Wednesday, August 11, 2010

ஈழக்கேள்விக்கு விடை சொல்லும் பச்சை என்கிற காத்து திரைப்படம்















"தமிழு.." மற்றும் "வதை" ஆகிய குரும்படங்களால் பரவலான வரவேற்பை  பெற்றவர் கீரா. ப‌ல சிறு கதைகளைப் படைத்தவர். இவர் தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழர் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பச்சை என்கிற காத்துப் அடத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கும் அவரைச் சந்தித்தோம். உற்சாகத்துடன் பேசினார்.

குரும்படம்

"பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். ஒரு பாலியல் தொழிலாளியின் நிஜ வாழ்க்கையை "தமிழு" என்ற குரும்படமாக்கினேன். அது போலவே ஈழத்தமிழ்பெண் ஒருத்தியின் கதையை "வதை" குரும்படமாக உருவாக்கினேன். இரண்டு குரும்படங்களும் எனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. அதுதான் தற்போது நான் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.

பச்சை என்கிற காத்து

திருச்சி அருகில் மணப்பாறையில் வாழ்ந்த ஒரு அரசியல் தொண்டனின்  வாழ்க்கையில் ஒருநாளில் நடந்த‌ நிகழ்வுகளைத்தான் திரைக்கதையாக்கி பச்சை என்கிற காத்து என்ற படமாக்கி இருக்கிறேன். போலித்தனமான அரசியலால் தனது வாழ்க்கையை அழித்துக்கொண்ட ஒரு சாதாரண தொண்டனின் கதையைத்தான் படமாகப் படைத்திருக்கிறேன்.

வாசகர்

எனது உதவி இயக்குநர் வாசகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். புதிய இசையமைப்பாளர் இசையில் பல வித்தைகளைச் செய்து இருக்கிறார். எனது தயாரிப்பாளர் அசோக் தனது கருத்துக்களைத் திணிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் நிறையப் பேர் வந்தால் தமிழில் நல்ல படங்கள் உருவாகும்.

பதில்

தமிழ் ஈழத்தின் தேசியத்தலைவர் பிரபாகரனின் இருப்பு பற்றிய கேள்விகளுக்கான பதில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. " தீயே தீயே" மற்றும் "அண்ணன் வாரான்" ஆகிய இரு பாடல்களும் அக்கேள்விக்கு பதில் கூறுவதாக அமையும். ஈழத்தமிழ் பெண் ஒருவரையும் அறிமுகம் செய்துள்ளேன். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட அரசியலில் இருந்து வேறுபட்டதாக பச்சை என்கிற காத்து படம் இருக்கிறது.

பெண்

இந்தப்படத்தில் மட்டுமில்லாமல் எந்தப்படத்திலும் தமிழ்ப் பெண்கள்தான்  நடிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால் பல முயற்சிகள் செய்தும் தமிழ்ப் பெண்கள் யாரும் நடிக்க முன் வராத‌தால் சேர நிலத்துப் பெண்ணை நடிக்க வைத்துள்ளேன்.

கற்பு

தமிழ்ப்பெண்களிடம் சினிமாத்துறையைப் பற்றிய தவறான கருத்துக்கள் மிகுதியாக இருப்பதால்தான் நடிப்பதற்க்கு தயங்குகிறார்கள். உண்மையில் அவர்கள் நினைப்பதைப்போல் சினிமாத்துறையில் தவறாக எதுவும் கிடையாது. நடிப்பதும் அலுவலம் சென்று வருவது போல ஒரு வேலைதான்.  தமிழ்ப் பெண்களின் மனதில் கற்பு பற்றிய தவறான கருத்துக்கள் ஆழமாகப் பதிந்து இருப்பதும் ஒரு காரணம் அதனால்தான் தயங்குகிறார்கள்" என்றார் கீரா.

No comments:

Post a Comment