவறான கருத்தின் அடிப்படையில் இசிஇ / இஇஇ எடுத்துப் படிப்பது எவ்விதத்திலும் புத்திசாலித்தனமாகாது.
இன்னொரு வேடிக்கையான வாதத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். "பிஇ-யில் இசிஇ, இஇஇ எடுத்துப் படிப்பவர்கள் வெளியில் கம்ப்யூட்டர் பாடத்தைப் படித்துக் கொள்ளலாம். ஆனால் பிஇ-யில் கம்ப்யூட்டர் பாடம் படிப்பவர்கள் வெளியில் இசிஇ / இஇஇ படிக்க முடியாது" என்பது அவர்களின் வாதம். இந்த வாதத்தில் இரண்டு பிழைகள் உள்ளன:
(1) பிஇ-யில் இசிஇ / இஇஇ படிப்பவர்கள், பிஇ-யில் கம்ப்யூட்டர் படித்தவர்களோடு போட்டியிட்டுக் கம்ப்யூட்டர் துறையில் நுழையும் ஆசையிலேயே வெளியில் கம்ப்யூட்டர் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவ்வாறு வெளியில் கம்ப்யூட்டர் படித்துவிட்டாலே அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும் எனில், பிஇ-யில் நேரடியாகக் கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடுமா? மேலும் இசிஇ / இஇஇ படித்தவர்கள் வேலைவாய்ப்பைத் தேடும்போது தங்களுக்கும் கம்ப்யூட்டர் தெரியும் என்று காட்டிக் கொள்ளவே வெளியில் பணம் செலவழித்துக் கம்ப்யூட்டர் பற்றி ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பிஇ-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் வேலை தேடும்போது, தங்களுக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் தெரியும் என்று காட்டிக் கொள்ள வேண்டிய தேவை எதுவும் இருக்கிறதா? பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் வெளியில் எதற்காக எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படிக்க வேண்டும்? வேலைக்கு ஆள் எடுக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் வெளியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனவா? பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் தேவையான அளவு எலெக்ட்ரானிக்ஸ் அறிவைத் தங்களது பாடத்திட்டத்திலேயே கற்று விடுகிறார்கள். ஆனால் இசிஇ / இஇஇ படிப்பவர்கள் தேவையான அளவு கம்ப்யூட்டர் அறிவைத் தமது பாடத் திட்டத்திலேயே பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது.
(2) வெளியில் கம்ப்யூட்டர் படித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்களே, பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸில் படிக்கும் பாடங்களையா வெளியில் சொல்லித் தருகிறார்கள்? வெளியில் கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட்டுகளில் விண்டோஸ், ஆஃபிஸ், டாட்நெட், ஜாவா, ஆரக்கிள், சி, சி++ போன்ற பாடங்களைத்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவர்கள் தங்கள் பாடத்திட்டத்தில் இவற்றைத்தான் படிக்கிறார்களா? சொல்லப்போனால் இவற்றுள் பல பாடங்கள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் கிடையாது. பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டம் வெளியில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை மட்டும் கொண்டதல்ல. பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்தில் கற்றுத் தரப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ், டிஸ்ட்ரிப்யூட்டடு ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ், சாஃப்ட்வேர் எஞ்சினியரிங், ஆப்ஜெக்ட் ஓரியன்டடு அனலைசிஸ் அண்ட் டிசைன், டேட்டா ஸ்ட்ரக்சர், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் ஆர்க்கிடக்சர், பேரலல் பிராசஸிங், கம்ப்பைலர் கன்ஸ்ட்ரக்ஷன், டிஜிட்டல் சிக்னல் பிராசசிங், டேட்டாபேஸ் சிஸ்டம்ஸ், டிஸ்ட்ரிபியூட்டடு டேட்டாபேஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ் அண்டு டேட்டா கம்யூனிகேஷன் ஆகிய எந்தப் பாடத்தையும் வெளியில் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் கற்றுக் கொள்ள முடியாது. மேற்கண்ட பாடங்கள் ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியருக்குத் தேவையான முழுமையான அறிவை வழங்குகின்றன. அப்படி இருக்கையில் இசிஇ-யைக் கல்லூரியில் படித்துக் கொள்ளலாம், கம்ப்யூட்டர் சயின்ஸை வெளியில் படித்துக் கொள்ளலாம் எனக் கூறுவது சிறுபிள்ளைத் தனமான வாதமாகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்போது, கல்லூரியிலும் கடினமான பாடத்தை எடுத்துப் படித்துக் கொண்டு, வெளியிலும் ஏராளமான பணம் செலவழித்து வேறு பாடத்தையும் படிக்க வேண்டிய தேவை என்ன? எதற்காக இரட்டைச் சுமை?
எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரிக்கல் படித்தால் அந்தத் துறையிலும் வேலைக்குப் போகலாம். கம்ப்யூட்டர் துறையிலும் வேலை கிடைக்கும். ஆக கம்ப்யூட்டர் படித்தவர்களைவிடக் கூடுதலான வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கருதுவாரும் உண்டு. காலகாலமாய் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவிலான பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் கம்ப்யூட்டர் துறையில் உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளோடு ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை மிகமிகக் குறைவே ஆகும். மேலும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றுச் சிறந்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ள மாணவர்கள் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் படித்தாலும் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அவற்றைத் தேர்ந்தெடுத்து, மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான் போன்ற கம்ப்யூட்டர் துறையின் முன்னணி நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்களில் கம்ப்யூட்டர் படிப்புப் படித்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பர். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் படித்தவர்களை இன்டர்வியூவுக்கு அழைப்பதுகூட இல்லை. எனவே அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையும் வளர்ந்துவரும் துறைதான். மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் அந்தக் காலத்தில் பத்தாயிரம் தொலைபேசிகளைக் கவனித்துக் கொள்ள ஆயிரம்பேர் தேவைப்பட்டனர். இப்போது பத்துப்பேர் போதும் என்றாகிவிட்டது. இந்திய அரசின் தொலைபேசித் துறையில் வேலைக்கு ஆள் எடுப்பதே அபூர்வம். தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆள் எடுக்கும் விளம்பரங்களை நாம் பார்த்ததே இல்லை. கம்யூனிகேஷன் துறை வளர்ந்துவரும் வேகத்துக்கு ஏற்ப அத்துறைக்குத் தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அத்துறையில் வேலைவாய்ப்பு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கம்ப்யூட்டர் துறை இதற்கு நேர்மாறானது. இத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வருகின்றன. அன்றைக்கு சி-மொழியை ஒருவர் உருவாக்கி இருவர் வளர்த்தனர். சி++ மொழியை ஒருவர் உருவாக்கி இருபது பேர் வளர்த்தனர். அன்றைக்கு பேசிக் மொழியை இருவர் உருவாக்க, இன்றைக்கு விசுவல் பேசிக் உருவாக்கத்தில் இரண்டாயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒருவரே உருவாக்கினார். இன்றைக்கு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதில் பல்லாயிரக் கணக்கான புரோகிராமர்கள் இரவு பகலாய் ஈடுபட்டுள்ளனர். அன்றைக்குக் கம்ப்யூட்டர் துறையில் நூறுபேர் ஈடுபட்டிருந்தனர். இன்றைக்கோ ஆண்டுதோறும் நூறாயிரம் பேருக்கு மேலாகப் புதிதாய் நுழைகின்றனர். அந்த அளவுக்குக் கம்ப்யூட்டர் துறை வேலைவாய்ப்புகளை நல்கி வருகிறது. இனிவரும் காலங்களில் இன்னும் பல நூறாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது.
அன்றைக்கு நான்கே அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரை வலம் வந்தன. இன்றைக்கு நாலாயிரத்துக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்கள் நடைமுறையில் உள்ளன. நாளைக்கு மனிதன் அனைத்துப் பணிகளுக்கும் கம்ப்யூட்டரைத்தான் நம்பியிருக்கப் போகிறான். இன்னும் கம்ப்யூட்டரையே அறிமுகப்படுத்தாத அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இருபது சதவீத அலுவலகப் பணிகள்கூடக் கம்ப்யூட்டர் மயமாக்கப்படவில்லை. வருங்காலத்தில் அனைத்து நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் ஏன் அனைத்து வீடுகளிலும்கூடக் கம்ப்யூட்டர் பரவத்தான் போகிறது. இப்போது இருக்கும் எண்ணிக்கை குறைந்துபோக வாய்ப்பில்லை. கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்தவொரு நிறுவனமும் வருங்காலத்தில் அதைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு நோட்டுப் புத்தகங்களுக்குத் திரும்பப் போவதில்லை. எனவே, இன்னும் பல ஆண்டுகளுக்குக் கம்ப்யூட்டர் துறையில் நாளுக்கு நாள் புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விகிதம் வேறுபடலாம். ஆனால், ஒருநாளும் குறைந்து போக வாய்ப்பே இல்லை.
கம்ப்யூட்டர் பற்றிய ஒரு விஷயத்தை மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டுவோரும் புரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் அறிவியல் என்பது மற்ற அறிவியல்களிலிருந்து மாறுபட்டது ஆகும். கம்ப்யூட்டரை ஒரு ஸ்குரு டிரைவருக்கு ஒப்பிடலாம். ஸ்குரு டிரைவர் என்பது எந்த எந்திரத்தின் பாகமும் அல்ல. ஆனால் ஸ்குரு டிரைவர் இல்லாமல் எந்த எந்திரத்தையும் பராமரிக்க முடியாது. அனைத்துவகை எந்திரங்களையும் சிறப்பாகப் பராமரிக்க ஸ்குரு டிரைவர் கட்டாயம் தேவை. அதுபோலத்தான் எந்தத் தொழில்நுட்பமும் முன்னேற்றம் பெறக் கம்ப்யூட்டரின் உதவி கட்டாயம் தேவை. அதுபோலவே எந்த அறிவியலும் வருங்காலத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் ஏதோ ஒருவகையிலான துணை கொண்டுதான் வளர்ச்சி பெறும். கம்ப்யூட்டர் அறிவியல் அனைத்து அறிவியல் துறைகளுக்கும் ஆதாரமாக விளங்கும். பயோடெக்னாலஜி, பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ், ஜெனிடிக்ஸ் உட்படப் புதிய தொழில்நுட்பத் துறைகள் எதுவாயினும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன்தான் வளர்ச்சி பெறும்.
(2) மேற்படிப்புப் படிக்க விரும்புவோர்
பிஇ படித்து முடித்தபின் வேலைக்குப் போவதில் விருப்பமில்லை. தேவையும் இல்லை. GATE போன்ற போட்டித் தேர்வுகள் எழுதி நம் நாட்டிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் எம்டெக் அல்லது எம்இ படிக்க வேண்டும்; அதன்பிறகு சிறந்த வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் அல்லது ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் பிஇ-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துப் படிப்பதைவிட இசிஇ, இஇஇ படிப்பைத் தேர்வு செய்யலாம். எம்டெக் படிப்பில் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் தொடர்பான சிறப்புப் பிரிவுகளில் படிப்பைத் தொடரலாம். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் மேற்படிப்புகளுக்கு பிஇ-யில் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பு சிறந்த அடித்தளமாக அமையும்.
பிஇ முடித்தபின் ஜிஆர்இ, டோஃபல் போன்ற தேர்வுகளை எழுதி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் எம்எஸ், பிஎச்டி போன்ற மேற்படிப்புப் படிக்க நினைப்பவர்கள் எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் இசிஇ, இஇஇ, அல்லது மெக்கானிக்கல் எடுத்துப் படிக்கலாம். இப்போதும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் எம்எஸ் படிப்பில் மெக்கானிக்கலுக்குச் சிறந்த செல்வாக்கு உள்ளது. கம்ப்யூட்டர் பாடத்தைவிட எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், இன்னும் சில அரிய தொழில்நுட்பப் படிப்புகளுக்கு (பயோடெக்னாலஜி, மெடிசினில் எஞ்சினியரிங்) அமெரிக்காவில் சிறந்த பல்கலைக் கழகங்களில் ஸ்காலர்ஷிப்போடு இடம் கிடைக்கிறது.
பிஇ முடித்தபின் உல்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எம்பிஏ படித்துவிட்டுச் சிறந்த வேலையில் அமர நினைப்பவர்கள் மேற்கண்ட பாடங்களைவிட இன்டஸ்ட்ரியல் அல்லது புரொடக்ஷன் தொடர்பான பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது நல்லது.
டாக்டராகப் போக விரும்பி வேறு வழியில்லாமல் எஞ்சினியரிங் படிக்க நேர்ந்தவர்கள் பயோடெக்னாலஜி, பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ், மெடிசினல் எஞ்சினியரிங், கெமிக்கல் எஞ்சினியரிங் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். தொடர்ந்து அதில் மேற்படிப்புப் படிப்பின் நல்லது.
பிஇ முடித்தபின் ஐஏஎஸ், ஐஎஃப் எஸ், ஐபீஎஸ் போன்ற பணிகளில் அமர விரும்புவோர் ஏதோ ஒரு கல்லூரியில் கல்லூரியில் எளிதான பாடத்தை எடுத்துப் படிக்கலாம். பிஇ படிக்கும்போதே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம்.
(3) சுயதொழில் செய்ய விரும்புவோர்
பிஇ முடித்தபின் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இஇஇ, மெக்கானிக்கல், சிவில், புரொடக்ஷன் எஞ்சினியரிங் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இத்துறைகளில் தொழில் தொடங்க வங்கிகள் தாராளமாகக் கடன் உதவிகளை வழங்குகின்றன. அரசும் ஆதரவு தருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துப் படிப்பவர்களும் சுயதொழில் தொடங்கலாம். ஆனால் போட்டி அதிகம். பெரிய அளவில் தொடங்குபவர்களே ஏற்ற இறக்கங்களுக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியும்.
தேர்தல் அலைபோல் தேர்வு செய்யலாமா?
பிஇ படிப்புக்கான கவுன்சிலிங்கில் மாணவர்கள் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் பாங்கு நம்நாட்டு மக்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலில் ஓட்டுப் போடுவது மாதிரி ஆகிவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் ஓர் அலை வீசும். அதன்படி இந்தத் தேர்தலில் இவருக்கு, அடுத்த தேர்தலில் அவருக்கு என மக்கள் உணர்ச்சி வசப்பட்டு ஒரேயடியாய்ச் சாய்ந்துவிடுவர். அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவெடுப்பதில்லை. படித்துச் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களும், அவர்கள் நலனில் கண்ணும் கருத்துமாய் அக்கறை காட்டும் பெற்றோரும், ஆசிரியர்களும்கூடக் காரண காரியங்களை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுக்காமல், ஏதோ காற்றோடு வந்து காதில் விழுகிற ஆதாரபூர்வமற்ற செய்திகளின் அடிப்படையில் முடிவெடுப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், இந்த ஆண்டு இசிஇ, அடுத்த ஆண்டு மெக்கானிக்கல் என்று ஒரேயடியாய்ச் சாய்ந்துவிடும் அளவுக்கு வேலைவாய்ப்பு நிலைமையில் ஆண்டுக்கு ஆண்டு அதிரடி மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. கடந்த ஆண்டு (2001) கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் அதற்கு முந்தைய ஆண்டைவிடச் சரிவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதே வேளையில் அந்தச் சரிவு மற்ற படிப்புப் படித்தவர்களுக்கும் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. சென்ற ஆண்டு இசிஇ / இஇஇ படித்த அனைவரையும் கியூவில் நிற்க வைத்து ஒருவர் விடாமல் வேலைக்கு எடுத்துக் கொண்டார்களா? கம்ப்யூட்டர் படித்தவர்களை மட்டும் விட்டுவிட்டார்களா? கம்ப்யூட்டர் படித்தவர்களைவிட மற்ற படிப்புப் படித்தவர்களுக்கு மிகவும் குறைவாகவே வேலை கிடைத்திருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.மேலும் இன்னொன்றையும் மறந்துவிடக் கூடாது. இந்த ஆண்டு பிஇ-யில் சேருபவர்கள் இன்னும் நான்காண்டுகள் கழித்தே வேலைக்குச் செல்லப் போகின்றனர். எனவே அவர்கள் கடந்த ஆண்டு இருந்த நிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. நான்கு ஆண்டுகள் கழித்து நிலைமை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் படிப்புக்கு இப்போது (2002) மதிப்பில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும். அமெரிக்க அரசின் பொருளாதாரக் கொள்கை மற்றும் செப்டம்பர் 11 சம்பவம் காரணமாக, கம்ப்யூட்டர் துறையில் குறிப்பாக சாஃப்ட்வேர் துறையில் அதிலும் குறிப்பாக டாட்காம் பிரிவில் கடந்த ஆண்டு (2001) சுணக்கம் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கம்ப்யூட்டர் துறையில் சாஃப்ட்வேர் பொறியாளர்களுக்கான தேவை மிகைப்படுத்தப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் தொழில்போட்டி காரணமாகத் தேவைக்கும் அதிகமானவர்களை முன்கூட்டியே வேலைக்கு எடுத்து வைத்துக் கொண்டதும் இன்றைய நிலைக்குக் காரணம். மற்றபடி கம்ப்யூட்டர் துறையில் உண்மையான தேவை என்பது எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
[அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார அமைப்பு எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேக்கநிலையைச் (Recession) சந்திக்கும் என்பது ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட விதியாகும். அத்தகைய பொருளாதாரத் தேக்கநிலை அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நாடுகளையும் தொழில்துறைகளையும் தற்காலிகமாகப் பாதிக்கவே செய்யும். இத்தகைய பாதிப்பு கம்ப்யூட்டர் துறைக்கு மட்டுமல்ல அனைத்துத் துறைக்கும் பொருந்தும் என்பதை மறந்துவிடக் கூடாது].
கம்ப்யூட்டர் துறையில் சென்ற ஆண்டில் இருந்த சுணக்க நிலை இந்த ஆண்டு (2002) ஓரளவு மாறியிருக்கிறது. அடுத்த ஆண்டின் (2003) இறுதிக்குள் பழைய நிலை திரும்பும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வரப்போகும் ஆண்டுகளில் இந்தியாவின் சாஃப்ட்வேர் துறையில் உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருமளவு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக சர்வேக்கள் கூறுகின்றன. எனவே வரும் காலங்களில் கம்ப்யூட்டர் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன. 2005-ஆம் ஆண்டில் கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவும். தகுதியான ஆள் கிடைக்காமல் 5 லட்சம் பதவிகள் காலியாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
சரியான முடிவு எது?
"கம்ப்யூட்டர் படிப்பில் எனக்கு ஆர்வமில்லை. அதைவிட எனக்கு இசிஇ படிக்கவே அதிக ஆர்வமுள்ளது. எனவே இசிஇ படிப்பைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்" என்கிற முடிவு சரியானது. "கம்ப்யூட்டர் படித்தவர்களைவிட இசிஇ படித்தவர்களுக்குத்தான் உடனே வேலை கிடைக்கிறது. எனவே இசிஇ படிக்கப் போகிறேன்" என்கிற நிலைபாடும் சரியானதே (அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவினால்). ஆனால், "கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே இசிஇ படிக்கப் போகிறேன்" என்பது சரியான முடிவாகாது. ["நீ முட்டாள். எனவே நான் அறிவாளி" என்பது சரியான தர்க்கமுறை ஆகுமா?]. கம்ப்யூட்டர் படித்தவர்களைவிட இசிஇ / இஇஇ படித்தவர்களுக்குத்தான் அதிகமாக வேலை கிடைக்கிறது என்கிற நிலை நிச்சயமாக இப்போது இல்லை. இனி நான்காண்டு கழித்தும் அப்படி இருக்க வாய்ப்பில்லை.
அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் யார்யாரோ சொன்னார்கள் என்பதற்காக அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கு விருப்பமான பாடத்துக்கு முக்கியத்துவம் தாருங்கள். சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். வேலையா, மேற்படிப்பா, சுயதொழிலா என்கிற எதிர்காலத் திட்டத்தையும் மனதில் கொண்டு முடிவெடுங்கள். மேலும் இன்றைய உலகின் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கையும் புரிந்து கொண்டு, துறை வல்லுநர்களின் ஆலோசனைகளையும் பெற்று, சரியான கல்லூரியில் சரியான பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்.
பாடத்தைத் தேர்வு செய்து கல்லூரியில் சேர்வதோடு கடமை முடிந்துவிடுவதில்லை. பிஇ படித்து முடித்துவிட்டாலே (எந்தப் பாடம் எடுத்துப் படித்தாலும்) வேலை கிடைத்துவிடாது. வேலைவாய்ப்புக்குரிய தகுதியையும் (Employability) வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏதோ நானும் பிஇ / பிடெக் படித்தேன் என்று பத்தோடு பதினொன்றாகப் படித்து முடிப்பதில் பயனில்லை. தனித்து நிற்க வேண்டும் என்கிற தாக வெறியோடு, சாதனை படைக்க வேண்டும் என்கிற தணியாத ஆர்வத்தோடு, கருமமே கண்ணாயிருந்து, கடும் உழைப்பினை மேற்கொண்டு, உங்கள் தகுதியையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.
[2002 ஜூலை 24 தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியான கட்டுரை. இக்கட்டுரை தனிப் பிரசுரமாக அச்சிடப்பட்டு, அவ்வாண்டு அண்ணா பல்கலை மையத்தில் எஞ்சினியரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய சூழலுக்கும் பொருந்துவதாகவே உள்ளன. அவ்வாண்டு இக்கட்டுரையைப் படித்துப் பலன் பெற்ற பல மாணவர்கள், பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இக்கட்டுரை இப்போது இணையத்தில் வெளியிடப்படுகிறது. இதிலுள்ள ஆலோசனைகளுள் சில அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கானவை எனினும் பெரும்பாலான ஆலோசனைகள் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்புடையவையே.]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment